Shadow

மது வடலாரா விமர்சனம்

mathu-vadalara-review

நாயகனும், நாயகனின் நண்பனும் ஒரு ஆன்லைன் டெலிவெரி கம்பனியில் டெலிவெரி பாய்ஸாக வேலை செய்கிறார்கள். நாயகனின் நண்பன் கேஷ் ஆன் டெலிவெரி பண்ணும்போது கஸ்டமர் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு நோட்டை மறைத்துவிட்டு, “சார் 500 ரூபாய் குறையுது, 100 ரூபாய் குறையுது” என ஏமாற்றிப் பணத்தை அபகரிப்பார்.

இதைப் பார்த்த நாயகனும் அதைப் போல முயற்சி செய்யப் போக, அவன் பல சிக்கல்களில் மாட்டுவதுதான் கதை. வித்தியாசமான மேக்கிங்கால் கவர்ந்துள்ளார் இயக்குநர்.

ஒரு கஸ்டமர். அதுவும் பாட்டி. அப்பாட்டியை ஏமாற்ற முயன்று, அப்பாட்டியிடம் மாட்டிக் கொள்கிறார் நாயகன். அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்யும்போது பாட்டி இறந்து விடுகிறார். பாட்டியின் பிணத்தை மறைக்க அந்த வீட்டுக்குள் போய், அது தேவையில்லாமல் பெருஞ்சிக்கலில் இழுத்துவிட்டு விடுகிறது.

அதைச் சமாளிக்க முடியாமல் அவ்வீட்டிலேயே மயங்கிவிடும் நாயகன், மீண்டும் விழிக்கும் பொழுது, ரத்தத்தால் தோய்ந்த பிணத்தின் அருகில் கிடப்பதை உணர்கிறார். என்ன ஏதென்று புரியாமல், அலறியடித்தவாறு தனது டெலிவெரி பேக் எடுத்துக் கொண்டு, வீட்டுக்கு வந்தால், அந்த பையில் 50 லட்சம் பணமிருக்கிறது.

பைக்குள் இருந்த டெலிவரி பார்சல்களை எடுக்க மறுபடியும் அந்த வீட்டுக்கு நண்பர்களோடு செல்கின்றான் நாயகன். அங்கே அவனுக்கு பல அதிர்ச்சிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. பாட்டி என்னானார், நாயக்ன் அருகில் இறந்து கிடந்தது யார், யார் நாயகனை அந்தக் கொலைவழக்கில் சிக்க வைத்தது என பயங்கர ட்விஸ்ட்களாகப் படம் பயணிக்கிறது.

படத்தின் நாயகன் ஸ்ரீ சிம்ஹா, பாகுபலி பட இசையமைப்பாளர் கீரவாணியின் இளைய மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்குப் பக்க துணையாக நகைச்சுவையில் கலக்கியுள்ளார் சத்யா. எழுதி இயக்கியுள்ள இளம் இயக்குநர் ரித்தேஷ் ராணாவிற்கு இது முதற்படம். ‘மது, வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு’ என பாட்டியின் குரலில் ஆரம்பிக்கும் படம் நெடுகேவும் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. குறிப்பாக, படம் நெடுகே ஒரு டிவி சீரியல் காட்டப்படுகிறது. அச்சீரியலில், நெற்றியில் சுடப்படும் நாயகன் செய்யும் அட்ராசிட்டிகள் அதகளம். அவர்கள் கலாய்த்துள்ள நெடுந்தொடரின் மூலம், சன் டிவியில் வந்த ஒரு தமிழ் சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாசமான த்ரில்லிங் படவிரும்பிகளுக்கான படமிது. நாயகன் அந்த வீட்டில் மாட்டுனதிலிருந்து, அவன் தப்பிப்பானா மாட்டானா, இதெல்லாம் யார் செய்றா என சீட் நுனிக்கு கொண்டு வந்துவிடுகின்றனர். கதாநாயகியும், பாடல்களும் இல்லாத இந்த த்ரில்லர் படம், அமேசான் ப்ரைமில் காணக் கிடைக்கிறது.

ரமேஷ் சுப்புராஜ்