
மதுரம் எனும் அருந்தமிழ் வார்த்தைக்கு இனிமை (Sweetness) என்று பொருள். தலைப்பிற்குத் தகுந்தாற்போல், அகமது கபீர் இயக்கிய இப்படமும் வெல்லக்கட்டியாய் மனதில் கரைகிறது.
கதையின் களம் ஒரு அரசு மருத்துவமனை. அதிலும் குறிப்பாக, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுடன் உடன் வந்தவர்கள் தங்குவதற்காக உள்ள ஒரு பெரிய அறையில் தான் கதை நிகழ்கிறது. மருத்துவமனை என்றாலே, மனதிற்குள் ஓர் இருண்மை, பதற்றம் தன்னிச்சையாக உருவாகும். ஆனால் படத்தில், ரவி எனும் முதியவர், தாஜுதின் எனும் இளைஞனிடம், எப்படி மருத்துவமனை ரொமான்ஸ்க்கு ஏற்ற இடம் என்று விவரிப்பார். மருத்துவமனையின் பரபரப்பு மெல்ல அடங்கி, ஒளிப்பதிவாளர் ஜிதின் ஸ்டானிஸ்லாஸின் க்யூட்டான ஷாட்களில், மருத்துவமனையின் அழகு மிளிரத் தொடங்குகிறது.
மலையாளப் படங்களுக்கே உரிய பிரத்தியேக அழகுகளில் ஒன்று, உணவினையும், அது சமைக்கப்படும் நேர்த்தியையும் மிக அற்புதமான ஷாட்களில் காட்சிப்படுத்துவது. நாயகனின் பில்-டப் சேஷ்டைகளையும், நாயகியின் அங்கங்களையும் தவிர்த்து ரசிப்பதற்கு உலகில் ஏராளமான விஷயங்கள் உள்ளன என்பதை வாகாக கோலிவுட் படங்கள் மறந்து விட, மாலிவுட்டோ சமைப்பதிலும் உணவிலும் உள்ள ஆனந்தத்தை விஷுவலாக்கத் தவறுவதே இல்லை. உஸ்தாத் ஹோட்டல், சால்ட் & பெப்பர் என சட்டென சில படங்கள், உணவின் ருசியை மனதில் கிளறி விடுகின்றன. இப்படமும் அப்படியொரு மாயத்தைச் செய்கிறது. சித்ராவிற்கும் சாபுவிற்கும் இடையே ஆத்மார்த்தமான காதல் மலர்வதற்கு பிரியாணி காரணமாக அமைகிறது. பிரிக்க முடியாத காம்போவான காதலும் பிரியாணியும் மதுரத்தை மேலும் இனிக்கச் செய்கிறது.
நமக்கு, எல்லாக் கதைகளும் ஏதோ ஒரு வகையில் பரீச்சமயமானதாகவும், மீள் கூறுதலாகவும் தோன்றத் தொடங்கிவிட்டது. அதையும் மீறி ஒரு படைப்பை ரசிக்க வைக்க, தொழில்நுட்ப மாயாஜாலங்கள் ஓரளவுக்கு உதவினாலும், சரியாகக் கடத்தப்படும் கதாபாத்திரங்களின் எமோஷன்ஸே நம்மைப் படைப்போடு கட்டிப் போட வைக்கும். உதாரணத்திற்குப் பிரியமானவர்களுக்குத் தரும் சர்ப்ரைஸ் கிஃப்ட்டை எடுத்துக் கொள்வோம். யாருக்குத் தருகிறோம், என்ன தருகிறோம் என நமக்குத் தெரிந்திருந்தாலும், நாம் எதிர்பார்ப்பது அவர்களின் முகத்தில் தோன்றும் ஒரு நொடி வியப்பும், அது மகிழ்ச்சியாக மாறும் ரசவாதத்திற்கே! திரையிலும், அப்படி சரியாகக் கடத்தப்படும் எந்த ஒரு எமோஷன்ஸும், பார்வையாளர்கள் மனதில் சலனத்தை உருவாக்கும். மாலிவுட் படங்கள் வியந்தோதப்பட அவர்கள் தங்கள் எதார்த்த உடற்மொழியும், கச்சிதமான முக பாவனைகளும் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும் சலனங்களே காரணம். மலையாளப் படங்களில், ஃப்ரேமின் ஏதோ ஒரு மூலையில் முகம் தெரியாமல் கடக்கும் ஒரு நபர் கூட, கேமரா பிரக்ஞையற்ற அவர்களது மிக இயல்பான நடிப்பால் நம் கவனத்தை ஈர்த்துவிடுகின்றனர்.
