Shadow

கொடி விமர்சனம்

Kodi Vimarsanam

தனுஷ் முதல் முறையாக இரட்டை வேடங்களில் நடிப்பதோடு அரசியல்வாதியாகவும் நடிக்கிறார். அதை விடக் குறிப்பிடத்தக்க விஷயம், தனுஷ்க்குச் சமமான முக்கியத்துவத்தோடு த்ரிஷா பாத்திரமும் அமைக்கப்பட்டுள்ளதே! நாயகன் இரு வேடங்களில் நடிக்கும் படத்தில், நாயகியொருவருக்கு மிக அழுத்தமான கதாப்பாத்திரம் அளிக்கப்பட்டது சொல்லொன்னா மகிழ்ச்சியை அளிக்கிறது.

அரசியலால் மக்களுக்கு நல்லது செய்யமுடியுமென நம்பும் கருணாஸ், தனது இரு மகன்களில் ஒருவரான கொடியின் முன் தீக்குளித்து விடுகிறார். அதன் பின், கட்சியே கதியெனக் கிடக்கும் கொடிக்கு, எதிர்க்கட்சியைச் சேர்ந்த ருத்ரா மீது காதல் வருகிறது. எதிரெதிர் கட்சிகளில் இருக்கும் தனுஷ் – த்ரிஷா காதல் என்னானது என்றும், தம்பி தனுஷ் ஏன் அரசியலுக்குள் வருகிறார் என்பதும்தான் கதை.

தனுஷின் ஒல்லியான உருவம் பேராசிரியர் கதாபாத்திரத்திற்கும் அந்நியமாக இருக்கிறது; அரசியல்வாதி பாத்திரத்தோடும் ஒட்டவில்லை. ஆனால், அரசியல்வாதி பாத்திரத்திற்கு மகுடம் வைத்தாற்போல் இருக்கிறது அவரது கம்பீரமான தாடி வைத்த முகம். அல்வா சாப்பிடுவது போல் மிக இலகுவாகவும் இயல்பாகவும் திரையில் தோன்றுகிறார். இரண்டு வேடம் எனினும், கன்னத்தில் விரல் பதியமளவு அனுபமா அறை வாங்கும் காட்சியைத் தவிர்த்து, ஒருவேடத்தால் எந்தச் சுவாரசிய முடிச்சுகளும் திரைக்கதையில் நிகழவில்லை.

படம் நெடுகேவும் தனியாளாகக் கொடியேற்ற வேண்டிய அசெளகரியத்தைத் தனுஷ்க்கு அளிக்காததோடு, கொடியை இயக்கும் லகானை இயக்குநர் துரை செந்தில்குமார், த்ரிஷா கையிலும் கொடுத்திருப்பது சிறப்பு. ‘அமைதிப் படை’ அமாவாசைக்குக் கிஞ்சித்தும் குறைவில்லாத கதாபாத்திரம் ‘தீப்பொறி ருத்ரா’. அதிகார போதை மனிதனை வேட்டையாடுகிறது என்பது தான் படத்தின் பேசுப்பொருள். அதைத் தெள்ளத்தெளிவாக த்ரிஷா பாத்திரத்தின் மூலம் சித்தரித்துள்ளார்.

அனுபமா வழக்கமானதொரு நாயகி எனினும், படம் சுட்டிக் காட்டும் முதன்மைப் பிரச்சைனைக்கு (ரசவாதக் கழிவு) இட்டுச் செல்லும் பாத்திரமாக அவரை உபயோகப்படுத்தியுள்ளது அழகு. ஜனநாயகக் கட்சியின் தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகர் நிறைவாகத் தன் பங்கைத் திரையிலாற்றியுள்ளார். வஞ்சம் நிறைந்த அரசியல்வாதியாக, இயக்குநர் மாரிமுத்து நேர்த்தியாக நடித்துள்ளார். இத்தகைய பாத்திரங்களில் சத்தமில்லாமல் கலக்கி வரும் இவர், தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராக அழுத்தமான முத்திரை பதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

‘ஏய் பொண்ணு ரொம்ப அழகா இருக்காடா. லவ் பண்ணுடா மகனே!’ என வழக்கம் போல் சொல்லாத அம்மாவாக சரண்யா பொன்வண்ணன். ‘என்றேனும் நீ தனிமைப்பட்டுப் போகும் பொழுது கொடியின் அருமை புரியும்’ என்ற அவரது வசனத்தோடே படம் முழு நிறைவைத் தருகிறது. அதை சில நொடிகளே தக்க வைக்கும் இயக்குநர், பகத் சிங்கைக் களத்தில் இறக்கி விட்டுவிடுகிறார். பகத் சிங்காக காளி வெங்கட் நடித்துள்ளார். கனமான க்ளைமேக்ஸை அப்படியே விடாமல், வழக்கமானதொரு தமிழ் சினிமாவாக நீர்த்துப் போகச் செய்வதைத் தவிர்த்திருக்கலாம் இயக்குநர். எனினும் பிரதான பாத்திரங்களின் மனநிலையைத்தான் கணக்கில் கொள்ளவேண்டும் என்ற விதியைச் சலுகையாக அளித்து, இயக்குநர் துரை செந்தில்குமாரைப் பாராட்டியே ஆகவேண்டும்.