Shadow

மகாராஜா விமர்சனம்

தன்னை மூன்றுபேர்  அடித்துப் போட்டுவிட்டு, தன் வீட்டில் இருந்த லட்சுமியை  தூக்கிச் சென்றுவிட்டார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருகிறார் விஜய் சேதுபதி. லட்சுமி என்பது என்ன, அந்தப் புகாரைக் காவல்துறை ஏன் எடுத்துக் கொள்ள மறுக்கிறது, பின்னர் ஏன் அந்தப் புகாரை எடுத்துக் கொள்கிறது, அந்தப் புகாரின் பின்னால் ஒளிந்திருக்கும்  உண்மை என்ன என்பது தான் இந்த மகாராஜாவின் கதை.

கதையை விரிவாகப் பேச முயன்றால் திரைக்கதையின் சுவாரசியங்கள் கெட்டுவிடும் என்பதால், கதை என்ன என்பதைப் பெரிதாக விவாதிக்காமல் காட்சிகளையும், திரைக்கதை யுக்தியையும், கதாபாத்திர வடிவமைப்பையும் பற்றி அதிகமாக விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன்.

காட்சிகளைப் பற்றிப் பேசத் துவங்கினால், ஒவ்வொரு காட்சியுமே Half Way-இல் துவங்குகிறது. அதாவது ஒரு சம்பவத்தின் பாதியிலிருந்து காட்சி துவங்குகிறது. அதுபோல் ஒரு காட்சி துவங்கும் போது, அதன் தன்மை ஒன்றாகவும் முடியும் போது, அதன் தன்மை வேறொன்றாகவும் மாறுகிறது, இரண்டு காட்சிகளை உதாரணமாகப் பார்க்கலாம். கான்ஸ்டபிள் உடையில் இருக்கும் முனிஷ்காந்த், ‘வாங்க போலீஸ்’ என்று அழைக்க, பின்னால் இருந்து கைலி பனியன் அணிந்திருக்கும் கல்கி வருகிறார். அவர், ‘சார் எப்டி சார்?’ என்று கேட்க, முனிஷ்காந்த் சிரித்துக் கொண்டே, ‘உங்களுக்கு எப்படி வசதியோ அப்டி பார்த்து நில்லுங்க போலீஸ். உங்களுக்குத் தெரியாததா?’ என்று கேட்க கல்கி சிரித்துக் கொண்டே, ‘ஓகே சார்’ என்று கூறிவிட்டு, கைலியை விலக்கி, தன் பின்புறத்தைத் தூக்கிக் காட்டியபடி, கைகள் இரண்டையும் சப்போர்ட்டாக தூணில் வைத்துக் கொண்டு நிற்க, முனிஷ்காந்த் கையில் இருக்கும் லத்தியால் கல்கியின் பின்புறத்தில் அடிக்கத் துவங்குவார். இக்காட்சி சாதாரணமாகத் துவங்கி நகைச்சுவையாக முடியும்.

அதுபோல் மற்றொரு காட்சியில் வினோத் சாஹர் சமைத்துக் கொண்டிருப்பார். டைனிங் டேபிளில் அனுராக் அமர்ந்திருப்பார். சாஹர் சமைப்பது தொடர்பான ஏதோவொரு பொருள் எங்கிருக்கிறது என்று கேட்க, அனுராக் வீட்டில் இருப்பவர்களிடம் அப்பொருள் எங்கிருக்கிறது என்று கேட்பார். இப்பொழுது கேமரா நகர்ந்து வீட்டில் இருக்கும் இரு பெண்களைக் காட்ட, இருவரும் கட்டிப் போடப்பட்டு அடிபட்ட காயங்களுடன் கிடப்பர். காட்சியின் இறுதியில் அப்பெண்கள் இருவரையும் கொன்றுவிட்டு, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுடன் இருவரும் தப்பிச் செல்வார்கள். இந்தக் காட்சி துவங்கும் போது சாதாரணமாகத் துவங்கி முடியும் போது குற்றப் பின்னணியுடன் முடியும். அதுபோல் மேற்சொன்ன இரண்டு காட்சியுமே பாதியில் இருந்து தான் துவங்கும். அதாவது கல்கி திருடன் என்பதும், அவனை போலீஸார் விசாரணைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள் என்பதும் காட்சியில் இருக்காது, விசாரிப்பது மட்டும்தான் இருக்கும். அது போல் சாஹர் மற்றும் அனுராக் அந்த வீட்டிற்குள் எப்படி நுழைந்தார்கள், அப்பெண்களை எப்படித் தாக்கினார்கள் என்பதெல்லாம் காட்சியில் இருக்காது. அவர்கள் சமைக்கத் துவங்குவதில் இருந்து தான் காட்சி துவங்கும்.

