Shadow

L2: எம்புரான் | Anamorphic format 1:2.8

இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்தியப் படமான “எம்புரான்” படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும், திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. படக்குழுவினர் இந்தியா முழுக்கப் பல இடங்களில் படத்தின் விளம்பரப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையிலும், இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு நிகழ்ச்சிக்காகப் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நடிகர் டோவினோ தாமஸ், “இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை. இப்படி ஒரு படத்தில் நான் இருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். லாலேட்டன், மஞ்சு வாரியர், ப்ரித்திவிராஜ் உடன் வேலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஆசீர்வாதம். லூசிஃபர் படத்தில் நான் சின்ன ரோலில் வந்தாலும், அது என் வாழ்வில் கொடுத்த இம்பேக்ட் மிகப்பெரிது. இந்தப் படம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும். மலையாள சினிமாவில் இது முக்கியமான படம்” என்றார்.

நடிகை மஞ்சு வாரியர், “என் வாழ்வில் மிக முக்கியமான திருப்புமுனையைத் தந்த படம் லூசிஃபர். எனக்கு இந்த வாய்ப்பைத் தந்த ப்ரித்திவிராஜுக்கு நன்றி. பிரியதர்ஷினி எனும் கதாபாத்திரத்தை எனக்குத் தந்ததற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. இவ்வளவு பெரிய படமாக இப்படத்தை உருவாக்கும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. லாலேட்டனுடன் ஒரு சில படங்கள் மட்டும் தான் செய்துள்ளேன். இந்தப் படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்புக் கிடைத்தது பெருமை. எல்லாமே மறக்க முடியாத அனுபவம். இப்படம் கண்டிப்பாக உங்களைத் திருப்திப்படுத்தும்” என்றார்.

ஸ்டன்ட் மாஸ்டர் சில்வா, “இந்தப் படத்தின் முதல் பாகத்தை மிக எளிதாகச் செய்துவிட்டோம். அப்போது இத்தனை பதட்டம் இல்லை. ஆனால் இரண்டாம் பாகத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு, நிறையப் பதட்டம் இருந்தது. இயக்குநராக ப்ரித்திவிராஜுக்கு நான் ஃபேன் ஆகிவிட்டேன். அவர் என்னிடம் கதை சொன்ன பிறகு தூக்கமே வரவில்லை என்றார். அத்தனை அர்ப்பணிப்போடு படத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தார். மிக அழகாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் கண்டிப்பாக ரசிகர்களைப் பிரமிக்க வைக்கும்” என்றார்.

இயக்குநர் ப்ரித்திவிராஜ், “முதல் பாகம் வந்த போது இப்படத்தை இந்திய அளவில், வெளியிடும் வசதியும், படத்தைப் பற்றிப் பேச வைக்கும் வசதி இல்லை. இந்த 6 வருடத்தில் பல விசயங்கள் மாறியிருக்கிறது. ஒவ்வொரு மொழியிலும் அவரவர் மொழியில் ரசிக்கும் வண்ணம் கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தப் படம் மலையாள சினிமாவின் பெருமை. இப்படி ஒரு படம் செய்யக் காரணமான மோகன்லால் சார், ஆண்டனி பெரும்பாவூர் சார் ஆகியோருக்கு நன்றி” என்றார்.

நடிகர் மோகன்லால், “இது ஒரு ட்ரைலாஜி படம். லூசிஃபர், இப்போது எம்புரான் அடுத்து இன்னொரு படம் வரவுள்ளது. இது மலையாள சினிமாவுக்கே மிக முக்கியமான படம். கொஞ்சம் புதுமையாகப் பல விசயங்கள் முயற்சி செய்துள்ளோம். அதற்காகத் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் என எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளோம். இது தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மாதிரி படம் ஓடினால் தான் பல பெரிய படங்கள் வரும்” என்றார்.

நடிகர், இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

2019 இல் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக, அதிரடி ஆக்சன் கதைக்களத்தில், இந்த வருடத்தின் மிகப்பெரிய திரைப்படங்களுள் ஒன்றாக, பான் இந்தியப் பிரம்மாண்ட படமாக “எம்புரான்” திரைப்படம் உருவாகியுள்ளது. மேலும் “Game of Thrones” புகழ் ஜெரோம் ஃப்ளின் இந்திய சினிமாவில் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார். இப்படம் உலகம் முழுக்க பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. அதில் ஷிம்லா, லே, ஐக்கிய அரசுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள், சென்னை, குஜராத், ஐக்கிய அரபு அமீரகம், மும்பை மற்றும் கேரளா ஆகிய இடங்கள் அடங்கும். அனாமார்பிக் வடிவத்தில் 1:2.8 ரேஷியோவில் எடுக்கப்பட்டுள்ள “எம்புரான்” திரைப்படம், மிகப் புதுமையான திரை அனுபவமாக இருக்கும். இந்த இரண்டாம் பாகத்தில் கதை உலகம் முழுக்க விரிகிறது.

தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், படத்தொகுப்பாளர் அகிலேஷ் மோகன், கலை இயக்குநர் மோகன்தாஸ், ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டண்ட் சில்வா, மற்றும் படத்தின் கலை இயக்குநர் நிர்மல் சஹதேவ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். முதல் பாகத்தின் இசையமைப்பாளரான தீபக் தேவ், இப்படத்தில் மிரட்டல் இசையைத் தந்துள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.