வீடென்பது வெறும் செங்கல்லாலும் சிமெண்டாலும் கட்டப்படுவது அல்ல. அன்பின் நிறைவு மட்டுமே ஒரு வீட்டை வீடாக மாற்றவல்லது. ‘கும்பளாங்கி நைட்ஸின்’ கதையை இப்படி ஒற்றை வரி ‘க்ளிஷே’வுக்குள் அடக்கி விடலாமா என்றால்… கூடாது.
இந்தத் திரைப்படம் சொல்லும் பல்வேறு அடுக்குகளில் அதுவுமொன்று என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். எண்ணற்ற மனித உணர்வுகளின் இயல்பான வெளிப்பாடு என்றும் சொல்லலாம். வெவ்வேறு கதாபாத்திரங்களின் ஆனந்தமும் கண்ணீரும் வீழ்ச்சியும் உயர்ச்சியும், வலியும் இறுமாப்பும், காதலும், பொறாமையும், வியப்பும், மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் அவைகளை இணைக்கும் ஒற்றை இழையாக அன்பும் நிறைந்து தளும்பும் அபாரமான உணர்வெழுச்சியென்றும் அடையாளப்படுத்தலாம்.
சமூகத்தில் உதிரிகளாக வாழ்ந்து முடிக்கும், இலக்கற்ற வாழ்க்கையை மேற்கொள்ளும் சின்னச் சின்ன விசயங்களுக்குக் கூட அடித்து உருளும் சகோதரர்களுக்கிடையே வாழ்க்கை எப்படி விநோதக் கண்ணாமூச்சி ஆடுகிறதென்பதைச் சொல்லும் கதையென்றும் சொல்லலாம். எந்தக் கண்கொண்டு பார்க்கிறீர்களோ அத்தனைக்கும் பொருந்திவரும் சித்திரம்தான் “கும்பளாங்கி நைட்ஸ்”.
கால்பந்தாட்டத்தில் ஈடுபடும் ஒருவனை மட்டும் குவியப்படுத்துகிறது கேமரா. அவனது வீட்டில் தங்கி கொச்சியைச் சுற்றிப் பார்க்கலாமென்று யோசனை சொல்லும் நண்பனிடம் வீட்டில் அனைவருக்கும் சின்னம்மை வியாதி இருப்பதால் முடியாதென்கிறான் அவன். அந்தப் பொய்யிலிருந்து கதையின் சுருளவிழத் தொடங்குகிறது. அந்தப் பொய் எதற்காக என்பதை விவரிப்பதாகத் துவங்குகிறது படம். முதல் பாதியில் கும்பளாங்கி பஞ்சாயத்திலேயே மிக மோசமான வீட்டில் வசிக்கும் நான்கு சகோதரர்கள் அவர்களது வாழ்க்கை முறை அவர்களுக்கிடையேயான இடைவெளி, அவர்களின் குதூகலம், அவர்களது இலக்கற்றத்தன்மை என்று கதாபாத்திரங்களின் குணாதிசயங்களைத் துல்லியமாக அடையாளப்படுத்துகிறார் திரைக்கதாசிரியர்.
பொதுவாகப் புதினங்களில் எழுத்தாளர்கள் தங்களது கதாபாத்திரங்களை மெல்ல மெல்லக் கட்டி எழுப்பி வாசகனுக்கு அதற்கான இடத்தை உருவாக்குவார்கள். திரைப்படம் ஒரு காட்சி ஊடகமென்பதால் அதற்குண்டான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஆனால் இங்கே அந்த இடத்தைக் கட்டி எழுப்பியிருக்கிறார் ஷ்யாம் புஷ்கரன்.
மாயாநதிக்குப்பின் ஷ்யாம் புஷ்கரன் உருவாக்கிய திரைக்கதை இது. ஊர்ந்தும் நகர்ந்தும் குதித்தும் ஆர்ப்பரித்தும் நதி போலொழுகிச் செல்லும் திரைக்கதை.
முதல் பாதியின் இறுதியில் நிகழும் ஒரு மரணமும் இரண்டாம் பாதியில் நிகழும் ஒரு பிறப்பும் இந்தச் சகோதரர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. கதையினூடே நிகழும் ஒரு காதலும் அந்தக் காதலுக்கு வழக்கம் போலக் கிளம்பும் எதிர்ப்பும், இன்னொரு கிளைக்கதையாக ஆனால் இந்தக் கதையிலிருந்து பிரிக்க முடியாத கண்ணியாகக் கூடவே வருகிறது.
தகப்பனின் மறைவு தினத்தில் மெழுகுவர்த்தி ஏற்றிக் கும்பிடும் மூத்த சகோதரனை வேடிக்கை பார்த்துக் கொண்டே, “எதுக்கு இப்போ இந்த ஷோ?” என்று கேட்கிறான் இளையவன். அதே இளைய சகோதரன் தன் காலடியில் வந்து அமரும்போது, “என்ன? என்னோட கிட்னி வேணுமா?” என்கிறான் மூத்தவன். இருவருக்கும் இடையிலான இந்த முரண்பாடு எப்படி இணக்கம் நிறைந்த அன்பாக மாறுகிறதென்பதைச் சொல்லும் எளிய கதை.
