
காதல் என்பது பொதுவுடமை படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. வினீத், ரோகிணி, லிஜாமோல் ஜோஸ், கலேஷ், அனுஷா, பாடலாசிரியர் உமாதேவி, ஒளிப்பதிவாளர் சரவணன், படத்தொகுப்பாளர் டேனி, இசையமைப்பாளர் கண்ணன் நாராயணன், இந்தப் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர் தானஞ்செயன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் மணிகண்டன், இயக்குநர் ‘பூ’ சசி, இயக்குநர் பாலாஜி தரணிதரன், நெல்சன் வெங்கடேசன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
இயக்குநர் ஜெயபிரகாஷ், “லென்ஸ் முடிச்சுட்டு அடுத்து என்னென்னு தெரியாம இருந்தது. ஒரு நண்பரைப் பார்க்க பெங்களூரு போயிருந்தேன். பீர் நல்லா இருக்கும் ஒரு பாரில் அமர்ந்து நண்பருடன் பேசிக் கொண்டிருந்தேன். கன்னடத்தில் படம் எடுத்தா, 17 லட்சம் வரை மானியம் கிடைக்கும்ன்னு சொன்னார். மறுபடியும் சின்ன பட்ஜெட்டில் ஒரு படமா என யோசித்துக் கொண்டே, ஒரு டிஷ்யூ பேப்பரில் கிறுக்கின கதைதான் இது. சென்னை வந்து கோ-டைரக்டரிடம் பேசினேன். ‘தமிழ்லயே பண்ணலாமே!’ என்றார். திரைக்கதை எழுதி வச்சுட்டேன்.
இந்த ஐடியா எங்க இருந்து தோணுச்சுன்னா, ஒரு முற்போக்குவாதியான நண்பர், மியூசிக் வீடியோக்கான ஐடியா கேட்டார். ‘ஒரு குக்கூன்ல இருந்து ஒரு பட்டர்ஃபிளை கஷ்டப்பட்சு வெளில வந்து சிறகு முளைச்சு பறக்குது. அதே மாதிரி, பேரலலா கட் பண்ணி, ஒரு பொண்ணு அழகான டான்ஸை பிரசென்ட் பண்ணி, அவளோட செக்ஸுவாலிட்டியை அவங்கம்மாகிட்டச் சொல்றா’ எனச் சொன்னேன். இல்லை, இந்த ஐடியா வேணாம், வீட்ல காட்ட முடியாது என்றார். அது என் மனசுக்குள்ள ரொம்ப ஆழமா பதிஞ்சிடுச்சு. அதன் பின் நிறைய ரிசர்ச் பண்ணி, அம்மக்கள் நிறைய பேர்கிட்ட பேசி ஸ்க்ரிப்ட் முடிச்சுட்டேன்.
என்னோட லென்ஸ் ரிலீஸ் ஆச்சு. தயாரிப்பாளர்கள் வந்தாங்க. ஆனா போட்ட பணத்தை எடுக்கும் கதையாக இல்லாததால் இந்தப் படம் டேக் ஆஃப் ஆகலை. முபியில் வெளியான என் ‘மஸ்கிட்டோ ஃபிலாஸஃபி’ பார்த்துட்டு ஜியோ பேபி தொடர்பு கொண்டார். அப்போ அவரது ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ வரலை. அவர் என்னைத் தொடர்பு கொண்டு, ‘தமிழ்ல ஒரு படம் பண்ணலாம்னு இருக்கோம்’ என்றார் லாக்-டவுன் சமயத்தில். அவருக்குக் கதை சொன்னேன். உடனே பண்ணலாம் என்றார். இந்தப் படம் இப்படித்தான் தொடங்கியது” என்றார்.
ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா படங்களின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், ” ‘காதல் என்பது பொதுவுடைமை’ படத்தைப் பார்த்துட்டு வீட்டுக்குப் போகும்போது, பல விஷயங்கள் ஞாபகத்துக்கு வந்தது. 10- 15 வருஷத்துக்கு முன்னாடி, ஷான் பென் நடித்த ‘மில்க் (Milk)’ எனும் படத்துக்குப் போறேன். அமெரிக்காவில் ஒரு ஹொமோசெக்ஸ்வல் முதல்முறையாக அரசப்பதவிக்கு வந்த கதை அந்தப் படம். நாம ஒரு சமூகக் கட்டமைப்பில் மாட்டிட்டு இருக்கோம். அது எப்படி உருவாகுதுன்னா, சம்பிரதாயங்களும் சட்டதிட்டங்களும், நம்ம பழக்கவழக்கங்களும் ஒரு சுழலுக்குள் நம்மை வலுவா இழுத்து இயக்கிக்கிட்டு இருக்கு. அந்தக் கட்டமைப்பு உருவாக என்ன காரணம்ன்னு பின்னாடி தேடிப் போனா சில்லறைத்தனமா, எளிதில் புரியக்கூடிய ஒரு விஷயத்துல தான் அது ஆரம்பிச்சிருக்கும். உலகம் முழுவதும் க்வியர் (Queer) கம்யூனிட்டி பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுவதற்குக் காரணமாக இருப்பது கலையும் திரைப்படங்களும்தான். அந்த வகையில் இந்தப் படத்திற்கு என் மரியாதையும் அன்பும். ஓரின உறவுகளைத் தொடர்ந்து கொச்சைப்பசுத்தும் வேலைகள் பல காலமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஜேபி, உணர்வுகளுக்கும் சென்ஸிட்டிவிட்டிக்கும் யதார்த்தத்துக்கும் உண்மைக்கும் அதிகமான இடமளித்திருக்கார். ஒரு சில ஆண்டுகளுக்கு முன், கத்தோலிக்க திருச்சபையின் போப்பாண்டவர், தான் ஹோமோசெக்ஸ்வல் ரிலேஷன்ஷிப்பை சப்போர்ட் செய்றதாகச் சொல்றார். அவர் என்ன சொல்றார்ன்னா, ‘சக மனிதனை நேசி என்பது என் அடிப்படை. அந்த அடிப்படைல இதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்’ங்கிறார். மற்றவர்கள் போல் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்வதற்கான சப்போர்ட் அவர்களுக்குத் தேவைப்படுகிறது” என்றார்.