Shadow

கல்கி 2898 AD விமர்சனம்

கடவுளின் அவதாரக் கதைகளில் மிகவும் பிரசித்தி பெற்ற இரண்டு கதைகள் உண்டு. ஒன்று வசுதேவர் தேவகிக்கு பிறந்த கிருஷ்ணரின் கதை. மற்றொன்று யோசேப்பு – மரியாவிற்கு பிறந்த இயேசுவின் கதை. இந்த இரண்டிலுமே பொதுவான அம்சங்கள் என்று பார்த்தால் குழந்தையை கொல்லத் துடிக்கும் மன்னர்கள், குழந்தையை காப்பாற்ற போராடும் தாய் தந்தையரின் போராட்டம், வானில் தெரியும் அடையாளங்கள் என பல உண்டு. இந்த பொதுவான அம்சங்களின் பின்னணியில் இந்து சமயத்தின் பிரதான நம்பிக்கைகளில் ஒன்றாக இருக்கும் கலியுகத்தின் கல்கி அவதாரத்திற்கு கற்பனையாக ஒரு உரு கொடுத்தால் அது தான் “கல்கி 2898 AD திரைப்படத்தின் கதை.

படம் குருஷேத்திரப் போரில் அபிமன்யு மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையை அழித்த அசுவத்தாமனுக்கு கிருஷ்ணர் சாகா வரமென்னும் சாபமளித்து, கல்கியாக தான் கருவில் தோன்றும் போது என்னைக் காப்பதின் மூலம் உனக்கு சாப விமோசனமும் கிடைக்கும் என்று கூறிச் செல்கிறார்.

பின்னர் அதைத் தொடர்ந்து 6000 வருடங்கள் கழித்து சீர் கெட்ட நிலையில் இருக்கும் காசி நகரம் காட்டப்படுகிறது. நீரின்றி வறண்டு பாலையாக கிடக்கும் காசி நகரத்தின் கட்டுமானத்திற்குள் காம்ப்ளக்ஸ் என்னும் மற்றொரு உலகம் இயங்கி வருகிறது. நாம் சொர்க்கம் என்று சொல்லும் இடம் போல் காம்ப்ளக்ஸும், நாம் நரகம் என்று சொல்லும் இடம் போல் காம்ப்ளக்ஸை சுற்றி இருக்கும் காசி நகரும் காட்சியளிக்க, காசி நகரில் வசிக்கும் மக்கள் அனைவரும், அந்த காம்ப்ளக்ஸ் நகரத்திற்குள் செல்ல போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த காம்ப்ளக்ஸ் நகரம் சுப்ரீம் யஷ்கின் (கமல்ஹாசன்) என்னும் அசுரனின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. காம்பள்க்ஸ் உலகத்திற்குள் சென்று உணவு அருந்தவும், சுற்றிப் பார்க்கவும், வேலை செய்யவும், நிரந்தரமாகத் தங்கவும் என ஒவ்வொன்றுக்கும் இத்தனை யூனிட்டுகள் (காம்ப்ளக்ஸ் உலகத்தின் பணம்) வசூலிக்கப்பட்டு வருகிறது.

மேலும் காசி நகருக்குள் நல்ல கருவை சுமப்பதற்கான தகுதி உடைய பெண்கள் வலுக்கட்டாயமாக அவர்களின் குடும்பத்திடம் இருந்து பிரிக்கப்பட்டு, குறித்த காலத்தில் அவர்களை கருத்தரிக்க செய்து சில ஆராய்ச்சிகளும் செய்து வருகிறார் சுப்ரீம் யஷ்கின். இந்த அத்துமீறல்கள் மற்றும் ஆதிக்கத்தை எதிர்த்து ஷம்பாளா என்னும் போராளிகளின் கூட்டம் ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர்.

