Shadow

மனதில் நிற்கும் பாரதி – ‘கண்ணே கலைமானே’ தமன்னா

Tammanah-in-Kanne-kalaimaanae

‘கண்ணே கலைமானே’ படத்தினைப் பற்றி நடிகை தமன்னா, “ஒரு வருடத்திற்கு முன்னர் இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்னர், இந்தப் படத்துடனும், மொத்த குழுவுடனும் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இன்று காலை (17-02-2019) வேறு ஒரு புதிய படத்தைப்  பார்ப்பது போல் இருந்தது. நான் மிகவும் திருப்தியடைந்தேன். சீனு ராமசாமி சார் படத்தில் பல உணர்வுகளைக் கையாண்டிருக்கிறார். சப்டைட்டில் இல்லாமல் இந்தப் படத்தை பார்த்தால் கூட ஒருவர், இந்தப் படத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், அதை விரும்பவும் முடியும் என நான் நம்புகிறேன். இன்னமும் பாரதி கதாபாத்திரம் எனக்குள் இருக்கிறது. பொதுவாக, ‘நாம் ஒன்றாக வேலை செய்யலாமா?’ என்று எந்த ஒரு ஹீரோவிடமும் நான் கேட்பதில்லை. ஆனால் நான் இப்போது உதயநிதி ஸ்டாலினிடம் அடுத்தடுத்த படங்களில் என்னைப் பரிசீலனை செய்யுங்கள் எனக் கோரிக்கை வைக்கிறேன். ஏனெனில் இன்னும் பாரதியும் கமலகண்ணனும் என் நினைவிலிருந்து மறையாமல் உள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா என் சினிமா வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கிறார். பாடல்களும் படத்தில்  கதாபாத்திரங்கள் போல தான் இருக்கும். ஒளிப்பதிவாளர் ஜலந்தர் சார் என்னை மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார். இந்தப் படத்தைத் தயாரித்த உதயநிதி சாருக்கு என் நன்றி, சீனு சார் குறுகிய  காலத்திற்குள் இத்தகைய ஒரு அழகிய படத்தை எடுத்திருப்பதைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்றார்.