இப்பொழுதெல்லாம் பேய்ப்படங்கள் நகைச்சுவையாக இருக்கிறது. நகைச்சுவைப் படங்கள் என்று சொல்லிக் கொள்ளப்படும் படங்களைப் பார்க்க திரையரங்கு வாசலை மிதிக்கவே பயமாக இருக்கிறது. சினிமா திரைப்படங்களின் வகைமைகளில் மிகக் கடினமானது நகைச்சுவைத் திரைப்படங்கள் தான். அதை சிலர் நினைப்பது போல் அவ்வளவு எளிதாக எழுதிவிடவும் முடியாது, எடுத்துவிடவும் முடியாது. ஆனால் சினிமாத்துறையின் வெளியில் இருந்து பார்க்கும் சிலருக்கு நகைச்சுவைப் படங்களை எளிதாக எடுத்துவிடலாம் என்கின்ற நம்பிக்கை இருக்கும் போலத் தெரிகிறது. எனவே வருவோர் போவோர் எல்லாம் நகைச்சுவைப் படம் எடுக்கிறோம் என்று சொல்லி, எதையோ எடுத்து வைக்கிறார்கள். அவர்களுக்குத் தயாரிப்பாளர்களும் கிடைக்கிறார்கள் என்பது அதைவிட பெரும்கொடுமை. அந்த வரிசையில் நாங்கள் நகைச்சுவைப் படம் எடுத்திருக்கிறோம் என்று எண்ணிக் கொண்டு பார்வையாளர்களைச் சோதிக்க வந்திருக்கும் அடுத்த படம் தான் “கும்பாரி”.
உயிருக்கு உயிரான நண்பர்கள். நண்பனுக்கு ஒரு காதல். காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கோமாளி அண்ணன், நண்பனின் காதல் கைகூட உதவும் நண்பன், கோமாளி அண்ணனுக்கு உதவி செய்ய இன்னும் சில கோமாளிகள் இறுதியில் சுபம். இதுவே கும்பாரி. இனி வரி வரியாக விமர்சிக்கலாம்.
உயிருக்கு உயிரான நண்பர்கள், இது காட்சிகளில் இல்லை, வசனங்களில் இவர்களாக சொல்லிக் கொள்கிறார்கள். நண்பனுக்கு ஒரு காதல், இது ஏன் வந்தது, எதற்கு வந்தது என்றே தெரியாத அளவிற்கு நாயகனைப் பார்த்ததும் நாயகிக்குத் தொற்றிக் கொள்ளும் மற்றொரு சினிமாக் காதல், காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கோமாளி அண்ணன், எப்படிப்பட்ட கோமாளி அண்ணன் என்றால் அண்ணன் தங்கச்சி தொடர்பான பாசப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு உருகி உருகிப் பாசத்தைக் கொட்டும் அண்ணன், மட்டுமின்றி ஓடிப் போனத் தங்கையைப் பற்றி விசாரிக்க அக்கா வீட்டுக்குச் சென்று அங்கு அவர் அம்மன் வேடமிட்டு அமர்ந்து மிரட்டியதும் பயந்து வெளியேறும் அளவிற்கு கோமாளி, நண்பனின் காதல் கைகூட உதவும் நண்பன், எப்படி உதவுகிறார் என்றால், தன் நண்பனின் கல்யாணத்தை ஜாம் ஜாம் என்று நடத்த வேண்டும் என்கின்ற எண்ணத்தில் பணம் சம்பாதிக்க படகை எடுத்துக் கொண்டு கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுவிடுகிறார். ‘அடேய்! கல்யாணத்தை ஜாம் ஜாம் என்று நடத்துவது பிரச்சனை இல்லடா! கல்யாணத்தை நடத்துவது தான் பிரச்சனை’ என்று நாம் காட்டுக் கத்து கத்துவது, கடலுக்குள் செல்லும் அவருக்கு காதில் விழவே இல்லை. கோமாளி அண்ணனுக்கு உதவி செய்ய இன்னும் சில கோமாளிகள், எப்படிப்பட்ட கோமாளிகள் என்றால், ஓடிப் போன தங்கையைத் தேடுவதற்கு மொக்கையான ஐடியாக்கள் கொடுத்துக் கொண்டு, கூடி அமர்ந்து சரக்கடித்து, அந்தப் போத்தல்களை தூக்கியடித்து உடைத்துக் கொண்டு, கண்டவரிடம் எல்லாம் அடி வாங்கிக் கொண்டு, வாயில் வந்ததையெல்லாம் நகைச்சுவை என்று பேசிக் கொண்டு திரியும் கோமாளிக் கூட்டம்.
