Shadow

“வெளிப்படையான விவாதத்தை வைக்கும் படம்” – வினீத் | காதல் என்பது பொதுவுடைமை

காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வினீத், ரோகிணி, லிஜாமோல் ஜோஸ், கலேஷ், அனுஷா, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், படத்தொகுப்பாளர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்தப் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தானஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் ‘பூ’ சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பாலாஜி தரணிதரன் பேசுகையில், “படம் பார்த்ததும், படக்குழுவின் மீது ரொம்ப மரியாதை வந்துச்சு. ஒரு விஷயத்தை எடுத்து எவ்ளோ பொறுப்புணர்ச்சியோட பண்ண முடியுமோ அவ்ளோ கரெக்டா பண்ணியிருக்காங்க. அதே சமயம் ஆடியன்ஸ்க்குத் தேவைப்படுற சுவாரியசமும் படத்தில் இருந்தது. படம் முடியும் வரையிலுமே நான் என்ஜாய் பண்ணேன். நான் பார்த்தப்போ, க்வியர் கம்யூனிட்டியில் இருந்து நிறைய பெண்கள் வந்திருந்தாங்க. ரொம்பச் சந்தோஷப்பட்டாங்க. ‘நம்ம விஷயத்த ஒருத்தங்க படமா எடுத்திருக்காங்களே! பேசக் கூச்சப்படுற, பேசத் தேவையில்லன்னு அவாய்ட் லண்ற விஷயத்த, ஒருத்தவங்க முன்னாடி வந்து படமா எடுத்திருக்காங்கன்னு ஒரு சந்தோஷம். அவங்க முகங்களைப் பார்க்கிறப்ப எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

இயக்குநர் ‘பூ’ சசி பேசுகையில், ” நான் பின்னணி இசையையும், பாடலையும் மிகவும் ரசித்தேன். இந்த படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். சில இயக்குநர்கள் மக்களுக்கு பிடித்த விஷயத்தை எடுப்பார்கள். அடுத்தவங்க எடுக்கத் தயங்குற, இல்ல பயப்படுற விஷயத்தை மட்டுமே படமா எடுக்கிறதுன்னு கங்கணம் கட்டிட்டு சில இயக்குநர்கள் இருப்பாங்க. அப்படியொரு இயக்குநர்தான் ஜெயபிரகாஷ். ‘நாம் உண்மையைப் பேசினதும் நம்ம மனசு சந்தோஷப்படுற அளவுக்கு சமூகம் மலினப்பட்டுப் போயிருக்கு’ என ஜெயமோகன் எழுதியிருப்பார். கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில், இப்படியொரு படம் வர்றப்ப, இதை போல்ட் அட்டெம்ப்ட் என்றுதான் சொல்லவேண்டும். ரொம்ப முக்கியமான படம். பெரிய டிஸ்கஷனை ஸ்டார்ட் பண்ணப்போகுது. இந்த முக்கியமான விஷயத்தை எடுத்து ஜெயபிரகாஷ் ஜெயிச்சிருக்காரு. அவருக்கு வாழ்த்துகள்” என்றார்.

நடிகர் வினீத், “நான் இந்தப் படத்தில் நடிக்கும் போது படம் எவ்வாறு இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் படம் பார்க்கும்போது அற்புதமாக வந்திருக்கிறது. படம் குறித்து நான் அதிகமாக பேசவில்லை. அது மக்கள் கண்டிப்பாகப் பார்த்துப் பேசுவார்கள். இந்த மாதிரியாக படங்களில் தான் முக்கியமான கருத்துக்கள் பலவற்றைப் பார்க்க முடிகிறது. இந்தப் படம் வெளிப்படையான விவாதத்தை வைக்கிறது. இது அனைவருக்கும் பிடித்தமான ஒரு படமாக அமையும்” என்றார்.

இப்படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தனஞ்செயன், “தமிழ் சினிமாவில் இப்படிபட்ட படம் மெயின் ஸ்க்ரீனில் வருவதில்லை. தமிழ் சினிமாவில் ஒரு வாரத்திற்கு 7 இல் இருந்து 8 திரைப்படங்கள் வருகின்றன. இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. ஒரே நேரத்தில் நிறைய படங்கள் வெளி வந்தால் மக்கள் பார்க்க மிகவும் சிரமமாக இருக்கும். பொறுத்திருந்து வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் கோரிக்கை விடுக்கிறேன்” என்றார்.