இந்தியாவின் அச்சுறுத்தும் முகத்தினைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர் ராம்சுரேஷ்.
பீஹாரிலுள்ள கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் தான் கதையின் களம். 1995 இல் நடப்பதாகக் கதை நகர்கிறது. 35 அத்தியாயங்கள் உடைய நாவல் என்றாலும், எந்த அத்தியாயமும் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் உள்ளது. முன்னுரை, என்னுரை நீங்கலாக 214 பக்கங்கள் கொண்ட நாவலை ஒரே மூச்சில் படிக்க முடிவதுதான் ராம்சுரேஷ் எழுத்தின் சிறப்பு. நாவலின் சரளமான flow-க்குக் காரணம், அவரது நினைவோடைகளில் சாம்பல் படிவமாய்ப் படிந்திருந்த அனுபவங்களைத் தூசி தட்டி புனைவாக்கியுள்ளார். கரும்புனல் என்ற தலைப்பு எவ்வளவு கச்சிதமாகப் பொருந்துகிறது என நாவலை முடித்ததுமே தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.
செய்திகளிலும், செவி வழியாகவும் நாம் கேள்விப்படும் பீஹார், ஏன் அவ்வாறு இருக்கிறது என்பதற்கான விடையை நாவல் முன்வைக்கிறது. ஜார்க்கண்ட்டாக பீஹார் கூறுப்படுவதற்கு முன், சாஹஸிலுள்ள கோல் இந்தியா நிறுவனம், சுற்றியுள்ள கிராமங்களின் வாழ்வாதாரத்தை எப்படி நிர்மூலமாக்கியது என்று டீட்டெயிலிங் செய்து பதற வைக்கிறார் ராம்சுரேஷ். நாவலின் பிரதான பாத்திரமான சந்திரசேகரனைப் போலவே, அருவருப்பும் இயலாமையும் மட்டுமே மிஞ்சுகிறது. நம்மை ஆளும், நம்மைச் சுற்றியுள்ள இந்த சிஸ்டத்தின் மீது இனம் புரியாத பயம் மனதில் பதிகிறது.
ஆதிவாசிகளான கிராமத்தாரிடம் பேசுவதைக் கூட விரும்பாத வர்மா, பானர்ஜி, சதுர்வேதி முதலியோர் வலுவான பதவிகள் வகித்துவருகின்றனர். சாதி பெருமிதத்தில் ஊறிப் போன அவர்கள், தமது பதவியைப் பயன்படுத்தி, ஆதிவாசிகளைச் சுரண்டி எப்படி ஊழலில் கொழிக்கின்றனர் என்பது கொடுமை. அத்தோடு நில்லாமல், பாதிக்கப்பட்டவர்களை மாவோயிஸ்களாகவோ, தீவிரவாதிகளாகவோ, கொல்லைக்காரர்களாகவோ கூடச் சித்தரித்து விடமுடிகிறது படித்த ஆதிக்க சாதியினரால்.
எந்தத் தொலைதொடர்பு சாதனமும் இல்லாத இடத்திலேயே, ப்ராஜக்ட் ஆஃபீஸர் சுஜீத் வர்மாக்குச் செய்திகள் மின்னல் வேகத்தில் வந்தடைகின்றன. சுற்றுவட்டார கிராமங்களிலோ, பிரம்மாண்டமான சுரங்கங்களிலோ, எது நடந்தாலும் அவரது காதுக்குப் போய்விடும். அனைவரையும் ஆட்டுவிக்கும் பேச்சுச் சாமர்த்தியம், எது நடந்தாலும் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வல்லவர். அவரை மீறி உச்சிடி கிராம மக்களுக்கு, சந்திரசேகரன் ஏதேனும் நல்லது செய்துவிட மாட்டானா என்ற நப்பாசை எழுகிறது. நாவலின் முடிவை எழுத்தாளரின் சில க்ளூக்குள் கொண்டு முன்பே யூகிக்க முடிந்தாலும், இந்நாவலில் பட்டும்படாததாய் இழையோடும் ஒரு காதல் அத்தியாயத்தை, ராம்சுரேஷ் முடித்திருக்கும் விதம், வீணையின் நரம்பு அறுபடுவது போன்ற ஓர் அதிர்வினை ஏற்படுத்துகிறது. வம்சி பதிப்பகத்தின் இந்நூல் Kindle-இலும் கிடைக்கிறது.