
காவல்துறை உயரதிகாரியான எஸ்.பி. அருணகிரி, கண்ணனையும் அவரது தந்தையான பெரியவர் ரவியையும் என்கவுன்ட்டரில் கொல்ல நினைக்கிறார். இதையறியும் பெரியவர் ரவி, தன் மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென நினைக்கிறார். அதற்காக எஸ்.பி.யைக் கொல்ல, மளிகைக் கடை வைத்திருக்கும் காளியை அணுகுகிறார். யார் யாரைக் கொன்றார்கள் என்பதே படத்தின் கதை.
படத்தின் முதல் ஃப்ரேமிலேயே கதைக்குள் சென்றுவிடுகிறார் இயக்குநர் S.U.அருண் குமார். தன் கணவன் ஃபோன் எடுக்காததால் பதற்றமடையும் ஒரு மனைவியின் கோபம், ஒரு நாள் இரவுக்குள் என்னென்ன களேபரங்களுக்குக் காரணமாகிறது எனும் கதையின் மையக்கருவே திடுக்கிட வைக்கிறது. மனித மனங்களின் சிடுக்குகளையும், அகங்காரத்தையும், பழிவாங்கும் எண்ணத்தையும் நேர்த்தியாகத் திரைக்கதையில் கையாண்டுள்ளார் S.U.அருண் குமார். தனது வேலைக்கு உலை வைத்தவர்களைக் கொன்றே ஆகவேண்டுமென எஸ்.பி. அருணகிரியின் அதீத செயற்பாடுகள், அதிகாரத்தின் கோர முகத்தைப் பறைசாற்றுகிறது. பணமும் செல்வாக்கும் ஒன்றிணைந்தால் எதுவும் சாத்தியம் என இறுமாந்திருக்கும் கதாபாத்திரங்களாகக் கண்ணனும், பெரியவர் ரவியும் உள்ளனர். கடனிருந்தாலும், படுத்தவுடன் நிம்மதியாகத் தூக்கம் வரும் எளிய வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ள விரும்பாத குடும்பத்தலைவனாகக் காளி உள்ளார். பெரியவர் ரவியும் சரி, காவல்துறை உயரதிகாரி அருணகிரியும் சரி, காளியை வழிக்குக் கொண்டு வர அவரது குடும்பத்தை வைத்தே அச்சுறுத்துகின்றனர். ‘எனக்கு ஒரு குடும்பம் இருக்கு. மனைவி, குழந்தைங்க இருக்கு. என்னை விட்டுடுங்க’ என பலவீனமான சமயத்தில் படத்தின் அத்தனை ஆண் கதாபாத்திரங்களும் பணிகின்றனர்.
படத்தின் முதல் ஃப்ரேம் தரும் பதற்றத்தை, படத்தின் இடைவேளைக் காட்சி அளிக்கவில்லை. பத்தாண்டுகளுக்கு முன் காளி பண்ண ‘அந்த ஒரு சம்பவம்’ எனத் தொடங்கும் ஃப்ளாஷ்-பேக், அறைக்குள் வேறொரு சம்பவம் செய்து கொண்டிருக்கும் காளியைக் காட்டி, அவல நகைச்சுவையாக இடைவேளைக் காட்சியை முடித்துள்ளனர். சுவராசியமாகவும் கலகலப்பாகவும் இருந்தாலும், படத்தின் சீரியஸ்னஸைக் கம்மி பண்ணுவதாக உள்ளன. இடைவேளைக்குப் பின், காளியின் அவசர புத்தியைக் காட்டும் அந்த சம்பவத்தில் இருந்து மீண்டும் சு பிடிக்கத் தொடங்குகிறது. அந்த இரவு யார் யாரைக் கொன்றார்கள் எனத் தெளிவு ஏற்பட்ட பின், வன்முறையான நீண்ட க்ளைமேக்ஸ் காட்சி தொடங்குகிறது.
