Shadow

கவண் விமர்சனம்

Kavan Review

சமமற்ற இருவருக்குள் நடக்கும் சண்டைக்கு, பைபிளில் வரும் கோலியத், டேவிட் கதையை உதாரணம் காட்டுவார்கள். சிறுவனான டேவிட் உண்டிவில் கொண்டு ஆஜானபாகு கோலியத்தை வீழ்த்திவிடுவான். அப்படி, வில்லன் ஆகாஷ்தீப்பின் கார்பொரேட் டி.வி. நிறுவனமான ஜென் 1-ஐத் தகர்க்கிறார் முத்தமிழ் டி.வி. நிருபரான விஜய்சேதுபதி.

படத்தின் சர்ப்ரைஸ் விஷயமென்றால், அது பவர் ஸ்டார் வரும் காட்சிதான். முதல் முறையாக, அவர் தோன்றும் காட்சியொன்று ரசிக்கும்படியாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு அவர் பேசும் வசனமும் துணை புரிந்துள்ளது. எழுத்தாளர்கள் சுபா மற்றும் கபிலன் வைரமுத்துவின் வசனங்கள் படத்திற்கு உதவி செய்துள்ளன. ஆனால், டி.ராஜேந்தர் தான் வழக்கம் போல் இடம் பொருள் ஏவல் பிரக்ஞையின்றி அடுக்கு மொழியில் கடுப்பேற்றுகிறார். எனினும் க்ளைமேக்ஸில், ‘வாடா என் மச்சி, வாழைக்காய் பஜ்ஜி’ என டேபிளைத் தட்டிக் கொண்டே பாடும் பொழுது திரையரங்கில் கைதட்டல் ஒலி எழுகிறது. தன் பாணியைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டிருந்தால், இது அவரது கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்திருக்கும்.

குடித்துக் கொண்டேயிருக்கும் அரசியல்வாதி தீரன் மணியரசாக நடித்திருக்கார் போஸ் வெங்கட். படத்தில் நடித்திருக்கும் அனைத்துக் கதாபாத்திரங்களுமே தன் பங்கினை நிறைவாகச் செய்துள்ளார்கள். முக்கியமாக, ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணா படத்தின் பிரதான வில்லனான ஆகாஷ்தீப்பை விட குயுக்தியை அழகாக வெளிப்படுத்தியுள்ளார். அயன் படத்தின் எச்சம் போல் மீண்டும் அதே ஹேர்-ஸ்டைலுடன் ஆகாஷ்தீப் தோன்றியுள்ளதை ரசிக்க முடியவில்லை.

கோ படத்தில் எழுத்து ஊடகத்தைக் கதைக்குத் தேர்ந்தெடுத்திருந்த கே.வி.ஆனந்த், இம்முறை காட்சி ஊடகத்தைக் களமாக்கியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பது இலை மறை காய் மறையாக முன்பே தெரிந்திருந்தாலும், பொட்டில் அறைத்தாற்போல் போட்டு உடைத்துள்ளார் இயக்குநர் கே.வி.ஆனந்த். படத்தின் நீளத்தைப் பொருட்படுத்தாமல், போதுமான நேரம் எடுத்துக் கொண்டு அக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். மேற்பார்வையாளர் பாவனாவாக நடித்துள்ள பெண்மணி தானேற்ற பாத்திரத்தில் மிகக் கச்சிதமாக நடித்துள்ளார்.

கோபத்தில் கொதிக்கும் விஜய் சேதுபதியை ஆற்றுப்படுத்தும் காட்சியில் மடோனா செபஸ்டியன் கலக்கியுள்ளார். அதன் பின், நாயகனைப் பார்த்துப் பிரமிக்கும் நாயகியினுடைய யூஷ்வல் வேலையைச் செய்கிறார். விஜய்சேதுபதி தன் மாடுலேஷன்களால் காட்சிகளைச் சுவாரசியப்படுத்தியுள்ளார். கலவரமானாலும் சரி, ஏரிக்குப் போடப்பட்டிருக்கும் வேலியைப் பாதுகாக்கும் சாமானிய செக்யூரிட்டி ஒருவரை ஊர் மக்கள் சேர்ந்து நையப்புடைக்கும் பொழுது சரி, கர்மசிரத்தையாகக் கேமிராவில் படம் பிடிக்கிறார் விஜய்சேதுபதி.

அப்துலாக நடித்திருக்கும் விக்ராந்தும், அவருடன் போராட்டத்தில் தோள் கொடுக்கும் கல்பனாவாக நடித்திருக்கும் தர்ஷனாவும் படத்தின் சீரியஸ் மோடிற்கு உதவியுள்ளனர். படத்தின் இரண்டாம் பாதியின் யதார்த்தமற்ற மிகைத்தன்மை அதன் சுவாரசியத்தையும் மீறி, நீளம் காரணமாக அலுப்படைய வைக்கின்றன. படத்தின் இன்னொரு கலர்ஃபுல் அம்சம் அதன் கலை வடிவமைப்பு. கலை இயக்குநர் D.R.K.கிரணிற்கு, கவண் பேர் சொல்லும் படமாக அமையும்.