வடச்சென்னையில் செவன்ஸ் எனப்படும் விதிமுறைகளைப் பின்பற்றாத கால் பந்தாட்டத்தில் கலந்து கொள்ள கதிர் ஆசைப்படுகிறார். அந்த ஆட்டத்திற்குப் பின்னால் இருக்கும் ஆபத்துகளையும், அதனால் நிகழ்ந்த சில பயங்கரங்களையும் கோச் எடுத்துரைக்கிறார். அதை மறுத்துரைத்து, ‘செவன்ஸ் ஆடுவேன்’ என்பதில் உறுதியாக நிற்கிறார். அதற்கான காரணமும், முடிவில் செவன்ஸில் கதிர் அணி எப்படி வெற்றி கொண்டது என்பது தான் ஜடா.
ஒரு படத்திற்குச் சிறந்த துவக்கம் மிக முக்கியம். அதை ஜடா இயக்குநர் குமரன் மிகச் சிறந்த முறையில் கையாண்டுள்ளார். நடிகர்களை வேலை வாங்கியதிலும் ஒரு தேர்ந்த இயக்குநராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். குறிப்பாக ஓவியர் ஸ்ரீதர் நடிப்பும், அவரது கதாபாத்திர வார்ப்பும் அத்தனை துல்லியம். கதிர் நடிப்பில் எமோஷ்னல் காட்சிகளில் மட்டும் பரியேறும் பெருமாள் பரியன் எட்டிப் பார்க்கிறார். மற்ற இடங்களில் எல்லாம் ஓ.கே. ரோஷினி என்ற பெயர் டைட்டில் கார்டில் வந்தது. அவர் தான் கதாநாயகியாம். பாடல்களைத் தவிர்த்துப் பார்த்தால் டைட்டில் கார்டில் வந்ததில் விடக் குறைவான நேரம் தான் வருகிறார். யோகிபாபு காமெடியில் குறிப்பிடும் படியாக ஒன்றுமில்லை.
செவன்ஸ் ஆடி ஜெயிப்பது தான் ஹீரோவின் நோக்கம் என்றால் அந்தப் பாதையில் மட்டுமே படம் பயணித்திருக்க வேண்டும். இடையில் பேய், காதல் என எங்கெங்கோ சென்று விடுகிறது.
கால்பந்தாட்ட காட்சிகளைப் படமாக்கிய விதம் அட்டகாசம். படத்தின் இன்னொரு அட்டகாசமான வொர்க் சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை, தரமாக அமைந்திருந்தது. ஒளிப்பதிவும் ஒரு தேர்ந்த நேர்த்தியைக் கொண்டுள்ளது. திரைக்கதையில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் ஜடா நம் கவனத்தை மொத்தமாக ஈர்த்திருப்பான்.
ஒருபடம் ரசிகனிடம் ஏற்படுத்தும் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாவிட்டாலும் பராவாயில்லை. நேர்மாறான பாதிப்பை ஏற்படுத்துவிடக்கூடாது. ஜடா அப்படியான அபாயத்தில் இருந்து ஜகா வாங்கி இருந்தாலும் எதிர்பார்ப்பை முழுமையாகப் பூர்த்தி செய்யவில்லை.