
YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார், “’ஜோ’ படத்தின் பணிகள் நடைபெற்ற தருணத்திலேயே ரியோ ராஜிடம் இப்படத்தின் கதையைச் சொல்லிவிட்டேன். அவரும் அடுத்த படம் இதுதான் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ‘ஜோ’ படம் ஹிட்டான பிறகு ஏராளமான தயாரிப்பு நிறுவனங்கள் அவரை அணுகியது. அவர் ஏற்கனவே என்னிடம் சொன்ன வார்த்தைக்காக இந்த ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தினை நிறைவு செய்து தந்திருக்கிறார்.
இப்படத்தில் படப்பிடிப்பை 34 நாட்களில் நிறைவு செய்தோம். இதற்காக முழு ஒத்துழைப்பை வழங்கிய ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்பிரமணியம், 25 ஆவது படத்தில் பணியாற்றும் கலை இயக்குநர் சிவசங்கர், படத்தொகுப்பாளர் தமிழரசன் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுவாக ஒரு படத்திற்கு இயக்குநரை தான் கேப்டன் என்று சொல்வார்கள். ஆனால் இந்தப் படத்தை பொறுத்தவரை யுவன் சங்கர் ராஜா தான் கேப்டன். இந்தப் படத்தின் மூலம் என்னை போல் நிறைய பேர் அறிமுகமாகி இருக்கிறார்கள். இந்தப் படத்தில் ரெடின் கிங்ஸ்லி விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். படத்தில் சிக்கலான சூழலில் அந்த கேரக்டர் திரையில் தோன்றும். அவரும் அதைப் புரிந்து கொண்டு நன்றாக நடித்திருக்கிறார்” என்றார்.
நடிகர் ரியோ ராஜ், ” ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் அவருடைய இசையை எட்டாவது படிக்கும் போது கேட்டு ரசித்தேன். அப்போது ஆடியோ கேசட் இருந்தது. அதன் பிறகு சிடி வந்தது. அதன் பிறகு கம்ப்யூட்டரில் ப்ளே லிஸ்ட் வந்த போதும் கூட அவருடைய பாடல்கள்தான் முதலில் இருக்கும். என்னுடைய தொகுப்பாளர் பணியிலும் கூட ‘சென்னை 28 ‘படத்தில் ஜெய் கதாபாத்திரத்திற்காக யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பயன்படுத்திக் கொண்டேன். தற்போது இந்தப் படத்தில் எனக்காக யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இதற்காக அவருக்கு மகிழ்ச்சி கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்வீட்ஹார்ட் ஒரு கம்ப்ளீட் ரொமான்டிக் டிராமா. யுவன் சங்கர் ராஜாவின் இசையை ரசித்து அனுபவிக்கலாம். இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் மீது நான் வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றி இருக்கிறார். அவர் சினிமாவை மிகவும் நேசிக்கக் கூடியவர். ‘இவர் என் மாணவர்’ என பெருமையாகச் சொல்வேன். இந்த திரைப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி பிராண்ட் அம்பாசிடராக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பாடல் ஒன்றையும் எழுதி இருக்கிறேன்” என்றார்.
யுவன் சங்கர் ராஜா, ”இந்தப் படத்தின் பணிகள் எப்படி நடைபெற்றது என்றால் முதலில் ஒரு இன்ட்ரோ வீடியோ ஒன்றை வெளியிட்டோம். அதில் எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் படத்தின் பணிகள் முடிவடைந்திருக்கும். ஆனால் உண்மையில் இதுதான் நடந்தது. நான் டூர் போய்விட்டு வருவதற்குள் படத்தை நிறைவு செய்திருந்தார்கள். அதன்பிறகு படத்தைப் பார்த்தேன். படம் நன்றாக இருந்தது. அதன் பிறகு தான் எனக்கு உற்சாகம் ஏற்பட்டது. அதன் பிறகு இரண்டு பாடல்களை இணைத்தோம். அதன் பிறகு இன்றைக்கு ஸ்வீட்ஹார்ட் பிரம்மாண்டமாகத் தயாராகி இருக்கிறது. இது இயக்குநர் ஸ்வினீத்தின் கனவு. இவரைப் போன்ற ஏராளமான புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு” என்றார்.