
தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany)’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியைப் படக்குழுவினர் பிரத்தியேக காணொளி மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராகத் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார். மேலும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்து வழங்குகிறார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வெளியாகி 33 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்கள், டீசர், ட்ரெய்லர், ஸ்னீக் பிக் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