இப்படி ஒவ்வொரு காட்சியுமே துவங்கும் முறையும், முடியும் விதமும் யூகிக்க முடியாத வகையில் படம் முழுக்கவே இருப்பது சிறப்பு.

அடுத்து திரைக்கதையாகப் பார்த்தால், அந்த லட்சுமி என்பது என்ன என்பதெல்லாம் பெரிய திரைக்கதை சுவாரசியமே இல்லை, ஏனென்றால் படம் துவங்கி பத்தாவது நிமிடத்திலேயே அந்த லட்சுமி என்ன என்பது பார்வையாளர்களுக்குத் தெரிந்துவிடும். அதையும் மீறி இரண்டாம் பாதியில் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்படும் முடிச்சுகள் தான் மொத்த சுவாரசியமும். அது என்ன மாதிரியான முடிச்சுகள் என்று சொல்ல முற்பட்டாலும் திரைக்கதை சுவாரசியம் கெடக்கூடும் என்பதால் அதையும் தவிர்க்கிறோம்.

அடுத்ததாக கதாபாத்திர வடிவமைப்பு. இளமையிலேயே வாழ்க்கையின் பெரும் சோகத்தைக் கடந்தவனின் முகத்தில் தெரியும் தொலைந்து போன மகிழ்ச்சி, ஆரவாரம் இவற்றின் கலவையாக விஜய்சேதுபதி கதாபாத்திரம் வார்க்கப்பட்டு இருக்கிறது. தன் மகள் மீது அவருக்கு இருக்கும் அளவற்ற பாசமும் காட்சிகளின் வழி புலனாகின்றது. மேலும் அவரின் பிடிவாத குணத்திற்கு சாட்சியாக வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் கதைக்கு வலு சேர்க்கின்றன. மேலும் முதல்பாதியில் தொலைந்து போன லட்சுமியை தேடுவதாகக் காட்டிக் கொண்டு ஒரு பைத்தியகார மனோபாவத்தோடு திரிவதாய்த் தோற்றம் தரும் அக்கதாபாத்திரத்தின் வைராக்கியம் இரண்டாம் பாதியில் தெரிய வரும் போது அக்கதாபாத்திரத்தின் நேர்த்தி விளங்குகிறது.

விஜய் சேதுபதி கதாபாத்திரத்திற்கு ஈடாக வில்லனாக நடித்திருக்கும் அனுராக் காஷ்யப் மற்றும் பாய்ஸ் மணிகண்டன் இருவரின் கதாபாத்திரமும் நிறுவப்பட்டிருக்கிறது. தன் மகளின் செல்வ செழிப்பான வாழ்க்கைக்காக எவரின் வாழ்க்கையையும் அழிக்கத் துணியும் அனுராக்கின் கதாபாத்திரமும், சிறைவாசம் பழகிப் போன ஒருவன், எந்தவொரு நிகழ்வையும் முரட்டுத்தனமான துணிச்சலுடன் அணுகும் துணிவு கொண்ட கதாபாத்திரமாக வரும் பாய்ஸ் மணிகண்டன் கதாபாத்திரமும் திரைக்கதைக்குப் புதிரையும் புதுமையையும் கொடுக்கின்றன.

அதுபோல் வழக்கமான மாமூல் வாங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் வரும் நட்டி கதாபாத்திரம், போலீஸ் இன்ஃபார்மராக வரும் சிங்கம் புலி கதாபாத்திரம், கோபமும் மூர்க்கமும் கொண்ட முரட்டுத்தனமான போலீஸ் அருள்தாஸ் கதாபாத்திரம், வெகுளித்தனமான போலீஸ் முனிஷ்காந்த் என ஒட்டு மொத்தமாக போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் ஒவ்வொரு போலீஸுக்கும் ஒவ்வொரு விதமான கதாபாத்திர நிறம் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு.

