ஜோ ஜான்ஸ்டனின் நேர்த்தியான இயக்கத்தில், 1995 ஆம் ஆண்டு ஜுமாஞ்சி எனும் திரைப்படம் வந்தது. அப்படத்தைப் பார்த்தவர்கள் யாரும் அந்தப் படம் தந்த அற்புதமான அனுபவத்தை மறந்திருக்க வாய்ப்பே இல்லை. போலீஸ் வாகனத்தை ஓட்டும் குரங்குகள், வீட்டுக்குள் வரும் வெள்ளம், சிங்கம், நெடுஞ்சாலையில் ஓடும் மிருகங்கள் என அந்தப் படம் பற்றி நினைத்தாலே ஓர் உற்சாகம் எழும். அதனால் தான் அப்படம் வசூலில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியிருந்தது.
க்றிஸ் வேன் ஆல்ஸ்பர்க், 1981-ஆம் ஆண்டு எழுதி வெளியாகிய குழந்தைகளுக்கான ஒரு நாவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த திரைப்படமது! அப்படம் வெளி வருவதற்கு சற்று முன்னர் இறந்து விட்ட அப்படத்தின் விசேஷக் காட்சிகளின் சிருஷ்டிகர்த்தா ஸ்டீஃபன் L. ப்ரைஸின் நினைவாக அப்படம் அர்பணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2005இல், ஏறக்குறைய அதே கதைக்களத்தில், ‘Zathura – A Space Adventure’ வெளியானது. 1995 படத்தில் நடித்த, மறைந்த மாபெரும் நடிகர் ராபின் வில்லியம்ஸ், ஆலம் பரிஷ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். JUMANJI – Welcome to the Jungle (ஜுமாஞ்சி – வெல்கம் டூ தி ஜங்கிள்) என்கிற இப்புதிய பதிப்பு, 2014 ஆம் ஆண்டு இறந்து விட்ட ராபின் வில்லியம்ஸிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் ஸ்மோல்டர் ப்ரேவ்ஸ்டோன் என்கிற ஒரு கதாபாத்திரத்தில் ட்வானே ஜான்சன் (ராக்) நடித்துள்ள இப்படத்தில், ஸ்பென்சர் மில்லராக வொல்ஃப், ஷெல்லி ஓப்ரானாக ஜாக் பிளாக், பெத்தானி வொயிடாக மேடிசன் இஸ்மேன் ஐஸ்மேன், ஃப்ராங்களின் ஃபின்பாராக கெவின் ஹர்ட் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒரு பள்ளியில், சில மாணவர்கள், சுத்தப்பணியில் ஈடுபடும் போது, ஓர் அறையில் ஜுமாஞ்சி என்கிற ஒரு வீடியோ கேமின் வழியாக ஒரு காட்டுப் பகுதியைச் சென்றடைகின்றனர்! அக்காட்டினில் அவர்களது அனுபவங்களும் அவற்றின் மூலமாக அவர்கள் அடையப் பெறும் படிப்பினைகளுமே படத்தின் சாரம்!
இருபது வருடங்களுக்கு முன்னர் வெளியாகிய ஜுமாஞ்சி படத்தில் – ஒரு விளையாட்டையும், அதை விளையாடுபவர்கள் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டு கதையமைத்திருப்பார்கள். அவ்விளையாட்டு, இதில் புதியதொரு அனுபவத்தைத் தரும் ஒரு வீடியோ கேமாக (Video Game) சித்தரிக்கப்பட்டுள்ளது. இவ்விளையாட்டில் ஈடுபட்டவர்கள் இறுதி வரை பங்கேற்க வேண்டும்! அதுவே விளையாட்டின் விதிமுறை!
ஹென்றி ஜாக்மேன் இசையமைத்துள்ளார். சோனி பிக்சர்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது.