Shadow

தி லயன் கிங் விமர்சனம்

the-lion-king-2019-movie-review

1994 இல் வெளியான ‘தி லயன் கிங்’ படத்தைத் திரையரங்கில் பார்த்தவர்கள், சில வருடங்களிலேயே தாங்கள் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருப்பார்கள். டிஸ்னி ஸ்டியோஸின் வரலாற்றிலேயே, இப்படம் ஒரு மைல்கல். இப்படத்தைப் பார்த்த அத்தனை பேரையுமே, இசையால், அனிமேஷனால், ‘ஹகுனா மடாடா (எதற்கும் கவலைப்படாதே)’ எனும் உயரிய சித்தாந்தாத்தாலும் கொள்ளை கொண்டது. அந்தப் படத்தை நினைத்தாலே ஒரு மகிழ்ச்சியான சிலிர்ப்பு ஏற்படும்.

சரியாக 25 ஆண்டுகளுக்குப் பின், அப்படம் 3டி அனிமேஷனில் உருவாக்கப்பட்டு வெளியாகியுள்ளது. 2016 இல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தி ஜங்கிள் புக் குதூகலத்தில், டிஸ்னி இப்படத்தைப் பிரம்மாண்டமாய்த் தயாரித்து வெளியிடுகிறது. அதுவும் ‘டிஸ்னி இந்தியா’, நேரடியாகத் தமிழிலேயே ‘டப்’ செய்து வெளியிட்டிருப்பது மேலும் சிறப்பு.

வில்லன் சிங்கம், ராஜா சிங்கத்தைக் கொன்று, குட்டி சிங்கத்தையும் கொல்லப் பார்க்கிறது. அதிர்ஷ்டவசமாக குட்டி சிங்கம் தப்பி, பெரிய சிங்கமாக வளர்ந்து, வில்லன் சிங்கத்தை எதிர்க்கிறது. பாகுபலியின் கதையும் கூட இதுவே!

3டி-இல் சிருஷ்டிக்கப்பட்டுள்ள கெளரவ பூமி அதி பிரமாதமாக உள்ளது. நில அமைப்புகளின் டீட்டெயிலிங்கில் அசாதாரணமான உழைப்பைப் போட்டுள்ளனர் அனிமேட்டர்கள். பாறைகள், மரங்கள், மண் துகள்கள் என நிலம் சார்ந்த விஷூவல்களால் கண்ணைக் கவர்கிறது. Pride lands என்பதை அப்படியே ‘கெளரவ பூமி’ என மொழிபெயர்த்துள்ளனர். கெளரவ பூமி என்று கேட்கும்பொழுதெல்லாம் ஏதோ நெருடுகிறது.

முஃபாஸா, ஸ்கார், சிம்பா எனப் படத்தில் மூன்று ஆண் சிங்கங்கள். ஆனால், இந்த 3டி சிங்கங்கள் மூன்றுமே, 2005 இல் வெளிவந்த நார்நியா படத்தின் சிங்கமான அஸ்லான் அளவுக்குக் கம்பீரமாக இல்லாதது குறை. ஆனால், பெண் சிங்கங்கள் கம்பீரமாய் வலம் வருகின்றன. ‘சக்தியில்லையேல் சிவமேது?’ என வாழ்க்கையை வாழ்ந்துணர்ந்த, அனுபவமிக்க ‘ஆண்’ அனிமேட்டர் யாரோ ஒருவரின் கைவரிசையாகத்தான் இருக்கும்.

2டி இல் வெளிவந்த பொழுது எந்தளவுக்குப் படம் கொண்டாடப்பட்டதோ, அந்தளவுக்கு விமர்சனத்துக்கும் உள்ளானது. ஜப்பானியர்களால் ‘மாங்காவின் கடவுள்’ எனப் பெரிதும் மதிக்கப்படும் ஒசாமு தெஸூகா-வின் (Osamu Tezuka) ‘கிம்பா தி வொயிட் லயன்’ படத்திலிருந்து கிரெடிட் தராமல் பல காட்சிகள் தழுவப்பட்டது என்பது அதில் முக்கிய விமர்சனமாகும். இரண்டாவது, கழுதை புலிகளை (Hyenas) வில்லனாகச் சித்தரித்ததன் மூலம், மறைமுகமாக நிறவெறியை ஊக்குவித்ததாக எழுந்த விமர்சனம். கொஞ்சம் அருவருப்பான உருவங்களை, அதுவும் கருப்பாக இருந்தால், கெட்டவர்களாகத்தான் இருப்பார்கள் என்று இளம் மனங்களில் பதியும் சில்மிஷத்திற்காக டிஸ்னி பயங்கரமாக விமர்சிக்கப்பட்டது. விலங்கியல் ஆர்வலர்களும் கழுதை புலியைத் தவறாகச் சித்தரித்ததற்காகக் கண்டன குரல்களை எழுப்பியிருந்தனர்.

அப்பொழுதும் சரி, இப்பொழுதும் சரி, இந்த விமர்சனங்களை எல்லாம் டிஸ்னி பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை. கெளரவ பூமியில் எல்லா விலங்கிற்கும் சம உரிமை என்ற கோட்பாடு இல்லாமல், கழுதை புலிகளை ஒதுக்கி வைக்கிறது அரசனான முஃபாஸா சிங்கம். நல்லவர், கெட்டவர் கலந்துதான் உலகம். உதாரணம், முஃபாஸா – நல்ல சிங்கம், ஸ்கார் – கெட்ட சிங்கம். ஆனால், கழுதை புலிகள் என்றாலே வில்லன் கூட்டம் தான் என இயற்கையில் பாகுபாடு பார்க்கக் குழந்தைகளுக்குக் கற்றுத் தந்த டிஸ்னி, 25 ஆண்டுகளுக்குப் பின்னாவது தன்னைத் திருத்திக் கொண்டிருக்கலாம்.

சிம்பாவிற்குத் தமிழில் டப்பிங் செய்துள்ள சித்தார்த்தின் குரல் சரியாக எடுபடவில்லை. முஃபாஸாவிற்குக் குரல் கொடுத்துள்ள ரவிஷங்கர், அச்சிங்கத்தின் கம்பீரத்தை அதிகமாக்க உதவியுள்ளார். வில்லன் ஸ்கார் சிங்கத்திற்கு மிக மிகச் சிறப்பாக டப்பிங் செய்துள்ளார் அரவிந்த் சாமி. பதவி ஆசையும், ஒதுங்கி வாழும் காழ்ப்புணர்ச்சியும், பதவியைத் தக்க வைக்க எதுவும் செய்யக்கூடிய வஞ்சத்தையும், தனது குரலில் கொண்டு வந்துள்ளார். குரலினை அடையாளம் காணும் பொழது, அந்தக் குரலுக்குச் சொந்தமான முகமும் லேசாக மனத்திரையில் எட்டிப் பார்க்கிறது. மனோபாலாவின் குரலை ஒதுக்கி, ஜாஸு ஒரு பறவை என்பதை ஏற்றுக் கொள்ளப்படாதபாடுபட வேண்டியுள்ளது. ஆனால் ஸ்கார் பேசும்போது அரவிந்த் சாமியின் முகம் அப்படித் தோன்றவில்லை. டப்பிங்கிற்கு ஏதாவது விருது வழங்கப்பட்டால், எந்த யோசனையுமின்றி அரவிந்த் சாமிக்கு வழங்கலாம். டிமோன் எனும் கீரிக்கு சிங்கம்புலியும், பும்பா எனும் பன்றிக்கு ரோபோ ஷங்கரும் குரல் கொடுத்துள்ளனர். கட்டாந்தரையாய் வறண்டு போயிருக்கும் கெளரவ பூமியைப் பார்த்ததும் சிங்கம்புலி அடிக்கும் கமென்ட் அதகளம். டிஸ்னி நிறுவனம், வசனங்களைத் தமிழில் மொழிபெயர்த்தது ஓகே. ஆனால் பாடல்களையுமா மொழிபெயர்த்துக் கொலையாகக் கொல்லவேண்டும்? மகத்தான இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மரும், அப்பாவி தமிழ் ரசிகர்களும் பாவமில்லையா?

பிரம்மாண்டமான முதற்பாதியைச் சமர் செய்யுமளவு வொர்த்தான க்ளைமேக்ஸை உருவாக்கத் தவறியுள்ளார் ஜான் ஃபெவ்ரோ (Jon Favreau). சிம்பாவிற்கு ஏற்படும் மனமாற்றமும் அழுத்தமாக இல்லை. 2டி படத்தை அப்படியே 3டி இல் பிரதியெடுத்து, அழகு பார்த்துள்ளது டிஸ்னி. சுவாரசியத்தைக் கூட்ட, காட்சிகளில் சின்னஞ்சிறு மாற்றங்களையாவது டிஸ்னி செய்திருக்கலாம். க்ளைமேக்ஸ் சண்டையை அதகளப்படுத்தியிருக்க வேண்டுமா? ஆனால், அனிமல் பிளானெட்டிலும், டிஸ்கவரியிலும், நேஷ்னல் ஜியாகிரஃபிக் சேனலிலும் பார்ப்பது போல், உண்மையான காட்டினைத் தரிசிக்கும் ஆவல் உள்ளவர்களும், ‘தி லயன் கிங்’ என்றாலே பரவசமடைபவர்களும், குழந்தைகளும் தவறவிடாமல் நிச்சயம் பார்த்து லயிக்க வேண்டிய படம்.