Shadow

கூகுள் குட்டப்பா | ஆஹா டிஜிட்டலுடன் கைகோர்த்த பூர்விகா மொபைல்ஸ்

தயாரிப்பாளரும் இயக்குநரும் நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் வெளியான ‘கூகுள் குட்டப்பா’, ஜூன் 3 ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இதற்காக பிரத்தியேக முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

‘பிக்பாஸ்’ புகழ் தர்ஷன், நடிகை லாஸ்லியா, கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இந்தத் திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதியன்று வெளியாகிறது.

தமிழகத்தின் முன்னணி செல்ஃபோன் விற்பனை நிறுவனமான ‘பூர்விகா’ ஆஹா டிஜிட்டல் தளத்துடன் கரம் கோர்த்து, தனது கோடம்பாக்கம் கிளை அலுவலகத்தில் வாடிக்கையாளர்களின் முன்னிலையில் ‘கூகுள் குட்டப்பா’ படக்குழுவினருடன் பிரத்தியேக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் பூர்விகாவின் வணிக பொது செயலாளர் திரு. சிவக்குமார், ஆஹா டிஜிட்டல் தமிழ் வணிகப் பிரிவின் தலைவர் சுரேஷ், தயாரிப்பாளரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார், நடிகர் தர்ஷன், நடிகை லாஸ்லியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பூர்விகா அறிவித்த, ஆஹா டிஜிட்டல் தள சந்தாதாரருக்கான பரிசு திட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆஹா டிஜிட்டல் தள சந்தாதாரரருக்கான கூப்பன் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் எழுப்பிய வினாவிற்கு கே.எஸ் ரவிக்குமார், தர்ஷன், லாஸ்லியா ஆகியோர் பதிலளித்தனர்.

இந்நிகழ்வில் பேசிய பூர்விகாவின் வணிக பொது செயலாளர் திரு. சிவக்குமார், “தமிழகத்தில் முன்னணி கைப்பேசி விற்பனை நிறுவனமாகப் பூர்விகா இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் டிஜிட்டல் தளத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவைப் பெற்று முன்னணியில் திகழும் ஆஹா தமிழுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நாங்கள் மேற்கொண்டுள்ளோம். இந்த ஒப்பந்தம், ஆஹா தமிழின் சந்தாதாரர்களை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளும் ஒரு முன்னெடுப்பிற்காக கையெழுத்திடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பூர்விகாவின் வாடிக்கையாளர்களுக்கு ஆஹா டிஜிட்டல் தளத்தின் இலவச சந்தாதாரர்களாகும் வாய்ப்பை வழங்கியிருக்கிறோம். இதன் மூலம் நாங்கள் முதன் முதலாக ஆஹா தமிழ் நிறுவனத்துடன் கரம் கோர்த்துள்ளோம்” என்றார்.

இந்நிகழ்வில் இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார், ”ஆஹா டிஜிட்டல் தளம், தமிழ்த் திரை உலகில் சிறிய முதலீட்டு படங்களுக்கு வழங்கி வரும் ஆதரவை மனதார வரவேற்கிறேன். தமிழ்த் திரை உலகிற்கு ஆஹா டிஜிட்டல் தளம் ஒரு வரப்பிரசாதம். திரையரங்க வெளியீட்டிற்கு வராத சிறிய பட்ஜெட் திரைப்படங்களையும், வெளியீட்டிற்காகக் காத்திருக்கும் சிறுமுதலீட்டு படங்களுக்கும் இவர்கள் வழங்கிவரும் ஆதரவு மகத்தானது. ஆஹா டிஜிட்டல் தளம் தமிழுக்கென்று பிரத்தியேகமாக இயங்குகிறது. அதுவும் நாளொன்றுக்கு ஒரு ரூபாய் செலவில் இந்தத் தளத்தைப் பார்வையிட முடியும். வருடம் முழுவதும் 365 ரூபாய் தான் என்பதால், அனைத்து தரப்பு மக்களாலும் இந்தத் தளத்தின் செயலியைப் பதிவிறக்கம் செய்து, புதிய திரைப்படங்களையும், வலைதளத் தொடர்களையும் பார்வையிடலாம். இந்தத் தளத்தில் ஜூன் 3 ஆம் தேதி முதல் ‘கூகுள் குட்டப்பா’ வெளியாகிறது. அனைவரும் ஆஹா டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்டு, சமூகவலைதளத்தில் படத்தைப் பற்றிய விமர்சனங்களைப் பதிவிடலாம்.

