‘முத்தின கத்திரிக்கா’ படத்தை இயக்கிய வெங்கட் ராகவனின் அடுத்த படைப்பு. இவர் இயக்குநர் சுந்தர். சி-யிடன் உதவி இயக்குநராகப் பணி புரிந்தவர்.
சிவில் இன்ஜினியரான எஸ்.ஜே.சூர்யா, தேவ் பில்டர்ஸ் கட்டிய அடுக்குமாடி கட்டடமொன்று இடிந்து விழும் தருவாயில் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். அவரைப் பேசவிடாமல் செய்ய, வேன் இடித்து அவரைக் கொல்லப் பார்க்கின்றனர். அவ்விபத்தால், அவர் ஸ்டூப்பர் (Stupor) நிலைக்குச் சென்றுவிடுகிறார். அதாவது, மூளை விழிப்பு நிலையில் இருந்தாலும், உடல் இயக்கம் ஸ்தம்பித்துவிடும். அவர், தன்னைச் சுற்றி நடப்பனவற்றை அனைத்தையும் கவனிப்பார், பேச நினைப்பார் ஆனால் அவரால் முடியாது. இந்தக் குறைபாடுகளை மீறி எப்படி எஸ்.ஜே.சூர்யா, அந்தக் குடியிருப்பில் வாழ்பவர்களை எப்படிக் காப்பாற்றுகின்றார் என்பதுதான் படத்தின் கதை.
மிக சீரியசான கதையில், சேஷு, மொட்டை ராஜேந்திரன் போன்றோர்களைக் கொண்டு நகைச்சுவைக்கும் முயற்சி செய்துள்ளனர். அது கதையோடு இயைந்த நகைச்சுவையாக இல்லாததால், படத்தின் ஓட்டத்திற்கு ஒரு தடையாக உள்ளது. அசட்டுத்தனமான நகைச்சுவைக் காட்சிகள், கூறியது கூறல் போன்றவற்றைப் படத்தொகுப்பாளர் N.B.ஸ்ரீகாந்த் கத்திரித்து எறிந்திருக்கலாம். படத்தின் நீளமும் குறைக்கப்பட்டு, த்ரில்லர் படத்திற்குண்டான கச்சித நேர்த்தியோடு இருந்திருக்கும். காலமாற்றத்திலெழும் ரசனை மாறுபாட்டையும் கணக்கிலெடுத்துக் கொண்டிருந்தால், மிகச் சிறப்பானதொரு படமாகியிருக்கும்.
தேவ் பில்டர்ஸ் ஓனராக வின்சென்ட் அசோகன் நடித்துள்ளார். வில்லத்தனம் செய்வதற்கான வாய்ப்பு அவரை விட, அவரது தம்பியாக நடித்திருக்கும் சார்லஸ் வினோத்திற்கே அதிகம் வாய்த்திருக்கிறது. தன் கதாபாத்திரத்தைப் பற்றி அவர் பேசுவதாக ஒரு வசனம் படத்தில் வரும். ‘கடவுளோட படைப்புல செடி, கொடி, மிருகங்கள் சிலதுல விஷம் இருக்கிற மாதிரி, மனிதர்களில் சிலருக்கு விஷம் இருக்காதா? அப்படியொரு விஷம் நிறைஞ்ச மனுஷன் நான்’ என்பார் அவர். ஒரே ஒருவரைப் பழிவாங்க, அவர் கைகொள்ளும் மிகக் குரூரமான திட்டமே அவரது விஷத்திற்குச் சான்று.
நாயகியாக யாஷிகா ஆனந்த். கையை மட்டுமே அசைக்க முடிந்த கணவனிடமிருந்து, சாதுரியமாகத் தனக்குத் தெரிந்த யுக்தியைப் பயன்படுத்தி, பிரச்சனையை அறிந்து கொள்ளும் காட்சியில், கதைக்கு உதவும் பாத்திரமாகப் பரிமளிக்கிறார் யாஷிகா. ஸ்டூப்பர் நிலையில் தேமோவெனப் படுத்திருப்பதும், அதீத புறத்தூண்டுதலின் போது கோணிக் கோணி நடப்பதுமென எஸ்.ஜே.சூர்யாவிற்கு மிக வித்தியாசமான வேடம். அவரது பாணி நடிப்பு, மிகச் சொற்ப இடத்திலேயே வருகிறது. குறிப்பாக, படத்தின் இரண்டாம் பாதியில், கையும் காலும் கோணிய நிலையில், எப்படியேனும் பெரும் விபத்தில் ஏற்படவிருக்கும் உயிழிரப்பைத் தடுக்க எடுக்கும் பிரயத்தனங்களைத் தன் நடிப்பில் அழகாகக் கொண்டு வந்துள்ளார்.
இன்ஜினியர் ராகவன் (Engineaar Ragavan) எனும் பாத்திரத்தில் நடித்துள்ளார் இயக்குநர் வெங்கட் ராகவன். நகைச்சுவை கலந்த குணச்சித்திர வேடங்களுக்கு, தமிழ்த் திரையுலகம் இவரைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்த பட்ஜெட்டில், சுவாரசியமான ஒரு புது கதைக்கருவை எடுத்துக் கொண்டு, நாயகன் ஸ்டூப்பருடன் போராடுவது போல், வெங்கட் ராகவன் கொரோனாவுடன் போராடி இப்படத்தை முடித்துள்ளார்.
உறுதியான மனம் வாய்க்கப்பட்டால், எத்தகைய உடல் இயலாமையையும் மீறி, எண்ணியதைச் சாதிக்க இயலும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது கடமையை(ச்) செய் திரைப்படம்.