சாபுவாக ஜோஜு ஜார்ஜ். வேட்டியை மடித்துக் கொண்டு அவர் மீன் வறுவல் செய்வதில் இருந்து எல்லாமே அழகாய் உள்ளது. பிரியாணி அழகு பெற தன்னுள் இருக்கும் எக்கச்சக்கமான காதல் தான் காரணமென ஸ்ருதி ராமசந்திரனுடன் சொல்லும் காட்சி, இந்திரான்ஸ் தன் 40 வருட மணவாழ்க்கை பற்றியும், காதல் பற்றியும் சொல்லும்பொழுது அதைக் கேட்டுக் கொள்ளும் காட்சி என ஒவ்வொரு ஃப்ரேமிலும் ரசிக்க வைக்கிறார் ஜோஜு ஜார்ஜ். ஒருவர் ஆறு மாதங்களுக்கு மேல் ஒரு மருத்துவமனையில் தங்க நேரிடும் பொழுது, அவர் பாதி டாக்டராகிவிடுகிறார். தன் மனைவிக்காக மருத்துவமனையே கதி என்றிருக்கும் ஜோஜு ஜார்ஜ், பதற்றமுடன் இருப்பவர்களை ஆற்றுப்படுத்துபவராக இருக்கிறார். ‘கவலைப்பட ஒன்றுமில்லை’ என்று மருத்துவமனையில் சொல்லப்படும் ஒரு வாக்கியத்தை விட புனிதமான வாக்கியம் வேறுண்டா? பெரும் வலியைச் சுமந்தாலும், சக மனிதர்கள் மீது இயல்பாய் எழும் அந்த வாஞ்சை தான் சாபு கதாபாத்திரத்தின் மீது ‘லவ்’ வரவைக்கிறது.
இப்படி, படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரம் பற்றியும் தனித் தனியாக வியக்க ஏராளம் உண்டு. தாயின் அரவணைப்பிலே வளர்ந்ததால் பதற்றத்துடனே இருக்கும் கெவின், மாமியாரை இம்ப்ரஸ் செய்ய முயற்சி செய்யும் செர்ரி, 40 வருடங்களில் மனைவியைப் பிரிந்ததே இல்லை என வருத்தப்படும் ரவி, முகம் நிறைய சிரிப்பும் மனம் நிறைய அன்புடன் இருக்கும் மதீனா ஹோட்டல் ஓனராக வரும் ஜாஃபர் இடுக்கி, ‘ஜன்னல் பக்கத்தில் அமர்ந்து அறையில் ஏ/சி இருப்பதாக நினைத்துக் கொள்’ எனச் சொல்லும் விஷ்ணு, பிரியாணியையும் சாபுவையும் காதலுடன் நோக்கும் சித்ராவின் கண்கள், மிக பிஸியாக இருக்கும் ரிசப்ஷனிஸ்ட் என படத்தில் வரும் அனைவருமே மதுரமாய் இனிக்கின்றனர். நீறு பூத்த நெருப்பாய்க் கனன்று கொண்டிருக்கும் மையக் கதாபாத்திரத்தின் வாதையை மீறி, அணுக்கமான காதலையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும் உணரச் செய்கின்றது படம்.
Sony LIV இல் காணக் கிடைக்கும் இப்படத்தை, தமிழ் டப்பிங்கில் பார்க்காமல் மலையாளத்திலேயே பார்த்தால் நெஞ்சில் மதுரத்தை உணர்வது நிச்சயம்.