நாயகன் இல்லாப் படங்கள் கூட அரிதினும் அரிதாய் வரும். முழுக்க முழுக்க பெண் நடிகர்கள் மட்டுமே நடித்துள்ள படமிது. திரையில் எந்தவொரு ஆணின் நிழலும் தப்பித் தவறியும் வந்துவிடக் கூடாதென மிகக் கவனமாக இருந்துள்ளார் மலையாள இயக்குநரான துளசிதாஸ்.
இதுவரை திரையில் வந்தேயிராத கதையினுடைய குறும்படம் ஒன்றினை எடுக்க நினைக்கும் திரைப்படக் கல்லூரி மாணவியான இனியாவிற்குள் ஓர் ஆவி புகுந்து கொள்கிறது. யாரந்த ஆவி என்பதும், அதன் மரணப்பசிக்குக் காரணம் ஏன் என்பதும், அதன் பசி அடங்கியதா என்பதும் தான் படத்தின் கதை.
நகைச்சுவை என்ற பெயரில் எடுக்கப்பட்டுள்ள காட்சிகளால் படத்தின் முதல் பாதி ரொம்பவே கடுப்பேற்றுகிறது. பாய் ஃப்ரெண்டுடன் உரையாடுவது போல் நாயுடன் பேசுகிறார் கோவை சரளா; ‘என் பட்டக்சில் உதைச்சது யார்?’ எனக் கேட்கிறார் ஆர்த்தி; ‘எனக்கு நிறைய பாய் ஃப்ரெண்ட்ஸ்’ என காதுக்கு ஒரு ஃபோனெனச் சல்லாபிக்கிறார் கோவை சரளா; பீர் குடித்து விட்டு நின்று கொண்டே வெட்டவெளியில் சிறுநீர் கழிக்கிறார் ஆர்த்தி. இவையெல்லாம் கதைக்கு உதவாத, சம்பந்தமேயில்லாத காட்சிகள். இதையெல்லாம் நகைச்சுவையென இயக்குநர் நினைத்துக் கொண்டு காட்சிப்படுத்தியிருப்பாரோ எனப் பரிதாபம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மனதைப் பலவீனப்படுத்தும், அழகுணர்ச்சி குன்றிய க்ளோஸ்-அப் காட்சிகளும் இம்சிக்கின்றன. இப்படியாகத் திரையில் மட்டுமே பெண்கள் நிறைந்துள்ளனர்; கதையிலும் திரைக்கதையிலும் ஆணின் பார்வையும் கொண்டையுமே தெரிகிறது.
ஒரு வழியாக இரண்டாம் பாதியில், காவல்துறை அதிகாரியான நதியாவின் வரவிற்குப் பின் படத்தில் விறுவிறுப்புக் கூடுகிறது. படத்தில் பேயாக நடித்திருக்கும் ஈடன் ஏன் கொல்லப்பட்டார் என்ற கிளைக்கதைக்கு, இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் இயக்குநர். படம் நெடுகே வரும் இனியாவையும் ஈடனையும் விட, கொஞ்ச நேரமே வரும் ரேஷ்மா பசுபலேட்டிக்குச் சொல்லிக் கொள்ளும்படியான வலுவான பாத்திரம் அமைந்துள்ளது. பலர் பேசத் துணியாக் கருவைத் தைரியமாக எடுத்துக் கொண்ட போதிலும், வழக்கமானதொரு கதை சொல்லும் பாணியில் இயக்குநர் துளசிதாஸ் அதை சுருக்கிவிடுவது துரதிர்ஷ்டவசமானது.