(Image Courtesy: Quora.com)
முந்தைய பகுதி: கர்ணன் துரியோதனன் நட்பு
மாவீரன் என்றால் ஏதோ சில தருணங்களில் மட்டும் நல்ல வித்தைகளைக் காட்டிவிட்டு, அல்லது வீரத்தைக் காட்டிவிடுவது அன்று. உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்போம்.
பெரும்பாலோர் கூறுவது கர்ணன் துரோணரிடம் பாடம் பயிலச் சென்ற போது அவனை குலம் காட்டி துரோணர் மறுத்தார் என்பது. எவ்வளவு அப்பட்டமான பொய்? கர்ணன் துரோணாச்சாரியாரின் மாணவர்களில் ஒருவன். துரோணர் வேண்டிய குருதட்சணை, துருபதனைச் சிறையெடுத்தலாகும். கவனிக்க, கர்ணன் இங்கே துரோணரின் மாணவனாக, கௌரவர்களின் பெரும்படையுடன் சென்று போரிட்டுப் புறமுதுகிட்டு வருகிறான். ஆனால் பாண்டவர்கள் ஐவராகச் சென்று துருபதனைச் சிறையெடுத்து வருகிறார்கள். ஆக, கர்ணன் வீரன் என்பது இங்கே அடிபட்டுவிட்டது. கூடவே துரோணர் வில் வித்தையை கர்ணனுக்கு சொல்லித் தர மறுத்தார் என்னும் பொய்யும் வெட்டவெளிச்சமாகிவிட்டது.
// Vaisampayana continued, ‘Hearing these words, the Kuru princes remained silent. But Arjuna, O king, vowed to accomplish it whatever it was. Drona then cheerfully clasped Arjuna to his bosom and took the scent of his head repeatedly, shedding tears of joy all the while. Then Drona endued with great prowess taught the sons of Pandu (the use of) many weapons both celestial and human. And, O bull of the Bharata race, many other princes also flocked to that best of Brahmanas for instruction in arms. The Vrishnis and the Andhakas, and princes from various lands, and the (adopted) son of Radha of the Suta caste, (Karna[HK1] ), all became pupils of Drona. But of them all, the Suta child Karna, from jealousy, frequently defied Arjuna, and supported by Duryodhana, used to disregard the Pandavas. Arjuna, however, from devotion to the science of arms, always stayed by the side of his preceptor, and in skill, strength of arms, and perseverance, excelled all (his class-fellows). Indeed, although the instruction the preceptor gave, was the same in the case of all, yet in lightness and skill Arjuna became the foremost of all his fellow-pupils. And Drona was convinced that none of his pupils would (at any time) be able to be equal to that son of Indra. //
சரி, அடுத்ததாக பாஞ்சாலி சுயம்வரத்தின் போது, வில்லை வளைத்து, திரௌபதியை வென்ற அருச்சுனனை, அதாவது பிராமணனாக உருமாறி இருக்கும் அருச்சுனனைப் போருக்கு அழைத்து அங்கேயும் கேவலமாகத் தோற்றுத் திரும்புகிறான்.
பாண்டவர்கள் வனத்தில் இருக்கும் போது, அவர்கள் படும் துயரைப் பார்த்து சந்தோஷப்பட, துரியோதனன் படை பரிவாரத்தோடு வந்து காட்டில் தங்குகிறான். அப்போது அங்கு இருக்கும் ஒரு கந்தர்வ பெண்ணை பலவந்தமாக அடைய முயல்கையில், துரியோதனை சித்திரசேனன் எனும் கந்தர்வன் சிறையெடுத்துச் செல்கிறான். அப்போது கர்ணன் கந்தர்வனிடம் போரிட்டு தோற்று தன் உயிரைக் காத்துக் கொள்ள ஓடிவிடுகிறான். பின்னர் துரியோதனனைக் காப்பாற்றுவது பாண்டவர்களே!
அடுத்து, விராட பர்வம். ஆநிரை கவர்ந்து வந்த போது அருச்சுனன் ஒருவனாக அத்தனை மகாரதர்களையும் வென்று ஆநிரைகளை மீட்டுச் செல்கிறான். அங்கே கர்ணன் தோற்று களத்தை விட்டுப் போய்விடுகிறான்.
ஆக, மாவீரன் என்ற சொல்லுக்கான அடையாளங்கள் கர்ணனிடம் இல்லை. கர்ணன் வீரன் இல்லை என்று சொல்லுவதற்கில்லை. சில சமயங்களில் அவனுடைய வில்லாண்மை உயர்ந்து நின்றது அதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், மாவீரன் என்று சொல்லத் தேவையான நிலைத்தன்மை (Consistency) அவனிடத்தில் இல்லை.
