Search

ட்ரான்ஸ் விமர்சனம்

trance-movie-review

Trance என்றால் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாமல் இருக்கும் நினைவிழந்த நிலை. போதையூட்டப்பட்ட மயக்கநிலை என்றும் சொல்லலாம்.

மனிதன் கண்டுபிடித்த லாகிரி வஸ்துக்களிலேயே, “மதம் (religion)” தான் பயங்கர வசீகரமானதும், மிகக் கொடியதானதும் ஆகும். மதம் பிடித்த மனிதனின் பைத்தியக்காரத்தனம் எந்த எல்லைக்கும் செல்லும். அவர்களது உலகமே தனி. நவீன அறிவியலை மண்டியிடச் செய்யும் விஞ்ஞானச் செறிவு நிறைந்தது எங்கள் மதநூல் என உன்மத்தம் கொள்ளவைக்கும். அத்தகைய மதத்தின் மீதான ஒருவனது நம்பிக்கை, தன்னைக் காக்க இறைவன் பிரசன்னம் ஆவான் என எதிரிலுள்ள ஆபத்தை உணராமல், எளிய தீர்வுகளை நோக்கி நகராமல் கட்டிப் போடும் விஷப்போதையைத் தரவல்லது.

போதைக்கு அடிமையானவர்கள், கடவுளின் பெயரால் தங்களை ஆட்டுவிக்கும் எஜமானர்களுக்குப் பிரதியுபகாரமாகத் தருவது கற்பனைக்கெட்டாத அளவற்ற பணமும், அரசியலில் அசைக்க முடியாத அதிகாரமுமே! இதில், ட்ரான்ஸ் படம் முன்னதைப் பற்றிப் பேசுகிறது. பின்னதை இதிகாச ராமர் ஆண்ட பரத தேசமே கண்ணுற்றுக் கொண்டிருக்கிறது.

வழக்கம் போல் மலையாளத் திரையுலகம் நம்மைப் பிரமிக்க வைத்துள்ளது. பைசா பெறாத விஷயத்திற்கெல்லாம் உணர்ச்சி வசப்படுபவர்களுக்கு, இத்தனை சென்சிட்டிவான கருப்பொருள் என்பது கற்பனை செய்து பார்க்கவியலாதொரு சங்கதி. ஆக, பகுத்தறிவு மாநிலமென மார்தட்டிக் கொள்ளும் தமிழ்நாட்டில் இத்தகைய படம் வரக் கண்ணுக்கெட்டிய தொலைவில் கொஞ்சமும் வாய்ப்பே இல்லை.

துரதிர்ஷ்டம் துரத்தும் விஜு பிரசாதின் தனிப்பட்ட வாழ்க்கையும், அதனால் அவன் அடையும் மனச்சோர்வும் (depression) படத்தின் முதல் அரை மணிநேரமாக உள்ளது. மல்லூஸிற்கு எதையும் நிதானமாகச் சொல்லியே பழகிவிட்டது. தமிழ்ப் படங்கள் நூறில் இருந்து நூற்றிருபது நிமிடங்கள் கால அளவிற்குச் சுருங்கி வரும் வேளையிலும், அசால்ட்டாக 165 முதல் 180 நிமிடங்கள் வரை இன்னும் படமெடுத்து வருகிறார்கள்.

