இது ஒரு கற்பனைக் கதை. ஆனால், இந்தக் கதையில் காட்டப்படும் டாக்குமென்ட்ரியில் நிகழ்வது போல் நடப்பதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ள மெத்தனமான நாடு இந்தியா என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. கடல்நீரில் கலந்த எண்ணெயை வாளியில் அள்ளும் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்த அரசாங்கம், கரை ஒதுங்கும் ஆபத்தை விளைவிக்கும் குண்டை, வெடிக்கும் குண்டு என ஒத்துக் கொள்வதற்கே அதன் வெட்டி கெளரவம் இடம் கொடுக்காது.
ஏன் உலகிற்கு இத்தனை குண்டுகள், இத்தனை உயிரிழுப்புகள் என்ற கேள்வியை மிக அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளது சடோகா சசாகியின் கதை. ஆனால், தினேஷ் வசமிருக்கும் குண்டு வெடித்து விடக் கூடாது என்ற பதைபதைப்பை ஏற்படுத்தத் தவறிவிடுகிறது படம். அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழிக்கும் ஆவல், தோழர் ரித்விகாவிற்கு அதிகமாக உள்ளதே தவிர, அதை வெடிக்கவிடாமல் செய்ய என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்றெல்லாம் அவர் யோசிப்பதில்லை. குண்டு கிடைத்தவுடன், அதை diffuse செய்வது பற்றி யோசிக்காமல், ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் குழ்மியிருக்கும் இடத்திற்கு அதைக் கொண்டு சேர்க்கப் பார்க்கிறார். அரசைக் குற்றவாளியாக்கி விடவேண்டும் என்ற ஒற்றை நோக்க க்ளைமேக்ஸை மட்டும் நோக்கி நகராமல், இந்தக் குண்டும் வெடித்து மக்கள் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற அக்கறை எவருக்குமே இல்லாதது மிகவும் துரதிர்ஷ்டம். என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
முனீஸ்காந்த் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தினேஷும் வழக்கம்போல் அசத்தியுள்ளார். அவருக்கும் ஆனந்திக்குமான காதலுக்கு எதிர்ப்பு ஏற்படுவது, வர்க்க வேறுபாடுகளாலா அல்லது சாதிய வேறுபாடுகளாலா என்ற கேள்விக்கு அழுத்தமான பதிலில்லை. ஆனால், அதியன் ஆதிரை எடுத்துக் கொண்ட களம் அவ்வளவு ஃப்ரெஷாக உள்ளது. அதன் மனிதர்களை நமக்கு நெருங்குவதற்கு பதில் அவர்களின் வாழ்வியலைக் கடத்த முற்படுகிறது. கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு, படத்தின் மிகப்பெரும் பலம். ஆனந்தி வீட்டை விட்டு வெளியேறுவதும், ஊர் திருவிழாவையும் இணைத்து யோசித்துள்ளது அழகான குறியீடு. தென்மாவின் இசையும், R.K.செல்வாவின் படத்தொகுப்பும் கச்சிதமாக அக்காட்சியில் கை கோர்த்துள்ளன.
அன்பைப் போதிக்கும், யாசிக்கும் படங்கள் அனைத்துமே கொண்டாட்டத்துக்குரியவை. ஆயுதமில்லாத உலகம் எனும் பிரம்மாண்டமான மாயையையும், பேராசையையும் முன்வைக்கிறது அதியன் ஆதிரையின் குண்டு. இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இரண்டாம் முறையும் அதகளப்படுத்தியுள்ளது.