பொலிட்டிக்கல் த்ரில்லரான கொடியில் தனுஷ், த்ரிஷா மற்றும் ப்ரேமம் புகழ் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர். எதிர் நீச்சல், காக்கி சட்டை படங்களை இயக்கிய R.S துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
தனுஷ், அனிருத் உடனான கூட்டணியை முறித்துவிட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்துள்ளதை அடுத்து இப்படத்தின் இசை மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
படத்தில் மொத்தம் 5 பாடல்கள். எழுதியவர்கள் விவேக்கும், அருண்ராஜா காமராஜூம் ஆவர்.
1. பாடல் – ஏய் சுழலி
பாடியவர்கள்: விஜய்நரைன் ரங்கராஜன்
விவேக் வரிகளில் ஒரு நகைச்சுவை கலந்த ரொமான்டிக் நாட்டுப்பாடல் இது. ஒரு அழகான நாட்டுப்பாடலுடன் ஜாஸை கலந்து ரசிக்கும்படியாகக் கொடுத்துள்ளார் சந்தோஷ். விஜய் நரைன் குரலில் கேட்பதற்கு இனிமையாக உள்ளது.
2. பாடல் – சிறுக்கி வாசம்
பாடியவர்கள்: ஆனந்த் அரவிந்தாக்ஷன், ஸ்வேதா மோகன்
சந்தோஷ் நாராயணன் இசையில் இன்னுமொரு மெலடி. பாடலை, ஸ்வேதாவும் அரவிந்தும் அழகாகத் தாங்கிப் பிடித்துள்ளனர் என்றே கூற வேண்டும். ‘குழையுறேன்.. புழியுறேன்’ பகுதிகள் ரசிக்கும்படியாக உள்ளது.
3. பாடல் – கொடி பறக்குதா
பாடியவர்கள்: தனுஷ், அருண்ராஜா காமராஜ்
கபாலியின் நெருப்புடா பாடலை அடுத்து இப்படத்திலும் ராப்பர் அருண்ராஜா காமராஜ்க்கு சந்தோஷ் வாய்ப்பளித்துள்ளார். வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார் அருண்ராஜா. தனுஷின் குரலும் பாடலுக்கு வலுவூட்டும்படி அமைந்துள்ளது. ஆங்காங்கே, ‘வீர துறந்தரா’ பாடலின் சாயல் வருவதைத் தவிர்த்திருக்கலாம். இருப்பினும் தனுஷ் ரசிகர்களுக்குச் சரியான ட்ரீட் இந்த டைட்டில் ட்ராக்.
4. பாடல் – வெட்டுப் போட்டு
பாடியவர்கள்: ஷங்கர் மகாதேவன்
ஷங்கர் மஹாதேவனின் பவர்ஃபுல்லான குரலில் வழக்கமான ஹீரோ அறிமுகப் பாடல். ஒரு மாஸ் பாடலைக் கொடுக்க முயற்சி செய்துள்ளார் சந்தோஷ். ஆவரேஜ் பாடல்.
5. பாடல் – ஆரிராரோ
பாடியவர்கள்: K.S. சித்ரா
சந்தோஷ் இசையில் சித்ராம்மாவின் முதல் பாடல். இது ஒரு தாலாட்டுப் பாட்டு என்று கூறிவிட முடியாது. ஒரு விதமான சோகத்தை விவேக்கின் ஆழமான வரிகள் சுமந்து வருகின்றன. சித்ராம்மா இப்பாடலை அவரது இதயத்திலிருந்து பாடியுள்ளார் என்றே கூற வேண்டும். இப்பாடலை ரசிகர்கள் திரையில் காணும் பொழுது எமோஷனலாவதைத் தவிர்ப்பது கடினமாகவே இருக்கக்கூடும்.
கொடி, சந்தோஷ் நாராயணின் மிகச் சிறந்த ஆல்பத்தில் ஒன்றாகச் சேராது. இருப்பினும் ரசிகர்களை மகிழ்விக்கும். ஏய் சுழலி, சிறுக்கி வாசம், கொடி பறக்குதா ஆகிய பாடல்கள் ரசிகர்களை நிச்சயம் முணுமுணுக்கச் செய்யும்.
– இரகுராமன்