பிறருக்கு நம்பிக்கையூட்டும் மோட்டிவேஷனல் ஸ்பீக்கர் வேலை செய்து வரும் விஜு பிரசாத்திற்கு ஒரு கனவு உண்டு. தனக்காகக் காத்திருக்கும் ஆயிரம் பேர் கூடியுள்ள அரங்கத்தில் பேசவேண்டுமென்பதே அது. அக்கனவிற்கு ஏற்றவாறு அவனுக்கு ஒரு வேலை கிடைக்கிறது. மக்களின் உணர்வுகளோடு விளையாடும் அந்த வேலைக்குப் பெயர் “மிராக்கிள் ஹீலர்”. அதாவது மருந்துகளின் உதவியில்லாமல், இறைவன் மீதுள்ள உண்மையான விசுவாசத்தினாலும், தொடர் பிரார்த்தனையாலும், எந்த நோய்மையும் அதிசயத்தக்க வகையில் சொஸ்தமாகிவிடும் என கிறிஸ்துவ மத நம்பிக்கையாளர்களின் மனதில் பதிக்கும் ஓர் அமர்க்களமான பாஸ்டர் (pastor) வேலை. விஜு பிரசாத், பாஸ்டர் ஜோஷ்வா கார்ல்டனாக மாறுகிறான். ஜோஷ்வா அற்புதங்கள் நிகழ்த்துவதாக மக்களை நம்ப வைக்க எத்தகைய தில்லுமுல்லுக்கள் பின்னணியில் அரங்கேறுகின்றன, அவற்றால் கிடைக்கக் கூடிய பணம் எவ்வளவு என மத வியாபாரிகளின் சொரூபத்தைப் படம் விளாசித் தள்ளியுள்ளது. இந்த விளாசல், மதத்தைக் கார்ப்ரேட் பிசினஸாகப் பாவிக்கும் எவருக்கும், எந்த மத வியாபாரிக்கும் பொருந்தும்.

நடிப்புப் பேரரக்கனான ஃபஹத் ஃபாஸில் எப்பொழுதும் போல் கலக்கியுள்ளார். பல இடங்களில் பொறுமையைச் சோதிக்கும் படத்தைத் தன் எதார்த்த நடிப்பால் சமன் செய்கிறார். சாலமன் டேவிஸாக நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு இயல்பாய் நடிக்க வருகிறது என்பதற்கு இப்படமும் சான்று. ஃபஹத் ஃபாஸிலுக்குப் பயிற்சி தரும் அவரச்சனாக நடித்துள்ள திலீஷ் போத்தனும் கவனிக்க வைக்கிறார். மகள் மீது பிரியம் வைத்துள்ள தோமஸ் குட்டியாக நடித்திருக்கும் விநாயகத்தின் பாத்திர உருவாக்கம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

படத்தின் முதல் முப்பத்தைந்து நிமிடங்கள் மட்டுமே ஒரு மலையாளப் படம் பார்த்த நிறைவினைத் தருகிறது. அதற்குப் பின்னான படம், கிறிஸ்துவ மதத்தை வியாபாரமாகப் பயன்படுத்துவோர்களின் முகமூடி கிழிபடுவதை ரசிக்கும் குரூரக் கிளர்ச்சியை மட்டுமே அளிக்கிறது. க்ளைமேக்ஸில், சாத்தியமேயில்லாத வகையில் தோமஸ் தர்மத்தை நிலைநாட்டிவிடும் பொழுது, தமிழ்ப்படம் பார்க்கின்றோமோ என்ற சந்தேகம் வந்துவிடுகிறது. ‘உஸ்தாத் ஹோட்டல்’ படத்தில், இயக்குநர் அன்வர் ரஷீத் நிகழ்த்திய மேஜிக் இப்படத்தில் சுத்தமாக இல்லை. தனி மனிதனின் அகத் திறப்பு பற்றிய படமாக இல்லாமல், ஒரு சமூக அவலத்தை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு ட்ரான்ஸ் தேங்கிவிடுவது அதற்குக் காரணமாக இருக்கலாம். சுலபமாய், காரில் இருந்து இறங்குவது போல் தன் கடந்தகாலத்தை உதறி Amsterdam பறக்கிறார் விஜு. முதலாளியைக் கைநீட்டிக் காட்டிக் கொடுப்பதால் மட்டும் ஒருவன் புனிதனாகி விடமுடியுமா என்ன? ஃபேன் சுழுலும் பொழுதெல்லாம், எப்படி விஜுவின் கடந்த காலம் அவனைத் தொந்தரவு செய்கிறதோ, அப்படி கைகளில் மகளை ஏந்தியவாறு துரத்தும் தோமஸின் முகமும் உள்நின்று இறுதி மூச்சு வரை உறுத்திக் கொண்டேயிருக்கும்.