நிலை மறந்தவன் விமர்சனம்
Trance எனும் மலையாளப் படத்தைத் தமிழில் ‘நிலை மறந்தவன்’ என மொழிமாற்றி வெளியிட்டுள்ளனர். ட்ரான்ஸ் என்றால் பித்து நிலை எனச் சொல்லலாம். பித்து நிலையில், மனிதன் தன்னிலை மறந்து, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது எனத் தெரியாமல் இருக்கும் நினைவிழந்த நிலை. அப்படி மனிதனைத் தன்னிலை மறக்கச் செய்யும் ஒரு வியாபார யுக்தியை ஜீசஸின் பெயரால் உருவாக்குகின்றனர் வில்லன்கள். விட்டில் பூச்சிகளாய் அதில் தன்னிலை மறந்து விழும் மக்களைக் கொண்டு எப்படிக் கோடியில் புரளுகின்றனர் என்பதே படத்தின் கதை.
ட்ரான்ஸ், அமேசான் ப்ரைமில் காணக் கிடைத்தாலும், தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பெரிய திரையில் காணும் அனுபவம் சிறப்பாக இருக்கிறது. படத்தின் முதல் முப்பத்தைந்து நிமிடங்கள் மட்டுமே ஒரு மலையாளப் படம் பார்த்த நிறைவினைத் தருகிறது. அதற்குப் பின்னான படம், கிறிஸ்துவ மதத்தை வியாபாரமாகப் பயன்படுத்துவோர்களின் முகமூடி கிழிபடுவதை ரசிக்கும...