Shadow

யானை – இயக்குநர் ஹரியின் வேற மாதிரி படம்

அருண் விஜயும், இயக்குநர் ஹரியும் இணையும் யானை திரைப்படம், ஜுன் 17 அன்று வெளியாகவுள்ளது. ட்ரம்ஸ்டிக்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாகத் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஹரி, “நானும், அருண் விஜயும் இணைந்து பணியாற்ற வேண்டும் என பல ஆண்டுகளாக விரும்பினோம். அது அமையவில்லை. இந்தக் கதை நாங்கள் இணைய மிக முக்கியமான காரணமாக இருந்தது. இந்த வாய்ப்பு அமைய காரணம் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல் அவர்கள்தான். இந்தப் படம் பெரிய படம், பட்ஜெட் வகையில் இது அதிகம். இது உணர்வுகள் மிகுந்த கதை. ஒரு மனிதன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்வான், அப்படியானவன் கோபப்படும் தருணம் எப்படி இருக்கும் என்பது தான் கதை. கடந்த 3 வருடங்கள் எனக்கு நிறைய கற்று கொடுத்தது. படத்தைக் கொஞ்சம் வேற மாதிரி எடுக்க விரும்பினேன். பல மொழி இயக்குநர்களிடம் பல விஷயத்தைக் கற்றுகொண்டேன். பின்னர் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன். சேவல் படத்திற்குப் பிறகு ஜீவியுடன் பணி புரிந்துள்ளேன். படத்தில் நடித்துள்ள நடிகர்கள் பெரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். படத்தில் நிறைய ரிஸ்க்கான காட்சிகள் இருந்தது. எல்லோரும் இணைந்து ஒத்துழைத்துப் பணியாற்ற வேண்டிய காட்சிகள் இருந்தது. அனைவரும் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். நான், ‘தாமிரபரணி’, ‘ஐயா’ படம் எடுத்த போது பின்பற்றிய வழிமுறைகளைப் பின்பற்றி இப்படம் எடுத்துள்ளேன். சமுத்திரகனி சார் ஒரு உதவி இயக்குநர் போல் வேலை பார்த்தார். அது எனக்கு மிக உதவியாக இருந்தது. எனது ஆரம்பகால கட்ட படங்கள் போல் இப்படம் இருக்கும்” என்றார்.

நடிகர் அருண் விஜய், “நானும், இயக்குநர் ஹரியும் ரொம்ப நாளாகப் பணியாற்ற விரும்பினோம். இவ்வளவு பெரிய பொருட்செலவில், பலமான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் படத்தை உருவாக்கப் பெரிய தயாரிப்பாளர் தேவைப்பட்டார். அப்போது நாங்கள் அணுகிய நபர் சக்தி சார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தை உருவாக்கப் பெரிய தைரியம் வேண்டும். சுற்றியுள்ளவரைப் பாதுகாக்கும் ஒரு கதாபாத்திரம் தான், எனது கதாபாத்திரம். இந்தப் படத்தில் நிறைய சவால்கள் இருந்தது. ரொம்ப நாள் கழித்து கிராமம் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்துள்ளேன். ஹரி சார் எனக்குப் பெரிய உதவியாக இருந்தார். படத்தின் ஆக்‌சன் பெரிய சவாலாக இருந்தது. எனக்கு அடிபட்டது, அதையும் மீறிப் படத்தை எடுத்து முடித்தோம். கண்டிப்பாகப் படம் பேசப்படும் என நம்புகிறோம். இது ஹரி சார் பேட்டர்னில் இருந்து மாறி எடுத்த படம். படத்தில் நடித்த அனைவரும் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இந்தப் படம் அனைவரையும் எளிதாக ஈர்க்கும் படமாக இருக்கும். படத்தில் பல காட்சிகளை நான் உணர்ந்து அந்தப் பாத்திரமாக மாறி நடித்தேன். இந்தப் படம் காமெடி நிறைந்த, பொழுதுபோக்கு திரைப்படம். ஹரி சார் கண்டிப்பான மாஸ்டர், அவருடைய அர்ப்பணிப்பு அபாரமானது. அவருடைய வேகம் எங்களுக்குப் புத்துணர்ச்சி கொடுத்தது. பல இடங்களில் இப்படத்தை எடுத்துள்ளோம். படத்தை அட்டகாசமாக எடுத்துள்ள ஒளிப்பதிவாளருக்கு நன்றி. ஜீவி உடன் இது எனக்கு முதல் படம். படத்தில் பங்குபெற்ற அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் பெரிய உழைப்பைக் கொடுத்துள்ளனர்” என்றார்.

நடிகை பிரியா பவானி சங்கர், “இவ்வளவு பெரிய படத்தை சீக்கிரம் முடிக்க காரணம் இயக்குநர் ஹரி சார் தான். அவருடைய வேகம் எல்லோரையும் பிரமிக்க வைத்தது. அவருடைய உழைப்பைக் கணக்கிடவே முடியாது. அருண் சாருக்கு நன்றி. ஹரி சார் உடைய வேகத்திற்கு, ஒளிப்பதிவாளர் ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்றியுள்ளார். ராதிகா மேடம், ஐஸ்வர்யா மேடம் போன்ற மூத்த கலைஞர்களுடன் பணியாற்றியது பெரிய மகிழ்ச்சி. சமுத்திரக்கனி, தலைவாசல் விஜய் போன்ற கலைஞர்களின் நடிப்பைப் பார்த்தது பெரிய அனுபவமாக இருந்தது. இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்குமாரின் பெரிய ரசிகை நான். இந்தப் படம் ஹரி சார் பாணி படமாக இருக்காது. மிக நல்ல உணர்வுபூர்வமான படம்” என்றார்.

தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி S.சக்திவேல், “இயக்குநர் ஹரியுடன் பணியாற்றுவது எனது பல நாள் கனவு. இந்தப் படம் அதற்கு சரியான வாய்ப்பாக அமைந்தது. அவர் தயாரிப்பாளரின் இயக்குநர். இந்தப் படத்தை எந்தத் தடையுமில்லாமல் எடுக்க உதவிய படக்குழுவுக்கு நன்றி” என்றார்.

ஒளிப்பதிவாளர் கோபிநாத், “ஹரி சார் உடன் இணைவது இது தான் முதல் முறை. பல நாள் கனவு இது, அவருடன் பணியாற்ற வேண்டும் என்பது இப்போது நிறைவேறி உள்ளது. அதற்கு உறுதுணையாக இருந்தது தயாரிப்பாளர் அவருக்கு நன்றி. படம் மிக நல்ல அனுபவமாக இருந்தது” என்றார்.

நடிகர் ராஜேஷ், “ஹரி உடைய படங்கள் எப்பொழுதும் சென்டிமென்ட் நிறைந்து இருக்கும். படத்தில் அருண் விஜய், சமுத்திரக்கனியுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. எல்லா வயதினரும் ரசித்துப் பார்க்கும் படமாக இப்படம் இருக்கும்” என்றார்.

நடிகர் தலைவாசல் விஜய், “இந்தப் படம் எனக்கு வேறு ஒரு பரிமாணமாக இருக்கும். அருண் விஜய்க்கு இந்தப் படம் மைல்கல்லாக இருக்கும். கொரோனாவுக்குப் பிறகு மிகப்பெரிய படமாக யானை இருக்கும் என நான் நம்புகிறேன்” என்றார்.

நடிகர் KGF ராமசந்திர ராஜு, “இந்தப் படத்தில் ஹரி சார் உடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. அவர் நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார். நிறைய கற்றுக் கொண்டேன். அருண் விஜய் உடன் பணியாற்றியது மகிழ்ச்சி. அவர் பல சிக்கல்களை கடந்து இந்தப் படத்தில் நடித்தார். ஆக்சன் காட்சியில் அடிபட்ட போதும், மறுநாள் சூட்டிங் வந்தார். அவருக்கு இந்தப் படம் பெரிய வெற்றி கொடுக்கும்” என்றார்.

நடிகர் சஞ்சய், “கண்டிப்பாக இந்தப் படம் அருண் விஜய்க்குப் பெரிய மைல்கல்லாக இருக்கும். நான் பார்த்து ஆச்சர்யப்பட்ட விஷயம், இந்தப் படத்தில் அருண் விஜய் சிங்கிள் ஷாட்டில், 3.30 நிமிட சண்டைக் காட்சி ஒன்றில் நடித்துள்ளார். அது மிகப்பெரிய அளவில் பேசப்படும்” என்றார்.

நடிகை அம்மு அபிராமி, “இந்தப் படத்தில் நடிக்கும் போது உடன் நடித்த அனைவரும் பெரிய கலைஞர்கள். அவர்களுடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருந்தது. ஹரி சாருடனும், அருண் விஜய் சாருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்” என்றார்.

நடிகர்கள்:

>> அருண் விஜய்
>> பிரியா பவானி ஷங்கர்
>> சமுத்திரக்கனி
>> யோகிபாபு
>> அம்மு அபிராமி
>> கேஜிஎஃப் ராமசந்திர ராஜு
>> ராதிகா சரத்குமார்
>> ஆடுகளம் ஜெயபாலன்
>> இமான் அண்ணாச்சி
>> ராஜேஷ்
>> ஐஸ்வர்யா
>> போஸ் வெங்கட்
>> சஞ்சய்
>> புகழ்

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

>> கதை, திரைக்கதை, வசனம் – ஹரி
>> தயாரிப்பு – ட்ரம்ஸ்டிக்ஸ் ப்ராடெக்ஷன்ஸ்
>> தயாரிப்பாளர் – வெடிக்காரன்பட்டி S. சக்திவேல்
>> இசை – ஜீ.வி.பிரகாஷ் குமார்
>> ஒளிப்பதிவு – கோபிநாத்
>> கலை – மைக்கேல் B.F.A.
>> படத்தொகுப்பு – அந்தோனி
>> பாடல் வரிகள் – சினேகன், ஏகாதசி, அறிவு
>> சண்டை – அனல் அரசு
>> இணை இயக்குநர் – N. ஜான் ஆல்பர்ட்
>> நடனம் – பாபா பாஸ்கர், தினா
>> நிர்வாக தயாரிப்பு – சின்ன R. ராஜேந்திரன்
>> காசாளர் – N.G.அர்ஜுன்
>> டி.ஐ. வி.எஃப்.எக்ஸ், ஒலி வடிவமைப்பு – Knack ஸ்டுடியோஸ்
>> ஒலி கலவை – T. உதயகுமார்
>> முதன்மை ஒப்பனை கலைஞர் – முனியராஜ்
>> உடை – ரங்கசாமி
>> ஸ்டிள்ஸ் – சரவணன்
>> உடை வடிவமைப்பாளர் – நிவேதா ஜோசப், கீது
>> மக்கள் தொடர்பு – சதீஷ் Aim
>> பப்ளிசிட்டி டிசைன் – ரெட்டாட் பவன்