Search

காசு மேலே காசு விமர்சனம்

Kaasu-mela-Kaasu-movie-review

மிகச் சுலபமாய்க் கோடீஸ்வரராகப் பார்க்கிறார் மயில்சாமி. அதற்காக தன் மகனை, ஒரு பணக்கார பெண்ணாகத் தேர்ந்தெடுத்துக் காதலிக்க ஊக்குவிக்கிறார். ஆனால் நாயகியோ, ஒரு பிச்சைக்காரரின் மகள். ணக்கார வீட்டில் வேலை செய்பவரைப் பணக்காரி என நினைத்துக் கொள்கிறான் நாயகன். அந்தக் காதல் என்னானது என்பதும், மயில்சாமியின் பேராசை என்னானது என்பதுமே படத்தின் கதை.

குறைந்த பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் மிக ஜாலியான படம். மன்னார் வளைகுடா, இன்னுமா நம்மள நம்புறாங்க, கண்டேன் காதல் கொண்டேன் ஆகிய படங்களின் வசனகர்த்தா கே.எஸ்.பழனி முதல் முறையாக இயக்கியுள்ள படமிது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியதோடு அன்றி கதாநாயகியின் தந்தையாகவும் நடித்துள்ளார் பழனி.

படத்தின் பலம் அதன் கலகலப்பான வசனங்கள். உதாரணத்திற்கு, மயில்சாமியின் மனைவி, “ஏன் குட்டி போட்ட பூனை மாதிரி நடந்துட்டிருக்கீங்க?” எனக் கேட்பார். அதற்கு, “நீ குட்டி போட்ட பூனையைப் பார்த்திருக்கியா? அது குட்டி போட்ட டயர்டுல படுத்துட்டிருக்கும். நான் நடந்துட்டிருக்கேன்” என கவுன்ட்டர் தருவார் மயில்சாமி. நாயகனாக ஷாருக் ரஃபி அறிமுகமாகியுள்ளார். எனினும், பேராசைக்காரரான மயில்சாமியும், பிச்சைக்காரரான கே.எஸ்.பழனியும் தான் உண்மையிலேயே படத்தின் கதாநாயகர்கள். அதிலும் குறிப்பாக, கே.எஸ்.பழனியின் அசால்ட்டான டயலாக் டெலிவரி ரசிக்கும்படியாக உள்ளது.

பிச்சைக்காரரின் இளம் வயது இரண்டாவது மனைவியாக ‘ஜாங்கிரி’ மதுமிதா நடித்துள்ளார். நாயகி காயத்ரியை விட, படத்தில் வலுவான பாத்திரம் இவருக்கே! இரண்டு காட்சிகளில் வந்தாலும், சின்ன பாப்பாவாய் அசரடிக்கிறார் நளினி. ஆனால், அனைவரையும் தூக்கிச் சாப்பிடுவது போல், படத்தின் க்ளைமேக்ஸில் கோவை சரளா என்ட்ரியாகி, செம்மையாகக் கலகலக்க வைக்கிறார். கோவை சரளாவின் அலப்பறையைப் பார்த்து, ‘யாருடா இவ?’ என்பது போல் நளினி தரும் ரியாக்ஷனும் செம! கோவை சரளாவைக் கதைக்குள் கொண்டு வந்து, கே.எஸ்.பழனி கதையில் கொடுத்துள்ள திருப்பம் சுவாரசியமாய் உள்ளது.

படத்தில் நிறைய நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும், அனைவரையும் கதைக்குள்ளாகத் தேவைக்கேற்ப மட்டும் உபயோகித்துள்ளது சிறப்பு. அமெச்சூர் சகோதரத் திருடர்களான மூர்த்தி, தேவ், வினோ ஆகியோர் ‘மூதேவி பிரதர்ஸ்’ எனப் பெயர் வைத்துக் கொள்வதும், அவர்களது தலைவரின் பெயர் ‘சனி பாபு’ என்றிருப்பதும் படத்தின் சுவாரசியத்திற்குச் சின்னஞ்சிறு சான்று. ‘இந்த ஊர்ல பிச்சைக்காரர்களும் சாதி பார்ப்பார்கள்!’ என்று நகைச்சுவையினூடே புரையோடிய சமூகத்தையும் ஒரு குத்து குத்தியுள்ளார் இயக்குநர் கே.எஸ்.பழனி.