Shadow

கண்ணே கலைமானே – தமன்னாவின் 50வது படம்

Vasundhara-in-Kanne-kalaimaane

ரெட் ஜெயண்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம் ‘கண்ணே கலைமானே, ஃபிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகிறது. உதயநிதி ஸ்டாலின், தமன்னா, வடிவுக்கரசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

“45 நாட்களில் மொத்த படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டோம். சீனு ராமசாமி சாரின் படங்கள் எப்போதுமே தனித்துவமான இடங்களின் பின்னணியைக்கொண்டிருக்கும். கண்ணே கலைமானே பசுமையான பின்னணியையும், மேலும் படம் முழுவதும் அழகான தருணங்களையும் கொண்டிருக்கும். எனக்குப் பயமாக இருந்தபோதெல்லாம், சீனு ராமசாமி சார் அவரது வார்த்தைகள் மூலம் என்னை ஊக்கப்படுத்தினார். இளம் வயதில் இருந்தே நான் யுவன் ஷங்கர் ராஜா சாரின் மிகப்பெரிய ரசிகன். பெண் கதாபாத்திரங்களுக்கு இந்தப் படத்தில் மிகப்பெரும் முக்கியத்துவம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்” என்றார் ஒளிப்பதிவாளர் ஜலந்தர் வாசன்.

“சீனு சார் மற்றும் நான் இணையும் மூன்றாவது படம் இது. வழக்கமாக, எங்கள் முந்தைய படங்களில் உபயோகிக்கப்படாத ட்யூன்களை நாங்கள் உபயோகிப்போம். ஆனால் இதில் நிறைய புதுமை தேவைப்பட்டது. உதயநிதி நடித்த படங்களிலேயே இதுதான் எனக்கு மிகவும் பிடித்த படம். இது பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்” என்றார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

“இரண்டாவது முறையாக சீனு ராமசாமி சாருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம். இந்தப் படத்தில் உள்ள எல்லாக் கதாபாத்திரங்களும் கவிதை மாதிரி இருக்கும். இது தமன்னாவின் 50வது படம். அவருக்கு என் வாழ்த்துக்கள். பெண் சக்தி வாய்ந்தவர்கள், ஆனால் அன்பானவர், கனிவானவர்கள் என்பதை பற்றிப் படம் பேசுகிறது” என்றார் நடிகை வசுந்தரா.

“அடுத்த படத்தில் நீங்க இருக்கீங்க என போலி வாக்குறுதியை அளிக்கும் பல இயக்குநர்களுக்கு மத்தியில், முந்தைய படங்களின் படப்பிடிப்பில் சீனு சார் சொன்ன மாதிரி இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறார். அதுவும் தம்பி உதயநிதி ஸ்டாலினின் திரைப்படத்தின் ஒரு பகுதியாக என்னை ஒப்பந்தம் செய்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. சினிமாவில் மிகவும் எளிமையானவர் எனப் பலரையும் குறிப்பிட்டுச் சொல்வதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் மிகப்பெரிய ஒரு பாரம்பரிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் எளிமையாக இருக்கும் உதயநிதி தம்பி தான் அந்த வார்த்தைக்கு மிகவும் பொருத்தமானவர். படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியை அவரால் செய்ய முடியுமா என எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் அவர் என்னை ஆச்சர்யப்படுத்தினார். படத்தின் இறுதிக் காட்சியில் அவர் என்னிடம் ‘அப்பத்தா’ எனக் கூற வேண்டும். அந்தக் காட்சியில், இயல்பாக என் கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது. படத்தின் ஒரு காட்சியில் கிளிசரின் பயன்படுத்தாமலேயே தமன்னா அழுகிற காட்சி மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. நடிகர், நடிகைகளிடமிருந்து சிறந்த நடிப்பைப் பெற சீனு சாரால் மட்டுமே முடியும்” என்றார் நடிகை வடிவுக்கரசி.