காம்ப்ளக்ஸ் உலகிற்குள் நிரந்தரமாக போய் வாழ்ந்துவிட வேண்டும் என்பதையே ஒற்றை கனவாகக் கொண்டு காசி நகருக்குள் இயங்கி வரும் பைரவா (பிரபாஸ்), சாபம் பெற்று காசி நகருக்குள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வரும் அஸ்வத்தாமா (அமிதாப்பச்சன்), தன் வயிற்றில் வளரும் கரு தெய்வாம்சம் பொருந்தியது என்று தெரியாமலே காம்ப்ளக்ஸ் உலகிற்குள் பரிசோதனை எலியாக இருக்கும் சுமதி (தீபிகா படுகோனே) இவர்களைச் சுற்றி அடுத்து நடக்கும் கதை தான் இப்படத்தின் திரைக்கதை.

முதல் பாதியில் பிரபாஸின் கதாபாத்திரம் எந்த வலுவும் இல்லாமல் குழந்தைகளை குஷிபடுத்தும் நோக்கில் கார்ட்டூன் கதாபாத்திரம் போல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் அந்த ஆரம்ப சண்டைக்காட்சிகள் எல்லாம் குழந்தைகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன என்று சொல்லலாம். எந்த இடத்தில் அமிதாப்புடன் பிரபாஸ் மோத துவங்குகிறாரோ அந்தப் புள்ளியில் இருந்து தான், பிரபாஸ் கதாபாத்திரம் உயிர் பெறுகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் முறுக்கேறிய கைகள் மற்றும் கட்டுமஸ்தான தோள்களுடன் சிறப்பாக சண்டை செய்திருக்கிறார். இரண்டாம் பாதியில் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இதிகாசப் பின்புலத்தோடு பொருத்திப் பார்க்கும் போது, அவரின் கதாபாத்திர குணாதிசயம் நகைமுரண் கொண்டதாக படைக்கப்பட்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தன் சுயநலம் ஒன்றையே துருப்புச்சீட்டாக கொண்டு கலியுகத்தில் இயங்கும் இந்த பைரவா கதாபாத்திரம் குருஷேத்திர காலத்தில் யார் என்பது இனிக்கும் சர்ஃப்ரைஸ்.

படத்தின் ஆணிவேராக இருப்பது ஆறடி உயரத்தில் அசுவத்தாமனாக வரும் அமிதாப்பசசன் தான். சாகாவரம் பெற்றவன் என்கின்ற அந்த இதிகாச பின்புலம் இந்த கதாபாத்திரத்திற்கு பெரும் வலு சேர்த்திருக்கிறது. ஒட்டு மொத்த படத்திலும் ஒற்றை சூப்பர் மேனாக வலம் வருகிறார் அமிதாப். அவர் நிகழ்த்தும் அசகசாய சூரத்தனங்களை எந்தவித கிண்டலும் ஏளனமும் இன்றி ஏற்றுக் கொள்ளும் மனநிலை அதன் கதாபாத்திர பின்புலத்தினால் சாத்தியப்பட்டு இருக்கிறது.

கருவை சுமக்கும் கன்னிகையாக வரும் தீபிகா படுகோன் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தினை சிறப்பாக செய்திருக்கிறார். மிகுந்த உணர்வு வெளிப்பாடுகள் கொண்ட கதாபாத்திரம் இல்லை என்றாலும், தன் ஒற்றை உயிரை காப்பாற்றுவதற்காக ஊரே அழியும் காட்சிகளில் அவரின் நடிப்பு வாழ்த்துக்களைப் பெறுகிறது.

“மனித குலத்தின் இந்த இயல்பு அவர்களின் தவறல்ல; Manu Facturing Defect; இருக்குற வளத்தை எல்லாம் அழிக்கிறீங்க, பாதுகாக்குறதுக்காக உங்ககிட்ட இருந்து பதுக்கி வச்சிருக்கேன்.. தப்பா..?” என்று கேட்டு அறிமுகமாகும் சுப்ரீம் யஷ்கின் கமல்ஹாசன், தன் அடிக்குரலில் அதட்டி மிரட்டுகிறார். வந்து போவது இரண்டே காட்சிகள் தான் என்றாலும் அந்த வயோதிக சுருக்கம் விழுந்த முகத்தில் எண்ணற்ற உணர்ச்சிகளை தெளித்து விளையாடி இருக்கிறார். தீபிகாவின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட சிரத்தின் ஒரு துளியை உடலில் ஊற்றி தன் இளமையை மீள் உருவாக்கம் செய்து தீபிகாவினை தேடும் வேட்டையில் இறங்கும் கமலின் சேஷ்டைகள் இரண்டாம் பாகத்தில் இரண்டு மடங்காக இருக்கும் என்று தோன்றுகிறது.

