Shadow

மதிமாறன் விமர்சனம்

அப்பார்ட்மென்ட்களில் தொடர்ச்சியாக மர்மமான முறையில் கொல்லப்படும் பெண்கள், உருவம் குள்ளமாக இருந்தாலும் தன் பாசமான தாய் தந்தையரோடும், தனக்கு உறுதுணையாக இருக்கும் தன் அக்காள் மதியுடனும் சந்தோஷமாக வாழ்ந்தபடி தன் அப்பாவைப் போல் வருங்காலத்தில் ஒரு போஸ்ட்மேனாக வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வரும் நெடுமாறன். இந்த இரு வேறு புள்ளிகளும் சந்திக்கும் இடம் தான் “மதிமாறன்” திரைப்படத்தின் கதை.

நெடுமாறனாக வெங்கட் செங்குட்டுவன் நடித்திருக்கிறார். இவர் தான் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “அயலான்” படத்தில் அயலான் வேடத்தில் நடித்து இருக்கிறார். மதிமாறன் திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் வெங்கட் செங்குட்டுவன். தன்மான உணர்வு, சமூகத்தின் மீதான வெறுப்பு, அக்காள் மதி மீதான அன்பு, தந்தையின் மீதான மரியாதையும் அவர் தொழில் மீதான பிடித்தமும்,  சக தோழியுடனான காதலும் நட்பும் என எல்லாவிதமான உணர்வுகளையும் சிறப்பாக கடத்தியிருக்கிறார். ‘சப்பாணி என்று கூப்பிட்டால் சப்புன்னு அறைஞ்சிரு’ன்னு ஸ்ரீதேவி சொல்லுவது போல், அக்காவாக வரும் இவானா, ‘குள்ளான்னு கூப்ட்டா ஒரே குத்து குத்திரு’ என்று சொல்லி, தன்னைக் கேலி செய்யும் ஒவ்வொருவரையும் குத்தத் துவங்கி, அதன் உச்சமாக போலீஸ் அதிகாரியையும் குத்தி அவர் நிலைகுலையும் இடம் அப்ளாஸ்.  தன் தாய் தந்தையரைக் காப்பாற்ற முனையும் அந்த பரிதவிப்பும் பதற்றமும் நிறைந்த காட்சியில் தனக்கு யதார்த்தமான நடிப்பு மிகச் சிறப்பாக வரும் என்று நிரூபித்திருக்கிறார்.

அக்கா மதியாக இவானா, தன் தம்பியை எல்லோரும் கிண்டல் செய்வதை எண்ணிக் கவலையுற்று, அவர்களைத் திருப்பித் தாக்கச் சொல்லி தம்பிக்கு பக்கபலமாக நிற்கும் பாசமான அக்கா கதாபாத்திரம். தன் தம்பிக்கு மனதளவில் தாம் குள்ளமாக இருக்கிறோம் என்கின்ற எண்ணம் வந்துவிடக் கூடாது என்று கண்ணாடி பார்ப்பது, பவுடர் பூசிக் கொள்வது போன்ற சின்ன சின்ன விசயங்களைக் கூடப் பார்த்த் பார்த்து கவனமாகச் செய்யும் கதாபாத்திரம். பின்னர் ஒரு பிரச்சனையில் குடும்பத்தைப் பிரிந்து, தன் தம்பி தன்னோடு பேசாமல் இருப்பதைப் பார்த்து கவலையில் கண்ணீர் சிந்தும் கதாபாத்திரம்.  எல்லாவிதமான உணர்வுக் கலவைகளையும் கண்களில் தேக்கி நம் இதயத்திற்குக் கடத்தி நடிப்பில் சபாஷ் சொல்ல வைக்கிறார்.

நெடுமாறனின் அப்பா சுந்தரம் போஸ்ட்மேனாக வரும்  எம்.எஸ்.பாஸ்கர் வழக்கம் போல் இந்தப் படத்திலும் நடிப்பில் பின்னியிருக்கிறார்.  அவர் திருநெல்வேலி ஸ்லாங் பேசும் அழகே அழகு. ‘கம்யூனிஸ்டாக இருந்து கொண்டு சாமி கும்பிடுகிறாயே!’ என்று கேட்பவரிடம் அவர் வெளுத்து வாங்கும் காட்சியும், தன் பழைய நினைவைச் சொல்லிக் கண்கலங்கி அழும் காட்சியிலும் நம் மனதை கரைக்கிறார்.