தான் போகுமிடமெல்லாம் மண்ணோடு மண்ணாய்ப் போய்விடுமென்று தனது தாய் சாபமிட்டிருப்பதாகச் சொல்லும்போது, “அப்ப சரியான இடத்துக்குத்தான் வந்திருக்க. இதை விட மண்ணாய்ப்போன இடம் வேறெங்கேயும் இல்ல” என்று ‘போபி’ சொல்லுமிடம் அபாரம். இதைப் போன்றே படம் முழுக்க ஒன்லைனர்கள் இயல்பான நகைச்சுவையாக விரவிக் கிடக்கின்றன – அதற்குப் பின்னாலிருக்கும் வலிகளை மறைத்து. வாழ்க்கை குறித்துப் பிரத்தியேகமான பாடமேதும் எடுக்காமல் தன் போக்கிலேயே சொல்லிச் செல்லும் வசனங்கள்.
திலீஷ் போத்தனிடன் உதவி இயக்குநராய் இருந்த பணியாற்றிய மது நாராயணன்தான் இந்தப் படத்தின் இயக்குநர். இவரது முதல் படமும் கூட. குருவின் பெயரைக் காப்பாற்றும் சீடராகச் சிறப்பாக இயங்கியும் இயக்கியுமிருக்கிறார் மது. அபு ஆஷிக் கூடாரத்திலிருந்து இன்னொரு நம்பிக்கை தரும் இயக்குநர்!! வாழ்த்துகள்!!
மனிதர்களை அவர்களின் நிறையும் குறையும் கொண்ட ‘பச்சை’ மனிதர்களாகவே அடையாளப்படுத்தும் இந்தத் திரைப்படத்தில் மிகையற்ற அற்புதமான நடிப்பாற்றல் மூலம் கதாபாத்திரங்களை ஜொலிக்க வைத்திருக்கிறார்கள் ஷௌபின் ஸாகிரும், ஷான் நிகமும், ஸ்ரீநாத் பாஸியும்.
‘சுடானி ஃப்ரம் நைஜீரியா’விற்காகக் கேரள அரசின் சிறந்த நடிகருக்கான பரிசை வென்ற ஷௌபின், ஸஜியாக வாழ்ந்திருக்கிறார். “சேட்டான்னு விளி” என்று சொல்லிவிட்டு சிரிக்கும் இடமும் சரி; ‘கறயான் பற்றுந்நில்ல. டாக்டரிடத்துகொண்டு போவோ?” என்று கேட்கும்போதும் சரி. இந்த வருடமும் கேரள அரசின் விருது கிடைக்கும் வாய்ப்புகள் பிரகாசம்.
கூடவே இன்னொரு பேரரக்கன் ஃபஹத் ஃபாஸிலும். கொஞ்சம் தவறினாலும் கோமாளித்தனமாக மாறி விடக் கூடிய கதாபாத்திரத்தைத் தனது ‘அழிஞ்ஞ’ சிரிப்பாலும் உடல்மொழியாலும் பார்வைகளாலும் தூக்கி நிறுத்தியிருக்கிறான் இந்த மகாகலைஞன். இவருக்கும் அரசு விருது கிடைக்க வாய்ப்புகள் அதிகம்.
நாயகியாக வரும் அன்னா பென்னின் சுருள் முடியும் மந்தகாசப் புன்னகையும் முதல் படமென்ற அறிகுறியே இல்லாத அனாயாசமான நடிப்பும் அவருக்கான இடத்தை நிச்சயம் பெற்றுத் தரும். சிறப்பான அறிமுகம்.
மீன்பிடித் தொழிலை மையமாகக் கொண்ட கும்பளாங்கி என்ற இந்தக் கிராமத்தில் நாமே வாழ்வது போல அந்தக் கிராமத்தின் அழகை அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார் ஷைஜு காலித் (ஈ.மா.யௌவின் ஒளிப்பதிவாளரேதான்). அதிலும் கும்பளாங்கியின் இரவுக்காட்சிகள். மிகச்சிறப்பு.
கல்லிலிருந்து தேவையற்ற பகுதிகளை நீக்கி சிலை உருவாக்குவதைப்போல படத்தொகுப்பில் செதுக்கியிருக்கிறார் ஷைஜு ஸ்ரீதரன்.
சுஷின் ஷ்யாமின் இசை பெரும்பாலும் இடைவெளியற்ற மௌனங்களால் நிரம்புகிறது. பாடல்களும் சரி பின்னணியும் சரி. படத்தின் குணாதிசயத்தைச் சிதைக்காத தன்மையோடு இழைந்தோடுகிறது.
கும்பளாங்கியில் சில காலம் பூச்சில்லாத சுவரும் நுழைவாயில் கதவுமில்லாத அந்த வீட்டில் சிலகாலம் அந்த சகோதரர்களோடு தங்கி விட்ட உணர்வைப் படம் முடிந்ததும் பெற முடிவதுதான் படத்தின் மிகப்பெரும் பலம்.
சொல்லித் தீர்க்க வேண்டிய படமல்ல. மாறாக, அனுபவித்து உணர வேண்டிய படம் இந்த “கும்பளாங்கி நைட்ஸ்”.
– ஆசிப் மீரான்
[…] புகழ்பெற்ற கும்பளாங்கி நைட்ஸ், ஆர்டிஎக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் […]