
மாமனிதன் படத்தின் நீட்சியாகவே உள்ளது. ஒரு ஆண், தன் குடும்பத்துக்காக எந்த எல்லைக்குச் செல்வான் என்று மீண்டுமொரு முறை அழுத்தமாகப் பதிந்துள்ளார் சீனு ராமசாமி.
செல்லதுரையும், அவன் தங்கையும் நிராதரவாக ஆண்டிபட்டிக்கு வருகின்றனர். கோழிப்பண்ணை வைத்திருக்கும் பெரியசாமியின் ஆதரவில் வளர்கின்றனர். தன் தங்கைக்காகவே வாழுகிறான் செல்லதுரை. வாழ்வில் ஏற்படும் திடீர் திருப்பமாக, செல்லதுரையின் தங்கை ஒருவனுடன் பேசிக் கொண்டிருக்கிறாள்; சிறு வயதில் தன்னை விட்டுச் சென்ற தாயைப் பார்க்கின்றான்; வேறொரு மணம் புரிந்து கொள்ளும் தந்தையும் அவனைத் தேடி வருகிறார். இவற்றை செல்லதுரை எப்பசி எதிர்கொள்கிறான் என்பதுதான் படத்தின் கதை.
கதையின் மாந்தர்களைத் துரிதமாக அறிமுகப்படுத்திவிட்டு, முதல் பாதி முழுவதும் கோர்வையற்ற காட்சிகளாலும் வசனங்களாலும் ஒப்பேற்றியுள்ளார். இடைவேளைக்குப் பிறகே படம் தொடங்குகிறது. முதற்பாதியை ஒப்பேற்ற நாயகி பிரிகடா சகா பயன்படுகிறார். தன்னை ஏறெடுத்துப் பார்க்காத செல்லதுரையைச் சுற்றிச் சுற்றிக் காதலிக்கும் பாத்திரத்தில் வருகிறார். இரண்டாம் பாதியில், நாயகனைத் தடுத்தாட்கொண்டு அவனுக்கு எதார்த்தைப் புரிய வைக்கவும் உதவியுள்ளார்.
செல்லதுரையின் தங்கை ஜெயசுதாவாக சத்யா தேவி நடித்துள்ளார். அண்ணனே உலகம் என்றிருப்பவர், அண்ணனின் ஒரு சுடு சொல்லால் நிலைகுலைந்து போகுமிடத்தில் நன்றாக நடித்துள்ளார். ஜெயசுதாவைக் காதலிக்கும் செளந்தராக வரும் லியோ சிவகுமார், இன்னும் கொஞ்சம் இயல்பாக நடித்திருக்கலாம். செல்லதுரையின் அம்மாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தாவைப் பார்த்தாலே பரிதாபம் எழும்படி ஒப்பனை செய்துள்ளனர்.
பெரியசாமியாக வரும் யோகிபாபு படத்தின் கலகலப்பிற்கு உதவவில்லை எனினும், முதற்பாதியில், கொஞ்சமேனும் படத்தோடு கனெக்ட்டாக வைப்பவராக உள்ளார். சில தருணங்களைக் குணசித்திர நடிப்பால் உருவாக்குகிறாரே அன்றி, படம் முழுவதும் அவர் வந்தும் அதனால் பெரிய தாக்கம் எதுவும் நிகழவில்லை. சீனு ராமசாமி படமென்றாலே கூடுதல் வாஞ்சையுடன் பாடல் எழுதி ரசிக்க வைக்கும் வைரமுத்து, இப்படத்திலும் அதனைத் தொடர்கிறார். ரகுநந்தனின் இசையில் பாடல்கள் கவருகின்றன.
கதையின் நாயகன் செல்லதுரையாக ஏகன் நடித்துள்ளார். சில கோணங்களில் மறைந்த நடிகர் முரளியை ஞாபகப்படுத்துகிறார். தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதிக்குக் கிடைத்த வாய்ப்பை, சீனு ராமசாமியின் திரைக்கதையால் ஏகனுக்கு வழங்க முடியவில்லை. கொஞ்சம் மெத்தனமாகவே முதற்பாதியை அணுகியுள்ளார் என்றே சொல்லவேண்டும். இரண்டாம் பாதியில் சடுதியில் நிகழும் சம்பவங்களை, முதற்பாதியில் இருந்தே கொண்டு வந்து, அழுத்தமான படைப்பாகக் கோழிப்பண்ணை செல்லதுரையைக் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால், போதுமென்ற பொன் செய்யும் மருந்தை அருந்தியவராகக் கடந்துவிடுகிறார். தென்மேற்கு பருவக்காற்று படத்தின் வெற்றிக்கு, வீராயி (சரண்யா பொன்வண்ணன்), பேச்சி (வசுந்த்ரா காஷ்யப்) போன்ற பெண் கதாபாத்திரங்கள் மிக முக்கிய காரணம். மாமனிதனிலும், இப்படத்திலும், குடும்பத்தலைவனான ஆண் என்றாலே தியாகிதானே என்ற பாவனைக்குள் சிக்கிக் கொண்டுள்ளார் சீனு ராமசாமி. அவரது படைப்பு தொடவேண்டிய உயரத்திற்குத் தடையாக உள்ளது அப்பாவனை.