Shadow

கிங்ஸ்டன் – நம்ம ஊரு பாட்டி சொன்ன கதை

ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் என்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இயக்குநர் வெற்றிமாறன், ”ஜீ.வி. பிரகாஷ் குமார் சோர்வே இல்லாமல் எப்போதும் உற்சாகமாகப் பணியாற்றிக் கொண்டே இருப்பார். இதுதான் அவரின் சிறப்பான அடையாளம். எந்த இயக்குநர், எந்தத் தருணத்தில் அவரைச் சந்திக்க வேண்டும் என்று அவரைத் தொடர்பு கொண்டாலும், உடனடியாகத் தொடர்பு கொண்டு சரியான பதிலைச் சொல்வார். அவர் பணி செய்வதற்கு ஒருபோதும் மறுப்பு சொன்னதே இல்லை. இது அவருடைய தனித்திறமை என்றே சொல்லலாம்.

பத்தாண்டு காலம் இசையமைப்பாளராகப் பணியாற்றிய பிறகு அவர் நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அப்போது நான, ‘இசைப்பணி நன்றாகத்தானே சென்று கொண்டிருக்கிறது. எதற்கு திடீரென்று நடிப்பு?’ என்று கேட்டேன். ‘ஒரே அறையில் இருந்து பணியாற்றுவது சோர்வைத் தருகிறது. நான் வெளியில் வந்து பணி செய்ய விரும்புகிறேன்’ என்றார்.

ஆனால் அவர் நடிக்க வந்த பிறகு அவருடைய இசை திறமை மேலும் விரிவடைந்தது. அவரே நடிகராக மாறிப் போனதால் தன்னுடைய இசையை அவரால் எளிதாக மேம்படுத்திக் கொள்ள முடிந்தது. அத்துடன் மட்டுமல்லாமல் அவர் கற்றுக் கொள்வதற்கு எப்போதும் தயாராகவே இருக்கிறார். இந்தப் படத்திலும் ஒரு நடிகராகவும், ஒரு இசையமைப்பாளராகவும், தன்னை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்.

சிறிது நாள் முன் ஒரு நாள் திடீரென்று போன் செய்து, ‘நான் தயாரிப்பாளராகப் போகிறேன்’ என்றார். வாழ்த்து சொல்லிவிட்டு, ‘யார் இயக்குநர்?’ என்று கேட்டேன். புது இயக்குநர். “ஸீ ஃபேண்டஸி (Sea Fantasy) ஜானர் படம். இந்தியாவில் இதுதான் ஃபர்ஸ்ட் என உற்சாகம் குறையாமல் சொன்னார். இந்தப் படத்தின் மீது அவர் அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்.

இந்தப் படத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான அரங்கத்தைப் பார்வையிட சென்று இருந்தேன். அந்த அரங்கம் உண்மையிலேயே வியப்பை ஏற்படுத்தியது. கடல் அலை, படகு, மழை, பனி என அதன் இயக்கம் பற்றித் தொழில்நுட்ப ரீதியாக விவரித்தார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு என் மனதில் ஒரு கணக்கைப் போட்ட, ‘பட்ஜெட் எவ்வளவு?’ என்று கேட்டேன். நான் எதிர்பார்த்த பட்ஜெட்டில் 10% தான் இதன் பட்ஜெட் என்று சொன்னார்கள். உண்மையில் அதிசயித்தேன். சின்ன பட்ஜெட்டில் பிரம்மாண்டமான அரங்கம். இதற்காகவே உழைத்த அனைவருக்கும் நன்றி.

நடிகர்கள் குறிப்பிட்டது போல் இந்த பிரம்மாண்டமான அரங்கத்தில் நடிப்பது கடினம் தான். சவாலானது தான். அவர்களின் கடின உழைப்பு திரையில் ரசிக்கும் வகையில் இருக்கிறது. இந்த அளவிற்கு அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பைத் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வழங்கிய ஜீ.வி. பிரகாஷ் குமாருக்கும், அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாக திகழும் இயக்குநருக்கும் வாழ்த்துக்கள்.

இது அடிப்படையில் தொழில்நுட்ப ரீதியிலான படைப்பு. தொழில்நுட்பக் கலைஞர்கள் நேர்த்தியாக உழைத்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் கமர்ஷியல் வெற்றி ஜீ வி பிரகாஷ் குமார் போன்ற சினிமா மீது ஆர்வமுள்ள தயாரிப்பாளருக்கு மேலும் பல தயாரிப்புகளை உருவாக்குவதற்கு உதவும். ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ஜீ.வி. பிரகாஷ் குமார் , ”இயக்குநர் வெற்றிமாறன் நம்முடைய வீட்டில் இருக்கும் அம்மா போன்றவர். அம்மா எப்போதும் பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக எச்சரிக்கை செய்து கொண்டு இருப்பார். அதன் பிறகு அவர்கள் தான் வழி காட்டுவார்கள். ‘நான் நடிக்கிறேன்’ என்று சொன்னவுடன் முதலில் மறுப்பு தெரிவித்தாலும், அதன் பிறகு நடிப்பு பயிற்சிக்காக என்னை அனுப்பி வைத்ததும் வெற்றி மாறன் தான். 18 வருடங்களாக அவரும் நானும் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

படப்பிடிப்பு தளத்தில் நடிகை திவ்யா பாரதி நடிக்கும் போது மட்டும் எந்த ஒரு திருத்தத்தையும் இயக்குநர் கமல் சொல்ல மாட்டார். இது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. அதன் பிறகு தான் அவருடைய மனைவி பெயரும் திவ்யபாரதி என்று தெரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் அவர் அவருடைய மனைவி மீது வைத்திருக்கும் அன்பைத் தெரிந்து கொண்டேன்.

இது ஒரு பெரிய கனவு தான். ஹாலிவுட் வெளியாகும் ஹாரி பாட்டர் போன்ற படங்களை பார்க்கிறோம். இதுபோல் ஏன் நம்மளால் உருவாக்க முடியாது என யோசிப்பேன். அவர்கள் அவர்களுடைய பாட்டி கதையை எடுக்கும் போது நாம் நம்முடைய பாட்டி கதையை எடுக்கலாமே என யோசித்தோம். நம்ம ஊரு பாட்டி கதை போன்ற கதை தான் கிங்ஸ்டன். ஒரு ஃபேண்டஸி.

இந்தப் படத்தின் முதல் காட்சியை இயக்கி கொடுத்த கமல்ஹாசனுக்கும் நன்றி. அவரிடம் சென்று நான் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறேன். எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் தொடங்கும் முதல் படத்தின் முதல் காட்சியை நீங்கள் தான் இயக்க வேண்டும் என்று என் விருப்பத்தைச் சொன்னேன். அவரும் எந்தவித மறுப்பும் செல்லாமல் உடனடியாக வந்து இயக்கி தந்தார். இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.