Shadow

மாமனிதன் விமர்சனம்

தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை படங்களைத் தொடர்ந்து, நான்காவது முறையாக இயக்குநர் சீனு ராமசாமியும், விஜய் சேதுபதியும் இணைந்துள்ளனர்.

ஆட்டோ ஓட்டுநரான ராதாகிருஷ்ணன், குடும்பத்தைக் கைகழுவி, வீட்டை விட்டு ஓடித் தலைமறைவாகிறார். ஏன் ஓடினார், எங்கே ஓடினார், மீண்டும் குடும்பத்துடன் இணைந்தாரா இல்லையா என்பதுதான் குடும்பத்தின் கதை.

ராதாகிருஷ்ணனாக விஜய்சேதுபதியும், அவரது மனைவியாக காயத்ரியும் நடித்துள்ளனர். படத்தின் தொடக்கம், விஜய் சேதுபதி – காயத்ரி இணையின் அழகான கூட்டினைக் காட்டி, அவர்கள் இருவரும் எப்படிக் காதலித்து மணம் புரிந்தார்கள் என்ற அத்தியாயமே! விஜய்சேதுபதியின் மகளாக நடித்துள்ள மானஷ்வி வரும் ஃப்ரேம்கள் அனைத்துமே கவிதை. மிக யதார்த்தமாக, மனதைக் கொள்ளை கொள்ளும் அந்த அத்தியாயத்திற்குப் பிறகு, ரியல் எஸ்டேட் முதலாளியுடன் விஜய் சேதுபதி பார்ட்னர்ஷிப் போடுவதில் இருந்து, படம் ஒரு சீரியஸ் டோனை எடுத்து, படம் சிற்றோடை போல் நகரத் தொடங்குகிறது.

ரியல் எஸ்டேட் முதலாளி பணத்துடன் ஓடி விட, ஊர் மக்களிடம் முன்பணம் பெற்றுத் தரும் ராதாகிருஷ்ணன் சிக்கலுக்கு உள்ளாகிறார். ராதாகிருஷ்ணன் ஆட்டோ ஓட்டுநராக உள்ள ஊர் பண்ணைப்புரம் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் முறையாக, இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளது இன்னொரு விசேஷம்.  கேரளா, காசி என தலைமறைவு வாழ்க்கை வாழும் ராதாகிருஷ்ணன் ஏன் மாமனிதனாகக் கொண்டாடப்படுகிறார் என்பதே படத்தின் முடிவு.

ராதாகிருஷ்ணனின் குடும்ப நண்பராக நடித்துள்ள குருசோமசுந்தரத்தை வாஞ்சையோடு ‘வாப்பா’ என அழகாக அழைக்கிறார் விஜய்சேதுபதி. கேரளாவில், அவர் தன் மகள் வயதையொத்த அனிகாவிடமும், அவரது தாய் ஜுவல் மேரியிடமும் நட்பாகிறார். ஆனால், அழகியலாகக் காட்சிப்படுத்தப்பட்ட அளவு எமோஷ்னலாக அது கனெக்ட் ஆகவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல், இயலாமையில், பிரச்சனை எதிர்கொள்ளும் திறனின்றி ஓடியவர் என்பதை மறந்து, இயக்குநர், ராதாகிருஷ்ணனை மாமனிதன் ஆக்கிவிடுகிறார். காரணம், அப்பன் தோத்த ஊரில் பிள்ளைகள் பிழைப்பதற்குக் கஷ்டமென, அவர் தன் சம்பாதியத்தைக் குடும்பத்தினருக்குத் தெரியாமல் வாப்பா மூலம் உதவி வருகிறார். ஓடிப் போனாலும், குடும்பத்திற்காக உழைப்பதால் ராதாகிருஷ்ணன் மாமனிதன் ஆகிவிடுகிறாராம்.

தனது குடும்பத்திற்காக வாழும் அனைவருமே மாமனிதர்களே! ஆனாலும், ஊராரின் கோபத்திற்கும், வெறுப்பிற்கும், பாராமுகத்திற்கும் இடையே குடும்பத்தைக் கட்டிக் காத்த காயத்ரிக்கும் ‘மாமனிதர்’ என்ற பட்டத்தைப் பெரிய மனதுடன் இயக்குநர் வழங்கியிருக்கலாம். பிரச்சனைக்குப் பயந்து ஊரை விட்டு ஓடிய ஒருவன் சம்பாதிப்பதும், அதைக் குடும்பத்திற்கு அனுப்புவதும் மட்டுமே ஒருவனை மாமனிதன் ஆக்கிவிடுவதில்லை. சிலுவையைச் சுமந்தவர், சிலுவையைத் தந்தவரின் காலில் விழும் அடிமைத்தனத்தை மானுட இழிவாகவே காண வேண்டியுள்ளது. ஓர் அழகான படத்தைக் கொடுத்த சீனு ராமசாமி தீர்ப்பை மாற்றி எழுதியிருக்கலாம்.