இவர்கள் தவிர்த்து பைரவாவின் வாகனமாக வரும் புஜ்ஜியும் ஆங்காங்கே அதகளம் செய்கிறது. இதன் சேஷ்டைகள் கண்டிப்பாக குழந்தைகளை கவரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஷம்பாலா குழுவினராக வரும் ஷோபனா, பசுபதி, அன்னா பென் போன்றோரும் சிறப்பான நடிப்பை நல்கி இருக்கின்றனர். மேலும் திஷா பதானி, பிரம்மானந்தம் போன்றோர் ஒரிரு காட்சிகளில் வந்து போகிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலம் அதன் விஷ்வல் எபெக்ட் காட்சிகள் தான். சிஜி உதவியுடன் கூடிய தொழில்நுட்பக் காட்சிகள் அனைத்தும் உலகத் தரத்தில் இருக்கின்றன. எந்த இடத்திலும் இவை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் என்பதற்கான துளியளவு அடையாளமும் இல்லாத அளவிற்கு காட்சிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

சுப்ரீமிடம் அந்த சிரத்தைக் கொண்டு சென்று கொடுக்கும் கை, சுப்ரீம் இருக்கும் இருப்பிடம், சுப்ரீமால் கட்டமைக்கப்பட்ட ‘காம்ப்ளக்ஸ்’ உலகம், நீண்ட நெடிய சிலையின் கை போன்ற மின் தூக்கி வடிவம், வறண்ட தூசி படிந்த காசி நகரம், பாழ்பட்ட காசி நகரத்திற்குள் ஓடிக் கொண்டு இருக்கும் விசித்திரமான கார்கள், மலைகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் ஷம்பாளா என்னும் மாறுபட்ட உலகம், கண்களை ஏமாற்றும் பொய் திரை, புஜ்ஜியின் வடிவம், க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி என வசீகரிக்கும் கற்பனைகள் கண்களுக்கு விருந்து படைக்கின்றன.

ஒளிப்பதிவு உலகத்தரம். மேலும் சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். பாடல்கள் சற்று சுமார் ரகம் தான். கலை இயக்குநரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

நாக் அஸ்வின் எழுதி இயக்கி இருக்கிறார். அஸ்வத்தாமன் என்னும் கதாபாத்திரத்தை கல்கி அவதாரத்தோடு கனெக்ட் செய்தவிதம் அழகானது. சுப்ரீம் யஷ்கினின் பின்னணி இப்பாகத்தில் கூறப்படவில்லை, கர்ப்பம் தறிக்கும் பெண்களை தேர்வு செய்வதற்குப் பின்னால் இருக்கும் தேர்வு முறை, கைகளில் நம்பர் முத்திரை பதிக்கப்பட்ட பெண்கள், இருவிதமான உலகங்கள், கல்கி பிறக்கும் கற்பனைக் கதை என படம் நெடுக அஸ்வின் அழகான கற்பனையை விரித்தெடுத்திருக்கிறார்.

இரண்டாம் பாகத்தில் கல்கியின் பிறப்பைக் காட்டி மேற்கொண்டு இக்கதையை எப்படி வளர்த்தெடுக்கப் போகிறார்…? கிருஷ்ணராக நடிக்கப் போவது யார்..? தேவனுக்கும் அசுரனுக்குமான யுத்தம் எப்படி இருக்கப் போகிறது, புதிய பிரபஞ்சத்தின் நிர்மாணம் எப்படி இருக்கப் போகிறது, 6000 வருடங்கள் கழித்து நடக்கின்ற கதையில் 2898க்கான பின்புலம் என்ன..? என்பதான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது கல்கி 2898 AD.

கல்கி 2898 AD – கண்களுக்கு விருந்து படைக்கும் கவித்துவமான கற்பனை.

 

1 Comment

Comments are closed.