புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம் என்ற குறும்படம், இயக்குநர் நித்திலனுக்கு ‘குரங்கு பொம்மை’ படத்திற்கான வாய்ப்பைப் பெற்றுத் தந்ததுள்ளது. அதைச் சரியாக உபயோகப்படுத்திக் கொண்டுள்ளார் நித்திலன்.
ஒரு பேருந்து நிறுத்தத்தில், பெரியவர் ஒருவரின் குரங்கு பொம்மை அச்சிடப்பட்ட பை ஒன்று நாயகனுக்குக் கிடைக்கிறது. அந்தப் பையில் என்ன உள்ளது என்றும், அது நாயகனின் வாழ்வில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுத்துகிறது என்பதும் தான் படத்தின் கதை.
படத்தின் முதற்பாதி தன்னுள் பார்வையாளர்களை இழுத்துக் கொள்கிறது. நடிகர்கள் அனைவரையும் அறிமுக இயக்குநர் நித்திலன் மிக அழகாக உபயோகப்படுத்தியுள்ளார். இயக்குநர் பாரதிராஜாவுக்குள் இருக்கும் அசலான நடிகனை வெளிக்கொணர்ந்துள்ளார் நித்திலன். நடிப்பிலும் தான் இமயம் தானென நிரூபித்துள்ளார். பிரதான கதாபாத்திரங்களைத் தாண்டிப் படத்தில் வரும் அத்தனைப் பேரையும் ரசிக்க முடிவது தான் படத்தின் சிறப்பு.
லாரியைக் காணோம் என காவல் நிலையத்தில் புகார் செய்யும் குறவர் இன தம்பதி, லாரியை ஏன் தேடுகின்றனர் என்ற அவர்களின் பதற்றமான கதை, அதை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி ராஜா ராணி பாண்டியனின் கதாபாத்திரம், அவர் பணிபுரியும் காவல் நிலையத்தின் பரிதாப நிலை எனப் படம் ஒரு புதிய அனுபவத்தைத் தருகிறது. சின்னச் சின்ன ஷாட்களில் ரசிக்க வைக்கின்றனர். ட்ராவல்ஸில் ட்ரைவராகப் பணி புரிகிறார் நாயகன் விதார்த். அவர் எக்ஸ் எம்.எல்.ஏ.விற்கு வண்டி ஓட்டுகிறார். அப்பொழுது எம்.எல்.ஏ.வின் கையாள், ‘எங்கண்ணன் யார் தெரியும்ல?’ என நாயகன் சிக்னலை மதிப்பதற்குக் கோபித்துக் கொள்கிறார். சின்னஞ்சிறு ஷாட் தான். ஆனால் அத்தனை சுவாரசியம்.
இது ஹீரோயிசத்திற்கான கதையோ, நாயகனை மையப்படுத்திய கதையோ கிடையாது. விதார்த் ஆச்சரியமூட்டுகிறார். ஒரு கிடாயின் கருணை மனு போல் இதிலும் படம் முழுவதும் மனிதர்கள். மனிதர்களோடு மனிதராய் விதார்த்தும் தோன்றுகிறார். ஏற்ற பாத்திரத்தில் பிரமாதப்படுத்தியுள்ளார். கண்ணில் படும் சின்னச் சின்ன விஷயங்களையும் எல்லாம் ஃபேஸ்புக்கில் பகிரும் சாமானியனாய் வருகிறார். அவரது ஃபேஸ்புக் ஸ்டேட்டஸைப் பார்த்துவிட்டு, அவருக்கு வரும் அழைப்புகளும் சுவாரசியம்.
படத்தின் ஓப்பனிங் ஃப்ரேமே தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பனில் இருந்து தான் தொடங்குகிறது. திரைப்பாடல்களில் ஆர்வமுடைய ஏகாம்பரமாக மிக இயல்பாய் நடித்துள்ளார். அவருக்கும் பாரதிராஜாவுக்குமான நட்பை இன்னும் ஆழமாகக் காட்டியிருக்கலாம். பிக்பாக்கெட்டாக நடித்திருக்கும் கல்கி தமிழ் சினிமாவிற்கு நல்லதொரு அறிமுகம். அந்தப் பிக்பாக்கெட்டிற்கு ஒரு கோடி தேவைப்படுகிறது. ஏன் தேவைப்படுகிறது என்ற சின்னஞ்சிறு கிளைக்கதையும் சுவாரசியம்.
இருப்பதிலேயே கஞ்சா கருப்பு அத்தியாயம் தான் மிகவும் சின்னது. ஓரே ஓர் உடைந்த கடிகாரத்தைக் காட்டி, வார்த்தைகளின்றி அந்த அத்தியாயத்தை முடித்துள்ள இயக்குநரின் திரைமொழி அவர் மீது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இத்தகைய சுவாரசியங்களுக்கு முன், டெல்னா டேவிஸ் – விதார்த் காதல் கதை சோபிக்கவில்லை என்றே சொல்லவேண்டும்.
ஏகாம்பரம் என்பவன் திருடனாய் இருந்து முன்னேறித் தன் தொழிலுக்கு இடைஞ்சலாக இருக்கும் கான்ஸ்டபிளைச் சைலன்ஸர் உபயோகிக்காத துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் பிக் ஷாட். அவனுடன் சென்னைக்குக் கூட வருபவர்கள் ஏகாம்பரம் காணவில்லை என்றால் தேட மாட்டார்களா? ‘தண்ணி கேன்’ சேகராக குமரவேல் மிரட்டியுள்ளார். ‘நான் இயக்குநர் ராதாமோகன் படத்தில் மட்டும் நடிப்பேன் என யார் சொன்னது?’ என்று கேட்கும் அவரை, மிக முக்கியமாப பாத்திரத்தில் உபயோகித்துள்ளார் நித்திலன். க்ளைமேக்ஸின் பொழுது படமே குமரவேலுக்காக எடுக்கப்பட்டதோ என்ற எண்ணமும் லேசாய் எட்டிப் பார்க்கிறது. திரைக்கதையின் இயல்பான ஓட்டத்தை குமரவேல் பாத்திரம் ஹை-ஜாக் செய்து விடுகிறது.
க்ளைமேக்ஸில் ஒரு பெரிய ஜம்ப் அடித்து, அதிர்ச்சி க்ளைமேக்ஸை மட்டும் நித்திலன் கொடுத்திருக்கா விட்டால், இந்தப் படம் ஒரு ‘கல்ட் கிளாசிக்’ ஆக இருந்திருக்கும்.
[…] குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் மகாராஜா திரைப்படத்தை எழுதி இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். ஒரு வகையில் பார்த்தால் ஏமாற்றுத்தனமான திரைக்கதையாகவும் மறுமுனையில் பார்த்தால் மிகுந்த புத்திசாலித்தனமான திரைக்கதையாகவும் தெரியும் மாறுபட்ட திரைக்கதை வடிவம் இது. திரைக்கதையின் பயண ஒட்டத்தை புரிந்து கொள்வதற்கான குறியீடுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருப்பது தனிச்சிறப்பு. […]