Shadow

Infinity விமர்சனம்

முதல் காட்சியில் ஒரு பெண் எரித்து கொல்லப்படுகிறாள். அவளின் பெற்றோர் புகார் அளிக்க இரு நாட்கள் கழித்து வர, அந்த இனிய நன்நாளில் மேலும் இரண்டு கொலைகள் விழுவதோடு, இந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டரும் கொல்லப்படுகிறார். வேறு வழியின்றி இந்த வழக்கு இரண்டே நாளில் சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்படுகிறது. சிபிஐ-ஆக வரும் நட்டி முதல்பாதி முழுக்க ஜீப்பில் சுற்றுவதும், கீழ்நிலை அதிகாரியா அல்லது பணியாளா என்று கூடத் தெரியாத ஒரு கதாபாத்திரத்திற்கு கட்டளைகள் பிறப்பிப்பதுமாக இருந்துவிட்டு, படத்தின் கடைசி பத்து நிமிடத்தில் இவர்கள் தான் குற்றவாளி என்று சிலரைச் சுட்டுக் கொல்கிறார். படம் முடிந்தது என்று நாம் நினைக்கும் போது, இவர்களுக்குப் பின்னால் இருந்த ஒரு மாபெரும் வில்லன் வந்து ஆட்டம் இனி தான் தொடங்கப் போகிறது என்று உண்மையாகவே நம்மை மிரட்ட, INFINITY என்னும் தலைப்புக்கு ஏற்றார் போல் பாகம் 2 என்று போட்டு படத்தை முடிக்கிறார்கள்.

சிபிஐ அதிகாரியாக நட்டி என்னும் நட்ராஜ் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட, நடந்திருக்கிறார், புல்லட் ஓட்டியிருக்கிறார், ஜீப் ஓட்டி இருக்கிறார், நாலு பேரை சுட்டுக் கொன்றிருக்கிறார் என்று சொல்வதே பொறுத்தமாக இருக்கும். படத்தின் நாயகனையே இப்படி சொல்ல வேண்டிய நிலைமை என்றால், நாலாந்திர கதாபாத்திரங்களையோ அவர்களின் நடிப்பையோ பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. சமீபத்தில் வந்த தண்டட்டி, பம்பர் போன்ற படங்களில் துணை நடிகர்கள் கூட தங்களின் இயல்பான நடிப்பால் படத்தைத் தூணாகத் தாங்கியிருந்தார்கள். ஆனால் இப்படத்திலோ நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதற்குரிய தகுதியினை ஒருவர் கூட பெறாமல் போனது பெருத்த ஏமாற்றம்.

சிபிஐ-யின் உயர் அதிகாரி பிரஸ் மீட்டில் சென்னையில் ஒரே நாளில் இரட்டைக் கொலை நடந்திருப்பதால், அதை விசாரிக்க சிபிஐ துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் நட்டியை நாங்கள் நியமிக்கிறோம் என்று பேட்டி கொடுத்த அடுத்த காட்சியில், ஜீப் ஓட்டிக் கொண்டே போனில் பேசும் நட்டி, ‘சென்னையில ரெட்டைகொலை நடந்த கேஸு, சிபிஐ-க்கு மாத்திட்டாங்க, நான் தான் அத விசாரிக்கப் போறேன். நீ வந்து என்னை நேர்ல பாரு அந்த கேஸ் சம்மந்தமா கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணனும்’ என்கிறார். மற்றொரு காட்சியில் கொலை நடந்த இடத்திற்கு போலீஸ் ஜீப் வருவது ஒரு ஷாட், வட்டாட்சியர் வண்டி வந்து நிற்பது ஒரு ஷாட், ஆம்புலன்ஸ் வந்து நிற்பது ஒரு ஷாட், மீடியா வண்டி வந்து நிற்பது ஒரு ஷாட். பின்னர் க்ரைம் ஸ்பாட்டுக்குள் நிற்கும் நட்டியைச் சுற்றி ஒரு ரவுண்ட் டிராலி ஷாட், மிக மிகப் பொறுமையாக. பின்னர் அவர் மெதுவாக நடந்து இறந்த உடலருகே அருகில் செல்கிறார். இவற்றையெல்லாம் எடிட்டர் ஃபாசில் வெட்டி எறிந்ததற்குப் பின்னர் எஞ்சியிருக்கும் காட்சிகள் மற்றும் ஷாட்டுகள். அப்படி என்றால் வெட்டி எறிந்தவை எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் சுவாரசியத்திற்காக ஒரு பெண்ணைக் கொன்று, ஒரு இரட்டைக் கொலையையும் நிகழ்த்தி, அதை விசாரித்த இன்ஸ்பெக்டரையும் கொன்றாகிவிட்டது. இனி இவற்றையெல்லாம் தொடர்புப்படுத்துவது போல் என்ன கதை சொல்லலாம் என்று யோசித்து இவர்கள் சொல்லியிருக்கும் ஏதோ ஒன்றை கதையென்றெல்லாம் சொல்லுவதற்கு இல்லை. கதையே இங்கு இல்லை என்றான பின்னர் திரைக்கதைக்கு என்ன வேலை?

இந்தக் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் காரணம் மிகப் புதியதாக இருக்க வேண்டும். பல படங்களில் பார்த்த விசயமாக இருக்கக்கூடாது என்று இயக்குநர் தன் குழுவினருடன் மிக ஆழமாக விவாதித்திருப்பார் போல் இருக்கிறது. அப்பொழுது இந்த இரத்த பிளாஸ்மா என்னும் கருவைத் தமிழ்த் திரையுலகில் நாகேஷ் திரையரங்கம் என்னும் படத்தைத் தவிர வேறு எந்தப் படத்திலும் பெரிதாகப் பயன்படுத்தியதில்லை. எனவே அதைப் பயன்படுத்திக் கொண்டால் புதுமையாக இருக்கும் என்று கண்டுபிடித்திருப்பார்கள் போலும்.

ஆக இரத்த பிளாஸ்மா, அனாதை இல்ல குழந்தைகள், இதற்கு மூளையாக செயல்படும் மருத்துவர் என்று ஒரு கதையைக் கோர்த்து, இந்தக் கதைக்கு சம்பந்தமே இல்லாமல், தங்கையின் நடத்தை, அநாதை குழந்தைகளில் ஒரு சிறுமி மீது பாசம், அவளை விட்டுச் சென்ற அவள் தகப்பன், இதைப் பற்றி தெரிந்தும் எழுதாத பத்திரிக்கைக்காரன், கண்டுகொள்ளாத போலீஸ் என்று மற்றொரு கதையைக் கண்டறிந்து இரண்டையும் குழப்பி, ஏதோவொன்றைத் திரையில் கொடுத்திருக்கிறார்கள்.

அதிலும் முனிஷ்காந்த் கதாபாத்திர வடிவமைப்பெல்லாம் இம்சை ரகம். பாதி படத்தில் அவராகவே பேசிக் கொண்டும், நகைச்சுவை என்று எண்ணி எதையோ கதைத்துக் கொண்டிருப்பதால், ‘கடுப்பேற்றுகிறார் மை லார்ட்’ என்னும் மனநிலைக்குப் பார்வையாளர்களைக் கொண்டு செல்கிறார்.

மொத்தத்தில் இந்த INFINITY பார்வையாளனுக்கு ஒரு முடிவில்லாத் துயரம்.

– இன்பராஜா ராஜலிங்கம்