Shadow

இங்க நான் தான் கிங்கு விமர்சனம்

கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வெற்றிவேல், ஜமீன் வீட்டில் பெண் எடுக்கிறார். தான் சம்பந்தம் செய்யவுள்ளது திவாலான ஜமீன் எனத் தெரியாமல், கல்யாணம் முடிந்ததும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். ஏமாற்றத்துடனே தன் வாழ்க்கையைத் தொடரும் வெற்றிவேலின் வீட்டில், சென்னைக்கு வெடிகுண்டு வைக்க வரும் பயங்கரவாதி ஒருவன் எதிர்பாராதவிதமாக இறந்து விடுகிறான். பிறகு என்னானது என்பதே படத்தின் கதை.

ஜமீன் விஜயகுமாராகத் தம்பி ராமையா அறிமுகமானதில் இருந்து படத்தின் கலகலப்பு இரட்டிப்பாகிறது. படத்தினைத் தாங்கும் கதாபாத்திரத்தில் பிரமாதப்படுத்தியுள்ளார். அவரது மகனாக நடித்துள்ள பாலசரவணன், சிற்சில காட்சிகளில் மட்டும் அசத்தியுள்ளார். ஆளுநர் அலுவலகத்தில், சந்தானம் சமாளிக்கும் பொழுது, குழப்பத்துடன் தரும் ரியாக்ஷங்களில் ரசிக்க வைக்கிறார்.

வெற்றிவேலின் மனைவி தேன்மொழி பாத்திரத்தில், பிரியாலயா நாயகியாக அறிமுகமாகியுள்ளார். தந்தை, தம்பியின் அட்டாகாசங்களால் கணவன் முன் தர்மசங்கடப்படுபவராக அறிமுகமாகி, கொலைப்பழியை சாமர்த்தியமாக வேறு பெண் மீது போட்டு நகைச்சுவைக்கும் உதவியுள்ளார்.

வெற்றிவேலாக சந்தானம் நடித்துள்ளார். எதிரிலுள்ள கதாபாத்திரங்களின் வார்த்தைக்கு வார்த்தை கவுன்ட்டர் தரும் சந்தானத்தை இப்படத்தில் தேவையான அளவுக்கே வாயைத் திறந்துள்ளார். கதைக்குள் அவர் தன்னைப் பொருத்திக் கொள்வது மிக அரிதாகவே நிகழும். சிரித்த முகமாகப் பாதிப்படத்திற்கு மேல் வரும் விவேக் பிரசன்னா மிக அருமையான தேற்வு.

இந்தியா பாகிஸ்தான் படத்தை இயக்கிய ஆனந்த் நாராயண் இப்படத்தை இயக்கியுள்ளார்.பயங்கரவாதிகளாக வரும் வில்லன் குழுவை நகைச்சுவைக்கும் பயன்படுத்தாமல், சீரியஸான வில்லன்களாகவும் காட்டாமல் விட்டுவிடுகிறார். ரீல் ரோலக்ஸாக லொள்ளு சபா மாறன், செக்யூரிட்டி சேஷு, பாடி பலராமாக முனீஷ்காந்த், அவரது அசிஸ்டென்ட்டாக கூல் சுரேஷ், லொள்ளு சபா சுவாமிநாதன் என பலரும் க்ளைமாக்ஸில் வருகின்றனர். சுந்தர். சி படம் போல வயிற்றைப் பதம் பார்க்கும் அட்டகாசமான க்ளைமாக்ஸிற்கு வாய்ப்பிருந்தும் தவறவிட்டுள்ளனர். படத்தின் முதற்பாதி நகைச்சுவைக் காட்சிகளுடன் ஒப்பிட்டால், இரண்டாம் பாதியில் சற்றே குறைவுதான். எனினும் முழுப்படமாகப் நல்லதொரு பொழுதுப்போக்குப் படமாகவும், நகைச்சுவைப் படமாகவும் ரசிக்க வைக்கிறது.