கர்ணன் பீஷ்மரால் வஞ்சிக்கப் பட்டு பத்து நாட்கள் போரிடாமல் தடுக்கப் பட்டான் என்னும் பொய்யையையும் பார்ப்போம்.
பீஷ்மர் காரண காரியங்களைக் கூறி அவனை அர்த்தரதனாக நியமிக்கிறார். அவன் மகாரதனாக தன்னை நிரூபிக்கவில்லை, சுயகர்வி. எதிரிகளின் பலத்தை சரியாக கணித்துச் செயல்படாமல் தன்னிச்சையாக செயல்படுபவன். இத்தனைக்கு மேலாக அவனுக்கு இரண்டு சாபங்களும் உண்டு. மகாரதன், தனித்துப் போரிடும் வல்லமைக் கொண்டவன். அர்த்தரதன் கூட்டத்தில் நின்று போரிடுபவன்.
பீஷ்மரும், துரோணரும், பாண்டவரின் படைகளை ஒரு மாத காலத்தில் அழிப்பேன் என்று சொல்லும் போது கர்ணன் ஐந்தே நாளில் முடிப்பேன் என்று வீரம் பேசுகிறான். ஆனால் நடந்தது என்ன?
//கர்ணன், தன்னால் ஐந்து {5} நாட்களில் அந்தச் சாதனையைச் செய்ய முடியும் என்று உறுதியளித்தான். கடலுக்குச் செல்பவளுடைய (கங்கையின்) மகன் {பீஷ்மர்}, சூதனின் மகனுடைய {கர்ணனின்} வார்த்தைகளைக் கேட்டு உரக்க சிரித்தபடி, “ஓ! ராதையின் மகனே {கர்ணா}, கணைகள், சங்கு, விற்கள் ஆகியவற்றுடன் கூடியவனும், வாசுதேவனைத் {கிருஷ்ணனைத்} தனது துணைவனாகக் கொண்டு மோதலுக்கு விரைந்து வருபவனுமான பார்த்தனுடன் {அர்ஜுனனுடன்} போரில் நீ மோதாத வரை நீ அப்படி நினைத்துக் கொள்வாயாக. இதற்கு மேலும் உன் விருப்பப்படி எதையும் சொல்ல இயன்றவன்தான் நீ” என்றார் {பீஷ்மர்}.//
பீஷ்மரின் கணக்கு தப்பவில்லை என்பதை கர்ணன் பத்து நாள் போருக்குப் பின் நிரூபித்துக் காட்டி இருக்கிறான். பதிமூன்றாம் நாள் போரில் இளம் பாலகன் அபிமன்யூவின் அம்புகளில் தோற்று, தற்காத்துக் கொள்ள களம் விட்டு ஓடுகிறான். அந்த சிறுவனை நேருக்கு நேர் நின்று வெல்ல இயலாமல் பின்னின்று அம்பெய்து வில்லின் நாணை அறுத்து வீரர்கள் செய்ய நாணும் செயலைச் செய்கிறான்.
பதினான்காம் நாள் போரில் சாத்யகியிடம் தோற்றுப் போகிறான். அதே நாளில் பீமனிடம் விற்போரில் பல முறை தோற்கிறான். பீமன் இவனுடன் போரிடும் அதே நேரத்தில் துரியோதனன் தம்பியர்களை கால்வாசியை முடித்துவிடுகிறான். பீமனால் அன்றே கர்ணனைக் கொன்றிருக்க முடியும். அருச்சுனனின் சபதம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால். ஆனால் அந்த சமயத்தில்தான் களைத்துத் திரும்பிச் செல்லும் பீமனை, தன் வில்லை அவன் கழுத்தில் மாட்டித் தகாத வார்த்தைகள் பேசி அவமதிக்கின்றான் தன்னை மாவீரனாகப் பாவித்துக் கொள்ளும் கர்ணன்.
