Shadow

லவ்வர் | பேசித் தீர்க்கும் பிரச்சனையை எதிர்கொள்ள கற்றுக் கொடுக்கும்

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் இந்தப் படத்தின் படத்தொகுப்புப் பணிகளை பரத் விக்ரமன் மேற்கொண்டிருக்கிறார். காதலை மையப்படுத்தித் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் நாசரேத் பஸ்லியான், மகேஷ்ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக நடைபெற்ற பிரத்தியேக வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் ரஞ்சித் ஜெயக்கொடி, விநாயக், விநியோகஸ்தர் சக்திவேலன் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நடிகர் கண்ணா ரவி, “குட்நைட் படத்திற்கு ஊடகமும், ரசிகர்களும் ஆதரவளித்ததால் தான் அப்படம் வெற்றிப் பெற்றது. அத்துடன் அந்தப் படம் நிறைய பொக்கிஷங்களைக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து தற்போது ‘லவ்வர்’ என்ற படமும் தயாராகியிருக்கிறது. இதுவும் வெற்றிப்படம் தான். தயாரிப்பாளர் யுவராஜிடம், ‘எந்த மாதிரியான படங்களைத் தயாரிப்பதில் விருப்பம் இருக்கிறது?’ எனக் கேட்டபோது, ‘எனக்குப் பிடித்த படமாக அமையவேண்டும். அந்தப் படம் அந்த ஆண்டின் டாப் ஐந்து படங்களில் ஒன்றாக இடம்பெறவேண்டும்’ என்றார். அந்த வகையில் தற்போது அவரின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘லவ்வர்’ படமும் டாப் ஐந்து படங்களில் ஒன்றாக இருக்கும். இந்தப் படத்தின் இயக்குநரான பிரபுராம் வியாஸ் மீது தயாரிப்பாளர்கள் மிகப் பெரிய நம்பிக்கையை வைத்துள்ளார்கள்.

இயக்குநர் பிரபுராம் வியாஸ், அவர் இயக்கிய குறும்படத்தின் மூலம் எனக்கு அறிமுகமானார். அதற்கு பிறகு ‘லிவ் இன்’ எனும் வெப் சீரிஸில் சந்தித்தோம். அந்தத் தொடரின் வெற்றிக்குப் பிறகு ஏராளமான தயாரிப்பாளர்கள் ‘லிவ் இன்’ தொடரின் அடுத்த பாகத்தை இயக்குங்கள் எனக் கேட்டனர். அதற்கு மறுப்பு தெரிவித்த வியாஸ், உடனே இயக்காமல், மீண்டும் நேர்மையாக உழைத்து உருவாக்கிய திரைக்கதை தான் ‘லவ்வர்’. அதனால் இந்தப் படமும் வெற்றிப் பெறும். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது. இந்தப் படம் உங்களைப் பற்றியும், உங்களுடைய காதலைப் பற்றியும், காதலரைப் பற்றியும் மேலும் பல புரிதல்களை உங்களுக்குள் ஏற்படுத்தும். பேசித் தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை எந்த வகையான புரிதலுடன் பேசி வாழ்க்கையை சந்தோஷமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுக்கும்” என்றார்.