Shadow

“ஜோதி – நம்பிக்கையை அளிக்கும் டீம்” | ஆர்.வி.உதயகுமார்

உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘ஜோதி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஃபோரம் மாலில் நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவரான R.K.செல்வமணி, செயலாளர் R.V.உதயகுமார், நடிகர் ரவி மரியா, இயக்குநர் நந்தா பெரியசாமி, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ஆகியோருடன் படக் குழுவினரும் கலந்து கொண்டனர்.

விழாவில், ‘ஜோதி’ படத்தில், பத்மபூஷன் KJ.ஜேசுதாஸ் பாடிய ‘அன்பின் வழி’, பல்ராம் பாடிய ‘ஆரிராரோ’, கார்த்திக் பாடிய ‘போவதெங்கே’ மற்றும் ‘ருத்ரம்’ ஆகிய பாடல்களை வெளியிட்டனர்.

மால் முழுவதும் நிறைந்திருந்த பார்வையாளர்கள் திரையிடப்பட்ட பாடல் காட்சிகளைக் கண்டு களித்து, கை தட்டி உற்சாகப்படுத்தினர்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளரான இயக்குநர் R.V.உதயகுமார், “திரைப்பட கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து இந்த ‘ஜோதி’ படத்தின் ஜோதியை ஏற்றியிருப்பது ரொம்ப சந்தோசமாக உள்ளது.

ஒரு படம் உருவாவது எவ்வளவு கஷ்டம் என்பது ‘ஊமை விழிகள்’ படம் முதற்கொண்டு பல படங்களில் பார்த்துள்ளேன். ‘ஊமை விழிகள்’ படத்தை ஏழு நாட்களில் படமாக்கத் திட்டமிட்டு நான்கு இயக்குநர்களைக் கொண்டு உருவாக்கினோம். அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தது திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு ஆஸ்தான நடிகரான கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.

ஒரு நண்பரை நம்பி ஒரு படத்தை எடுக்கும் பொறுப்பைக் கொடுத்து, அந்த நம்பிக்கை மாறாமல் ஒரு படத்தை எடுத்து அதை மிகப் பெரிய வெற்றிப் படமாக உருவாக்குவது திரைப்படக் கல்லூரி மாணவர்களால்தான் முடியும். அப்படி இந்த டீம் அமைந்திருக்கிறது. இந்த டீமைப் பார்க்கும்போது மீண்டும் நாங்கள் படங்களைத் தயாரித்து, இயக்கப் போகிறோம் என்பதை உறுதியுடன் சொல்கிறேன்” என்றார்.