//கர்ணனின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அக்கணைகளால் தாக்கப்பட்டவனும் வலிமைமிக்கவனுமான பீமன், கர்ணனின் இதயத்தை வேதனையால் நிறைக்கும்படி வானத்தில் எம்பி {கர்ணனின் தேரின் மேல்} குதித்தான்.(70) போரில் வெற்றியை விரும்பிய பீமனின் நடத்தையைக் கண்ட ராதையின் மகன் {கர்ணன்}, தேருக்குள் ஒளிந்து கொண்டு அவனை {பீமனை} ஏமாற்றினான்.(71) கலங்கிய {பயந்த} இதயத்துடன் கர்ணன் தேர்த்தட்டில் தன்னை மறைத்துக் கொண்டதைக் கண்ட பீமன், கர்ணனின் கொடிக்கம்பத்தைப் பிடித்துக் கொண்டு பூமியில் {தரையில் அவனுக்காகக்} காத்திருந்தான் [3].(72) கருடன் ஒரு பாம்பைக் கவர்ந்து செல்வதைப் போலவே கர்ணனை அவனது தேரில் இருந்து கவரச் சென்ற பீமனின் அந்த முயற்சியைக் குருக்கள் {கௌரவர்கள்} மற்றும் சாரணர்கள் அனைவரும் பாராட்டினர். பீமன் தன் தேரை இழந்து, தன் வில்லும் வெட்டப்பட்டிருந்தாலும், (உடைந்த) தன் தேரை விட்டு, தன் வகைக்கான {க்ஷத்திரியக்} கடமைகளை நோற்றுப் போரில் நிலையாக நின்றான்” {என்றான் சஞ்சயன்}.(73,74)//
//கர்ணனின் கடுஞ்சொற்களைக் கேட்டு உரக்கச் சிரித்த பீமசேனன், அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இவ்வார்த்தைகளை அவனிடம் {கர்ணனிடம்} சொன்னான்.(102) “ஓ! பொல்லாதவனே {கர்ணா}, என்னால் நீ மீண்டும் மீண்டும் வெல்லப்பட்டாய். இத்தகு வீணான தற்புகழ்ச்சியில் உன்னால் எவ்வாறு ஈடுபட முடிகிறது? பழங்காலத்தவர்கள் இவ்வுலகில் பெரும் இந்திரனின் வெற்றியையும் தோல்வியையும் கூடக் கண்டிருக்கின்றனர்.(103) ஓ! இழி பிறப்பு கொண்டவனே, வெறுங்கையால் தடகள {உடல்திறன்} மோதலில் {மல்யுத்தத்தில்} என்னுடன் ஈடுபடுவாயாக. பெரும் உடற்கட்டைக் கொண்ட வலிமைமிக்கக் கீசகனைக் கொன்றவாறே, மன்னர்கள் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும்போது நான் உன்னையும் கொல்வேன்” {என்றான் பீமன்}. (104)///
//பீமனின் நோக்கத்தைப் புரிந்து கொண்டவனும், நுண்ணறிவு கொண்ட மனிதர்களில் முதன்மையானவனுமான கர்ணன், வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அம்மோதலில் இருந்து விலகினான்.(105)//
//வலிமைமிக்கப் பீமனால் இவ்வாறு ஏவப்பட்ட அந்தக் கணை, இடியைப் போன்ற ஒலியை உண்டாக்கி, மலைகளையே துளைத்துச் செல்லும் வஜ்ரத்தைப் போல அந்தப் போரில் கர்ணனைத் துளைத்துச் சென்றது.(43) ஓ! குருகுலத்தைத் தழைக்கச் செய்பவரே {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் தாக்கப்பட்டவனும், (உமது படைகளின்) தலைவனுமான அந்தச் சூதன் மகன் {கர்ணன்}, உணர்வற்றவனாகக் கீழே தன் தேர்தட்டில் அமர்ந்தான். (44) அப்போது தன் உணர்வுகளை இழந்து விட்ட சூதன் மகனை {கர்ணனைக்} கண்ட மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்}, அந்தப் போர்க்கள ரத்தினத்தை {கர்ணனைத்} அந்தப் போரில் இருந்து தன் தேரில் வெளியே கொண்டு சென்றான்.(45) கர்ணனின் தோல்விக்குப் பிறகு, பீமசேனன், தானவர்களை முறியடிக்கும் இந்திரனைப் போல அந்தப் பரந்த தார்தராஷ்டிரப் படையை முறியடிக்கத் தொடங்கினான்” {என்றான் சஞ்சயன்}.(46)//
பின்பு போரில் மறுபடி பீமனால் தோற்கடிக்கப் பட்டு மயங்கி விழுந்த கர்ணனின் நாவைக் கத்தரிக்க பீமன் செல்லும் போது சல்லியனின் வேண்டுகோளால் பீமன் கர்ணனை விட்டுச் செல்கிறான். களத்தில் ஒரே ஒரு முறை அருச்சுனனை ஸ்தம்பிக்கச் செய்ய முடிந்ததே தவிர கர்ணனால் அருச்சுனனை வெல்ல முடியவில்லை. அதனால் தான் அருச்சுனன் விஜயன்; தோல்வியை அறியாதவன்; மாவீரன்.
கர்ணனும் நிச்சயமாக வீரன் தான். ஆனால் மாவீரனா?
தொடரும்..
– ஐயப்பன் கிருஷ்ணன்
(அடுத்த பகுதி: கர்ணன் கொடையாளியா?)