
ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் என்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இத்திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து எதிர்வரும் மார்ச் மாதம் ஏழாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, ”இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்குப் பிறகு பின்னணி இசையில் ஜீ.வி. பிரகாஷ் குமாரின் திறமை பளிச்சிடுகிறது. ‘அசுரன்’ படத்தினைத் தயாரித்தேன். அந்தத் திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தினைத் தெலுங்கில் ரீமேக் செய்தபோது அப்படத்தில் நடித்த வெங்கடேஷ், தமிழ் ‘அசுரன்’ திரைப்படத்தின் பின்னணி இசை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆலோசனை சொன்னார். அதனை ஜீ.வி. பிரகாஷிடமும், வெற்றி மாறனிடமும் சொன்ன போது எந்தவிதத் தயக்கமில்லாமல் உடனே பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்தனர். ஜீ.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசையால் அந்தப் படம் தெலுங்கிலும் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ராசா’ பாடல் ஹிட் ஆகும்.
வெற்றிமாறனிடம் பேரலல் யுனிவர்ஸ் என்றால் என்ன எனக் கேட்டேன். எது உச்சமோ அதற்கு நிகரானது என பதிலளித்தார். அந்த வகையில் இந்த நிறுவனம் தமிழில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்” என்றார்.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினோய், ”அடியே படத்தின் படப்பிடிப்பின் போது ஜீ. வி. பிரகாஷ் குமார் இது போன்றதொரு புதிய ஜானரில் கதையைக் கேட்டிருக்கிறேன். அதில் பணியாற்றுகிறீர்களா எனக் கேட்டார். கதையைக் கேட்டு சம்மதம் தெரிவித்தேன். படத்தில் பணியாற்ற தொடங்கும் தருணத்தில், ‘இந்தப் படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது. சர்வதேச தரத்தில் இந்த படைப்பு உருவாக வேண்டும்’ என அவருடைய விருப்பத்தைத் தெரிவித்தார். படத்தில் பணியாற்றும்போது ஒளிப்பதிவு தொடர்பான நுட்பங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர் என்பதால், இந்தப் படத்திற்காக புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துங்கள் என்றார். அவர் சொன்னது போல் இந்தப் படத்தில் வி எஃப் எஸ் காட்சிகள், கருவிகள், ஒளி அமைப்பு, அரங்கம் என அனைத்து விசயத்திலும் பெரிய பங்களிப்பை வழங்கினார்” என்றார்.
கலை இயக்குநர் எஸ். எஸ். மூர்த்தி, ”இந்தப் படத்திற்காகக் கடலும் கப்பலும் இணைந்த வகையில் பிரத்தியேக உள்ளரங்கம் ஒன்றை வடிவமைப்பது தான் சவாலாக இருந்தது” என்றார்.
இயக்குநர் கமல் பிரகாஷ், ”நான் மிகக் குறைந்த பட்ஜெட்டில் குறும்படங்களை இயக்குபவன். ஆனால் நமக்கு ஒரு ஐடியா தோன்றும். அந்த ஐடியாவிற்கு பட்ஜெட் கிடையாது. ஜீவி பிரகாஷ் சாரிடம் தொடர்ந்து ஆறாண்டுகள் பயணித்திருக்கிறேன் அந்தப் பயணத்தில் ஒரு நாள் இப்படத்தைப் பற்றிய ஐடியாவை அவரிடம் சொன்னேன். 20 ஆயிரம் ரூபாயில் குறும்படம் இயக்கும் என்னை நம்பி கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் முதலீடு செய்து ‘கிங்ஸ்டன் ‘ திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார் தயாரிப்பாளரான ஜீ.வி. பிரகாஷ் குமார். இதற்காக அவருக்கு முதலில் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் திரைக்கதையில் ஆக்சன் தனித்து இல்லாமல் திரைக்கதையுடன் இணைந்தே இருக்கும். இதனால் சண்டைப் பயிற்சி இயக்குநர் திலீப் சுப்பராயனின் பங்களிப்பும் அதிகம். இதனால் திட்டமிட்ட நாட்களுக்குள் திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் படத்தின் அனைத்துப் பணிகளையும் நிறைவு செய்தோம்” என்றார்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, ”இப்படத்தின் இயக்குநர் கமல் பிரகாஷ் என் நண்பர். அவரைக் கடந்த ஆறு ஆண்டுகளாக ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆதரவு வழங்கி வந்தார். அதற்காக ஜீ வி பிரகாஷ் குமாருக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு முறை இப்படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றேன். பிரம்மாண்டமாக அரங்கம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்து வியந்தேன். மகிழ்ச்சியும் அடைந்தேன். இயக்குநரின் கற்பனைக்கு வடிவம் கொடுத்த அனைவருக்கும் இந்தத் தருணத்தில் வாழ்த்துக்களையும் நன்றியையும் சொல்கிறேன். திவ்ய பாரதியும், ஜீவி பிரகாஷ் குமாரும் ‘பேச்சுலர்’ படத்தில் நன்றாக நடித்திருந்தார்கள். அவர்களுடைய கெமிஸ்ட்ரியும் நன்றாகவே இருந்தது. இந்தப் படத்திலும் அது இருக்கும் என்று நம்புகிறேன்.
இயக்குநர் கமல் பிரகாஷ் அடிப்படையில் தொழில்நுட்பத் திறமை மிக்கவர். திரையுலகில் ஏதாவது புதிய தொழில்நுட்பம் அறிமுகம் ஆகியிருக்கிறது என்றால், அதைப் பற்றி எங்கள் குழுவில் முதலில் தெரிந்து கொண்டு அதைப் பகிர்ந்து கொள்பவர் கமல் பிரகாஷ்” என்றார்.