காளியும் கலைவாணியும் அந்நியோன்யமான தம்பதி என்பதை முதற்பாடலிலேயே அழுத்தமாகப் பதிந்துவிடுகின்றனர். மீண்டும் இடைவேளைக்கு முன் அந்தப் பக்கம் செல்லாமல், காளியின் தாண்டவத்திற்குள் சென்றிருக்கலாம். முரடனான தனது கணவன் மறுபடியும் எந்தச் சிக்கலுக்கும் சென்று மாட்டிவிடக் கூடாதெனப் போராடும் கலைவாணியாக துஷாரா விஜயன் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
மகனின் உயிரைக் காப்பாற்ற எந்த அளவுக்கும் செல்லத் தயாராக இருக்கும் பெரியவர் ரவியாக மாருதி பிரகாஷ்ராஜ் (Balireddy Prudhviraj) நடித்துள்ளார். காலில் விழுவது போல் தோன்றினாலும், ‘அது உன் குடும்பம் எங்க இருக்குன்னு எனக்குத் தெரிஞ்சிடுச்சு!’ என்ற நுண்ணியமான மிரட்டலாக உள்ளது. ‘மைண்ட் கேம்’ விளையாடுவதில் நிகரற்றவராக உள்ளார். தன் மகனிடம், ‘யார்ட்டயும் உன் குடும்பத்தைத் தூக்கப் போறேன்னு சொல்லக்கூடாது; தூக்கிட்டேன்னு சொல்லணும்’ எனப் பாடமெடுக்கும் அப்பாவாக உள்ளார். முக்கியமாக மகனைப் போல் அவசரபுத்திக்காரராக இல்லாமல், தன் இளைய மகளின் பேச்சையும் பொருட்படுத்தி, நிதானமாகச் செயற்படுபவராக உள்ளார். கதாபாத்திர வார்ப்புகளை மிக நேர்த்தியாக S.U. அருண் குமார் உருவாக்கியுள்ளார்.
ஃபிளாஷ்-பேக்கில் மென்தன்மை கொண்டவராகவும், அதன் பின் அடிப்பட்ட வேங்கையைப் போலவும் உள்ளார் எஸ்.பி. அருணகிரியாக வரும் எஸ்.ஜே.சூர்யா. அவசரபுத்தியுள்ள ரெளடியாக முதலில் தோன்றினாலும், க்ளைமேக்ஸிற்கு முன் வரும் காட்சியில் வில்லத்தனத்தில் விஸ்வரூபமெடுக்கிறார் கண்ணனாக நடித்துள்ளார் சுராஜ் வெஞ்சுரமூடு. அவரை இயக்குநர் அறிமுகம் செய்யும் காட்சியில், அவரது வீட்டு விசேஷத்தில் தரையைச் சுத்தம் செய்பவராகக் காட்டுகிறார். அவர் மீது அதீத பாசமுள்ள ஒரு பணக்காரக் கலை மிளிரும் தங்கை என அந்தக் குடும்பத்தையும் பார்வையாளர்களுக்கு நெருக்கமாக அறிமுகப்படுத்தி விடுகிறார் இயக்குநர்.
வீர தீர சூரனெனக் காளியை ஏற்றுக் கொள்ளும்படியாகத் தானேற்ற கதாபாத்திரத்தில் வழக்கம்போல் அதி அற்புதமாக விக்ரம் நடித்துள்ளார். முறுக்கேறிய அவரது உடலும், வேட்டி கட்டும் அவரது ஸ்டைலும் அருமை. விக்ரம் மண்ணில் கிழங்கை விதைக்கும் காட்சியில், பார்வையாளர்களுக்கும் பதைபதைப்பை ஏற்படுத்தி விடுகின்றனர் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரும், இசையமைப்பாளரும் ஜி.வி.பிரகாஷும். ஒரு கிளாஸிக்கான கமர்ஷியல் படமாக இருக்கும் என்ற படக்குழுவின் உத்திரவாதம் உண்மையே!