Shadow

லவ்வர் | ‘இருட்டில் கிடைத்த வெளிச்சம்’ – மணிகண்டன்

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். ராஜ்கமல் கலை இயக்குநராகப் பணியாற்றியிருக்கும் இந்தப் படத்தின் படத்தொகுப்புப் பணிகளை பரத் விக்ரமன் மேற்கொண்டிருக்கிறார். காதலை மையப்படுத்தித் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் நாசரேத் பஸ்லியான், மகேஷ்ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இதற்காக நடைபெற்ற பிரத்தியேக வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் ரஞ்சித் ஜெயக்கொடி, விநாயக், விநியோகஸ்தர் சக்திவேலன் மற்றும் படக்குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தயாரிப்பாளர் மகேஷ்ராஜ் பஸ்லியான், “ ‘தேன்சுடரே..’ என்ற பாடல் வெளியானவுடன் நாயகன் மணிகண்டனுக்கு ஃபோன் செய்து, ‘குறிப்பிட்ட குகை காட்சியில் எப்படி நடித்தீர்கள்?’ எனக் கேட்டபோது, அதற்கு அவர், ‘வாழ்க்கையில் வெற்றியே கிடைக்காத ஒருவர் இருட்டில் நடந்து வரும் போது திடீரென்று ஒரு வெளிச்சம் வந்தால் எப்படியிருக்கும்? அதை மனதில் நினைத்துக் கொண்டு தான் நடித்தேன்’ என எளிதாக விளக்கமளித்தார். இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

இந்தப் படத்தை நானும் பார்த்துவிட்டேன். ஃபென்டாஸ்டிக் மூவி. படத்தில் நடித்திருந்த அனைத்து நடிகர்களும் நன்றாக நடித்திருந்தார்கள். ‘குட்நைட்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இயக்குநர் பிரபுராம் இப்படத்தின் கதையைச் சொன்னார். ஆனால் இது தொடர்பாக யுவராஜ் தான் முடிவெடுப்பார் என்று சொன்னேன். ஏனெனில் திரைத்துறையைப் பொறுத்தவரை எனக்கு யுவராஜ் தான் வழிகாட்டி. அவர் செய்யும் விசயங்கள் எனக்கு பல சமயங்களில் பிரமிப்பைத் தரும்.

குட்நைட் படத்தின் வெற்றிவிழாவில் மில்லியன் டாலர் ஸ்டூடியோசும், எம்ஆர்பி எண்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தரமான படங்கள் வழங்கும் எனச் சொன்னேன். தற்போது ‘லவ்வர்’ படத்தை உருவாக்கியிருக்கிறோம். இதுவும் தமிழ் ரசிகர்களுக்கான தரமான படம்.

2015 ஆம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் டிசைன் விசயமாக யுவராஜ் எனக்கு அறிமுகமானார். அதன் பிறகு அவருடன் பழகி வருகிறேன். தற்போது எங்களுடைய இரண்டாவது படம் வெளியாகும் சமயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ‘லால் சலாம்’ படமும் வெளியாகிறது. இதுவே எங்களுக்குக் கிடைத்த ஆசியாக கருதுகிறோம். இந்த இரண்டு படங்களும் வெற்றிபெற வேண்டும்” என்றார்.

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில்,“ திரைத்துறையில் டிசைனிங் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது தயாரிப்பாளராகத் திட்டமிட்டேன். அந்தத் தருணத்தில் பலரும் படத்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டது குறித்து எதிர்நிலையான கருத்துகளைச் சொல்லிக் கொண்டிருந்தனர். யாரும் எனக்கு ஆதரவாக பேசவேயில்லை. அப்போது சபரி எனும் நண்பர் உதவி செய்தார். அதன் பிறகு சக்திவேலன் எங்களைத் தொடர்பு கொண்டார். நல்ல கன்டென்ட் இருந்தால், அதனை ஆதரிக்க இங்கே ஆட்கள் இருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொண்டேன்.

இந்தப் படத்தை கடந்த ஆகஸ்ட்டில் தான் தொடங்கினேன். அதற்குள் இந்தப் படத்தின் பணிகளை நிறைவு செய்து திரைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். இதற்காகக் கடுமையாக உழைத்த என்னுடைய குழுவினருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘லவ்வர்’ திரைப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.