மலையாளத்தில் வெளியான ‘ஆன்ட்ராய்ட் குஞ்சப்பன்’ திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என என்னுடைய உதவியாளர்கள் கேட்ட போது, படத்தைப் பார்த்துவிட்டு நடிக்க ஒப்புக் கொண்டேன். பின்னர் இந்தப் படத்தை தயாரிக்க வேண்டிய சூழல் வந்தவுடன் மறுக்காமல் ஏற்றுக் கொண்டேன்.

ஒவ்வொரு படக் குழுவிலும் இயக்குநர் தான் ரிங் மாஸ்டர். சர்க்கஸில் ரிங் மாஸ்டருக்கு சிங்கம் பயப்படும். புலி பயப்படும். இந்தப் படத்தில் என்னுடைய உதவியாளர்கள் தான் ரிங் மாஸ்டர்கள். படப்பிடிப்பில் கலந்து கொண்ட முதல் இரண்டு நாட்கள் மட்டும்தான் அவர்கள் தயக்கம் காட்டினார்கள். பிறகு உச்சகட்ட காட்சி படமாக்கப்படும் போது அவர்கள் உண்மையான ரிங் மாஸ்டர்களாகி, என்னை வேலை வாங்கினார்கள். நான் தற்போது நிறைய படங்களில் நடிகராகப் பணியாற்றி வருவதால், இயக்குநர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை வழங்குவதில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். ஒரு திரைப்படத்தில் நடிப்பதை விட இயக்குவதுதான் கடினமானது” என்றார்.

தர்ஷன், ”இதற்கு முன்னர் பல நேர்காணலில் கூறியதைத்தான் இப்போதும் கூறுகிறேன். எனக்கு முதல் படத்தில் இதுபோன்ற வாய்ப்பு கிடைத்தது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது. இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் கே.எஸ்.ரவிக்குமார் அவர்களிடமிருந்து ஏராளமான விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அதிலும் குறிப்பாக எப்படி நடிக்க வேண்டும் என்பதை அவர் நடித்துக் காட்டியது புது அனுபவமாக இருந்தது. படத்தில் பணியாற்றியபோது தொழில்நுட்ப ரீதியாகவும் பல நுட்பமான விசயங்களையும் கற்றுக் கொண்டேன்.

தற்போது இயக்குநர் ஐயப்பன் இயக்கத்தில் தயாராகி வரும் ‘நான் ஸ்டாப்’ படத்தில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது அப்படத்திற்கான பின்னணி பேசி வருகிறேன்” என்றார்.

நடிகை லாஸ்லியா, ”தர்ஷன் குறிப்பிட்டதைப் போல் நானும் என்னிடம் வழங்கப்படும் திரைக்கதையைப் படித்து விட்டு, அதனைப் படமாக்கப்படும் போது பேச வேண்டும், நடிக்க வேண்டும் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ரவிக்குமார் சாருடன் பணியாற்றிய போது ஒவ்வொரு காட்சிக்கான விசயங்களை உள்வாங்கிக் கொண்டு, உணர்வுபூர்வமாக வெளிப்படுத்த வேண்டும் என அவர் கற்றுக் கொடுத்தது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது. அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தவுடன் படக்குழுவினரை உற்சாகப்படுத்தி, காட்சிக்கான மனநிலையை நடிகர்களிடம் ஏற்படுத்தி விடுவார். படப்பிடிப்பு முழுவதும் உற்சாகம் நீடித்ததால், இந்தப் படத்தில் நடித்தது புது அனுபவமாக இருந்தது. இனி நடிக்கவிருக்கும் படங்களிலும் இது எனக்கு பயன்படும். தற்போது ‘அன்னபூரணி’ என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது பின்னணி பேசி வருகிறேன்” என்றார்.