Shadow

குப்பத்து ராஜா விமர்சனம்

kuppathu-movie-review

எதற்கும் அலட்டிக் கொள்ளாத ராக்கெட் குப்பத்திற்கே ராஜாவாகச் சுற்றி வருகிறான். திடீரென ஒருநாள் அவன் தந்தை இறந்துவிட, ராஜா நிலைகுலைகிறான். அவனது தந்தையைக் கொன்றது யாரெனவும், அக்குப்பத்தில் நிகழும் அசாம்பாவிதங்களுக்கும் காரணம் எதுவென்பதும்தான் படத்தின் கதை.

ஊர் நியாயம் என்ற கதாபாத்திரத்தில் G.V.பிரகாஷின் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். மகனின் மீது பாசம் பொழிவதையும், குடிப்பதையும் தவிர வேறொன்றும் அறியாத மனிதர். அவரது மரணத்தில் இருந்துதான் படத்தின் கதை தொடங்குகிறது. படத்தின் முதற்பாதி முழுவதும் கதையே இல்லாமல், காதல், நண்பர்களுடன் ஜாலியாய் ஊர்ச் சுற்றுதல், குடி, கும்மாளம், குதூகலம் என்று காட்சிகள் விரிகிறது. முதற்பாதியின் கலகலப்பிற்கு யோகி பாபுவின் கவுன்ட்டர்கள் உதவுகின்றன.

நாயகனால் வருங்காலம் என அழைக்கப்படும் கமலா கதாபாத்திரத்தில் பாலக் லால்வானி நடித்துள்ளார். நாயகனைத் தவிர வேறு யோசனையே இல்லாத வழக்கமான நாயகி. இதில் சுவாரசியம் எதுவும் இருக்காது எனக் கருதிய இயக்குநர் பாபா பாஸ்கர், பூனம் பஜ்வாவை நாயகனின் எதிர்வீட்டுக்குக் குடி வைக்கிறார். அந்தக் குப்பத்துக்குச் சற்றும் பொருந்தாது ரொம்பவே அந்நியமாக உள்ளார். G.V.பிரகாஷுடன் காட்சிகள் வைத்ததற்குப் பதில் பார்த்திபனுடனாவது பூனம் பஹ்வாவிற்குக் காட்சிகளை வைத்திருந்திருக்கலாம்.

எம்.ஜி.ஆர். எனும் MG.ராஜேந்திரனாக, அந்தக் குப்பத்தை நேசிக்கும், அனைவராலும் விரும்பப்படும் நபராகப் பார்த்திபன் நடித்துள்ளார். குப்பத்தின் ராஜா இவர்தான். அவர் சொல்லுக்கு, அக்குப்பத்தில் மிகுந்த மரியாதையுண்டு. எதிரும் புதிருமாய் முறுக்கிக் கொள்ளும் நாயகனும் அவரும் சேரும் காட்சிக்கு, ஓர் அட்டகாசமான மயிர்கூச்செரிப்பை உருவாக்கியிருக்கலாம். ஆனால், ஜாலியான மனிதர்கள், செல்லச் சீண்டல்கள் என்று ஆழமில்லாத கதாபாத்திரங்கள் அது மிஸ்ஸாகி விடுகிறது. மழையில் இருவரும் இணைந்து, பார்த்திபனைக் கொல்ல வருபவர்களை நையப்புடைக்கும் சண்டைக் காட்சி நன்றாக உள்ளது.

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம் தந்த விடலைப் பையன் என்ற அடையாளத்தில் இருந்து தன்னைப் பிரித்தெடுத்துக் கொள்ள, G.V.பிரகாஷிற்கு இன்னும் நாட்களாகும். எல்லாப் படத்திலுமே, அந்தப் படத்தை நினைவுப்படுத்தும் ஷேட்ஸுடன்தான் அவருக்குக் கதாபாத்திரம் அமைகிறது. பென்சில், நாச்சியார் போன்ற படங்கள் தனது அடையாளத்தை மறக்க வைக்கப் பெரிதும் உதவவில்லை. விஜய் சேதுபதிக்குப் போட்டியாக வெள்ளிக்கிழமை நாயகனாக ஜீ.வி. வலம் வரும் சூட்சமம் பலருக்கும் மர்மமாகவே உள்ளது.

டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர், குப்ப்த்து ராஜா மூலம் இயக்குநராய் அறிமுகமாகியுள்ளார். அவரது வாழ்விடத்தைக் கதைக்களனாக்கியாக்கியுள்ளார். ஆனாலும், வடச்சென்னை பற்றி வெளியாட்களின் பார்வையையே இவரும் பிரதிபலித்தது உள்ளது ஏமாற்றம் அளிக்கிறது. மண்ணின் மைந்தர்களைக் குப்பத்து ராஜாக்களாக்கி இருந்தால், படம் பட்டாசாய் இருந்திருக்கும். ஏனெனில் காட்சிகளை நகர்த்தும் அழகியல் தெரிந்தவராய் உள்ளார் பாபா பாஸ்கர்.