முதல்பாதி இரண்டு எஸ்ஸென்ட்ரிக் மனிதர்களுக்கு இடையேயான மோதலாக மட்டுமே திரைப்படம் வடிவம் கொள்கிறது. முதல்பாதியில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் ஒரு பைத்தியக்காரத்தனமான கதாபாத்திரமாகவும், எதிராளியின் கதாபாத்திரம் ஒரு சைக்கோ கதாபாத்திரம் போலவும் தோற்றம் கொண்டு இவர்களுக்கு இடையேயான மோதல் தான் ஒட்டுமொத்த படம் என்பதாய்த் திரைப்படம் தோற்றம் கொடுக்கிறது.

ஆனால் இரண்டாம் பாதியில் அப்படியே அனைத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போடுகிறது திரைக்கதை. வாழ்க்கையில் சூழ்நிலைகள் ஏற்படுத்தும் விரோதம் எவ்வளவு தீவிரமாக எதிர்வினை ஆற்றும் என்பதையும், அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியாத புதிருடன் நகரும் அன்றாட வாழ்க்கை மீதான வியப்பையும் மேலிடச் செய்யும் தன்மையுடன் இரண்டாம் பாதி திரைக்கதையும், கதையும் அமைக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இரண்டாம் பாதியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் முதல்பாதி நிகழ்வுடன்  கோர்க்கும் மாயங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் கானலை விளக்கி காட்சிகளை மனத்திரையில் தெளிவாக்குகிறது.

நடிப்பில் விஜய் சேதுபதி மகாராஜாவாக வாழ்ந்திருக்கிறார். பைத்தியக்காரனை நடத்துவதைப் போல் ஒட்டு மொத்த ஸ்டேஷனும் அவரை நடத்த, அது குறித்து கொஞ்சமும் கலங்காமல், தான் கொண்ட லட்சியத்தில் திடமனதோடு இருந்து, ஒவ்வொரு முதுகையும் வருடும் அவரின் செயல்பாடுகளில் அவ்வளவு முதிர்ச்சி தெரிகிறது. அனுராக்கின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமியும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அனுராக்கிற்கு சற்று தமிழ் சினிமாவிற்குப் பழக்கப்பட்ட வில்லன் கதாபாத்திரம் என்பதால் அதில் பெரியதாக ஏதும் புதுமை தெரியவில்லை. பாய்ஸ் மணிகண்டனின் கதாபாத்திர வடிவமைப்பும், அக்கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளும் ஈர்க்கின்றன.

சிங்கம் புலி இதுவரை ஏற்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அட்டகாசப்படுத்தி இருக்கிறார்.

விஜய் சேதுபதி, அனுராக் இவர்களின் மகள்கள், லட்சுமி என்னும் பேர் கொண்ட அந்தப் பொருள், முதுகில் முளைத்த காது, ‘போலீஸ் நிலையத்தில் போய்த் தேடு’ என்கின்ற ஒற்றை வாக்கியம், விஜய் சேதுபதி சொல்கின்ற கதையின் விஷுவல் காட்சி என்று திரைக்கதை குறித்து சிலாகித்துக் கொள்ளும் திரைக்கதை நுணுக்கங்கள் படம் முழுக்க ஏராளம்.

அஜினிஷ் லோக்நாத்தின் இசையும், தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும் படத்திற்கு  பலம் சேர்த்திருக்கிறது என்றால், பிலோமின் ராஜின் படத்தொகுப்பும், அனல் அரசின் சண்டைக்காட்சிகளும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் மகாராஜா திரைப்படத்தை எழுதி இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார். ஒரு வகையில் பார்த்தால் ஏமாற்றுத்தனமான திரைக்கதையாகவும் மறுமுனையில் பார்த்தால் மிகுந்த புத்திசாலித்தனமான திரைக்கதையாகவும் தெரியும் மாறுபட்ட திரைக்கதை வடிவம் இது. திரைக்கதையின் பயண ஒட்டத்தை புரிந்து கொள்வதற்கான குறியீடுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருப்பது தனிச்சிறப்பு.

ஒட்டுமொத்தமாக பார்த்தால் மகாராஜா நிகரற்ற ராஜா.

– இன்பராஜா ராஜலிங்கம்