நெடுமாறனின் கல்லூரி காலத் தோழி பிரபாவாக வரும்  ஆராத்யா போலீஸ் கதாபாத்திரத்தை விட கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார்.  வாட்ச்மேனாக வரும் பவா செல்லத்துரை, கமிஷ்னர் கட்டபொம்மனாக வரும் ஆடுகளம் நரேன்,  சுதர்ஷன் ஆக நடித்திருக்கும் சுதர்ஷன் ஜிவிந்த், சந்திரன் மாணிக்கம் ஆக வரும்  பிரவீன்குமார் என அனைவருமே சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்.

ஊனம் என்பது உடலில் இருக்கலாம் மனதில் தான் இருக்கக்கூடாது என்கின்ற கருத்தையும், மாற்றுத் திறனாளிகளை ஒரு மனிதர்களாகப் மதிப்பதற்குக் கூட அவர்கள் எக்ஸ்ட்ரா ஆர்டினரியாக ஜெயிக்க வேண்டியிருக்கிறது, ஆனால் அப்படி ஜெயித்துத் தான் நீங்கள் என்னை மனிதனாகப் பார்க்க வேண்டும் என்பதில்லை. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருங்கள்; நான் எப்படி இருக்கிறேனோ அப்படி இருந்து கொள்கிறேன் என்கின்ற கருத்து ஒட்டு மொத்த மாற்றுத்திறனாளி சமூகத்தினர் இந்தப் புற சமூகத்தின் மீது வைக்கும் அறிக்கையாகப் பிரதிபலிக்கிறது.

கார்த்திக் ராஜாவின் இசை ஒரு த்ரில்லருக்கும், ஒரு எமோஷ்னல் டிராமவிற்குமான சரிவிகித கலவையைத் திரைப்படத்திற்குக் கொடுத்திருக்கிறது.  பர்வேஷின் ஒளிப்பதிவு திருநெல்வேலி சிவந்திப்பட்டி கிராமத்தின் அழகையும், சென்னையின் வனப்பையும் ஒரு சேர திரையில் பிரதிபலிக்கிறது. சதீஷ் சூர்யாவின் எடிட்டிங்கில் செய்நேர்த்தி தெரிகிறது. ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்க, பாப்பின்ஸ் ஸ்டுடியோ மதிமாறனை வெளியிட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். பாடி ஷேமிங் என்கின்ற விசயத்தை எடுத்துக் கொண்டு கதையாகச் சொன்ன விதம் அழகு.  ஆனால் அந்த பாடி ஷேமிங் கான்செப்ட் மற்றும் நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் மர்ம கொலைகளுக்குமான பிணைப்பு மற்றும் கனெக்டிவிட்டி முழுமையானதாகவும் இல்லை; சரியானதாகவும் இல்லை. மேலும் நெடுமாறன் விசாரித்து முடித்து வைக்கும் வழக்குகளில் பெரிய புத்திசாலித்தனம் எதுவும் வெளிப்படாததும் ஒரு குறை. ஏனென்றால் விசாரணையின் அடிப்படையான கேள்விகளைக் கேட்டாலே அந்தக் குற்றவாளிகளை எட்டிவிடலாம் என்கின்ற பட்சத்தில் அது சார்ந்த கேள்விகளையே போலீஸ் கேட்காமல் இருந்திருப்பது படத்தின் முடிவில் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது.

மொத்தத்தில் மதிமாறன் ஒரு த்ரில்லருக்கான தீனியாக இல்லையென்றாலும் கூட, பாடி ஷேமிங், மாற்றுத்திறனாளிகளின் மனவலி ஆகிய சமூகம் சார்ந்த குறைபாடுகளைப் பேசியதன் மூலமும் யதார்த்த நடிப்பின் மூலமும் கவனம் ஈர்க்கிறது.

– இன்பராஜா ராஜலிங்கம்