Shadow

மாயோன் விமர்சனம்

மாயோன் மார்பினன் மணிகள் வைத்தபொற் பெட்டியோ வானோர்
உலகின்மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளே யாதென உரைப்பாம்.

– நகரப்படலம், பாலகாண்டம், கம்ப ராமாயணம்

மாயோன் என்பது திருமாலைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று. அவர், முல்லை நிலக்கடவுள் என பண்டைய தமிழர்களால் இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில், மாயோன் மலையிலுள்ள பள்ளிகொண்ட கிருஷ்ணர் கோயிலின் தொன்மத்தைச் சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. பாவைக் கூத்தாகவும், அனிமேஷன் உதவியாலும், அக்கோயில் வரலாறு பற்றிய ஐதீகத்தையும் நம்பிக்கையையும் அழகாகக் கதையின் களமாக அமைத்துள்ளனர். இவையே தனிக்கதையாக ரசிக்கத்தக்கும் அளவு, இளையாராஜாவின் இசையோடு கை கோர்த்து ஓர் அடர்த்தியான அனுபவத்தை வழங்குகிறது. தொன்மத்திலுள்ள அழகியல், மையக் கதையான ரகசிய அறை பொக்கிஷம், களவாட நினைக்கும் இத்தாலிய வில்லன் என்பதையெல்லாம் இரண்டாம் பட்சமாக்கிவிடுகிறது.

தொன்மத்தைத் திரையில் கடத்த தோல்பாவைக் கூத்தையும், அனிமேஷனையும் பயன்படுத்தியுள்ளனர். கலை இயக்குநர் பாலாவின் கைவண்ணத்தில் உருவான பிரம்மாண்டமான பள்ளிகொண்ட கிருஷ்ணர் சிலை, அதற்கு கிருஷ்ணர் ஆன்த்தம் அமைத்த இளையராஜாவின் இசை என்ற ஆன்மிகப் பக்கம் படத்தின் பெரும்பலம். வண்டு போல் அமைக்கப்பட்ட ட்ரோனின் (drone) கணினி வரையியல் (CG) நேர்த்தி, ப்ளூ பிரின்ட்டை ஸ்கேன் செய்து பாதாள அறையைக் காட்டும் ஸ்கேன்னர் முதலில் விஞ்ஞான யுக்திகள் இன்னும் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கலாம். அறிமுக இயக்குநர் கையாளுவதற்குச் சற்று சிரமமான கதைக்களன் என்பதை சில காட்சிகள் உணர்த்துகிறது.

கோயிலுக்குள் இரவில் தங்குபவர்களுக்கு ஏற்படும் மாயத்தோற்றங்களுக்கான காரணங்களை அழகாகப் புனைந்துள்ள அருண்மொழி மாணிக்கம், இரவில் கோயிலுக்குள் கேட்கும் அமானுஷ்ய ஒலிகளுக்கான காரணங்களையும், கிருஷ்ணரின் புல்லாங்குழலையும் சாமர்த்தியமாக அடுத்த பாகத்திற்கான லீடாக முடித்துள்ளார், திரைக்கதை ஆசிரியரும் தயாரிப்பாளருமான அருண்மொழி மாணிக்கம்.

தொல்லியல் துறையில் பணி புரிபவர்களாக சிபி சத்யராஜ், தான்யா ரவிசந்திரன், கே.எஸ்.ரவிகுமார், ஹரீஷ் பேரடி, பகவதிபெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். போர்க்கலையின் முக்கிய சூட்சமமாக, எதிரியின் மனதை ஏமாற்றுவதென்ற சதுரங்க ஆட்டத்தில் வல்லவரான அர்ஜூன் மணிமாறனாக சிபி நடித்துள்ளார். கல்வெட்டுகளைப் படிக்கக் கூடிய (Epigraphist) அஞ்சனாவாக தான்யா ரவிசந்திரன் நடித்துள்ளார். கட்டுடல் புஜ பலத்தைக் காட்டி நாயகனிடம் அடிவாங்கவென்றே படத்தில் ஒரு வில்லன் வைத்துள்ளனர்.

படம், “வாழ்க்கையை வாழ இரண்டு விதங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று, உலகில் எதுவுமே அதிசயமில்லை. மற்றொன்று, அனைத்துமே அதிசியம்” என்ற ஆல்பர்ட் எயின்ஸ்டீனின் மேற்கோளில் தொடங்கி, அதிலேயே முடிகிறது. படம் குறித்த விமர்சனத்திற்கும் எயின்ஸ்டீனின் இம்மேற்கோள் சால பொருந்துகிறது.