ப்ராங்க் வீடியோ எடுத்து தன் யுடியூப் சேனலில் பதிவேற்றம் செய்ய நினைக்கும் நாயகிக்கு நாயகன் அறைந்ததும் காதல் வந்துவிடுகிறது. ஓகே அதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இப்பொழுதே நாயகனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தேவை என்ன வந்தது? அதுவும் இன்னும் 21 வயது கூடப் பூர்த்தியாகவில்லை. அண்ணன் வீட்டில் பாசமலர் படம் பார்த்துக் கொண்டு பவ்வியமாக அமர்ந்திருக்கிறார். இன்னும் தங்கைக்குக் கல்யாணம் செய்து வைப்பதற்கான பேச்சுவார்த்தையைக் கூட அவன் ஆரம்பிக்கவில்லை. இப்படி இருக்கையில் கதையின் மையமான அந்தக் கல்யாணத்தின் தேவை என்ன என்பதை திரைக்கதையில் எந்த இடத்திலும் கூறவே இல்லை.
ஓடிப் போன தங்கையைக் கண்டுபிடித்து அண்ணன் என்ன செய்ய நினைக்கிறார்? தங்கையை மட்டும் கொல்ல நினைக்கிறாரா, இருவரையும் கொல்ல நினைக்கிறாரா, வீட்டில் பூட்டி வைக்க நினைக்கிறாரா, வேறொரு இடத்தில் அவசரமாக திருமணம் செய்து வைக்க நினைக்கிறாரா? இதுகுறித்த எந்த மேலதீக தகவலும் படத்தில் இடம்பெறவில்லை. வெறுமனே அண்ணன் தேடிக் கொண்டிருக்கிறார் அவ்வளவே. சரி தேடும் அண்ணன் ஒரு கட்டத்தில் அவர்களை கண்டுபிடிக்கவும் செய்கிறார். கண்டுபிடிக்கும் போதும் தங்கையை தன்னோடு அழைத்துப் போகவோ, அவர்களை தாக்கவோ முற்படுவதில்லை. வெறுமனே மிரட்டுகிறார். கல்யாணத்தை நடத்தவிடமாட்டேன் என்கிறார். நாயகனின் நண்பன் கல்யாணத்தை நடத்திக்காட்டுவேன் என்கிறார். இருவரும் சபதம் போட்டுக் கொண்டு இருவேறு பாதைகளில் திரும்பிச் செல்கின்றனர். நாயகி நாயகன் மற்றும் அவனின் நண்பனோடு செல்ல, நாம் அந்தக் கோமாளி அண்ணனைப் பார்த்து ”இதைச் சொல்லத்தான் ஒன் தங்கச்சியை தேடுனீயா…?” என்று பரிதாபமாக கேட்கிறோம்.
இப்படி ஒரு கதையை எப்படித் துவங்குவது என்றே தெரியாமல் தொடங்கிவிட்ட இயக்குநரும் அவரின் குழுவினரும் படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கிப் போய், இலங்கை ராணுவத்தின் துணையுடன் கதையை முடித்து வைக்கிறார்கள்.
படத்தில் விஜய் விஷ்வா, நலீப் கே, மஹானா சஞ்சீவி, ஜான் விஜய், சரவணன், ஜாங்கிரி மதுமிதா, சாம்ஸ், செந்திகுமாரி, காதல் சுகுமார் இவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். சார்பட்டா பரம்பரையில் எப்பேர்ப்பட்ட நடிப்பை கொடுத்தவர் ஜான் விஜய். அவரைக் கூட்டி வந்து கோமாளி வேடம் கொடுத்திருக்கிறார்கள். அவர் அதை வெறுப்புடன் செய்திருப்பது தெரிகிறது. பருத்திவீரன் சரவணனை ‘பார் சரவணன்’ ஆக்கி குடி கூத்துக்கு மட்டும் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஜாங்கிரி மதுமிதா வழக்கம் போல் ஓவர் ஆக்டிங் செய்து நம்மை பயமுறுத்துகிறார். சாம்ஸ் காமெடி செய்கிறேன் என்று சலிப்பை ஏற்படுத்துகிறார்.
பிரசாத் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தில் ஆறுதலான விசயம் இந்த ஒளிப்பதிவு தான். கன்னியாகுமரியின் கடலோர அழகையும் கேரளத்தின் எல்லையோர அழகையும் கண்டு ரசிக்க முடிகிறது. அறிமுக இயக்குநர் கெவின் ஜோசப் இயக்கி இருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளில் நண்பன் என்பதற்கு கும்பார் என்று ஒரு பெயர் உண்டாம். அதை மட்டுமே வைத்து படம் செய்திருக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்தில் குமரி மாவட்ட மொழியாடல் மற்றும் வாழ்வியலைக் கொண்டு ஒரு பாடல் வருகிறது. அது ரசனையுடன் இருக்கிறது. படமும் அது போல் இருக்கு என்று நாம் நம்பி ஏமாறுகிறோம்.
மொத்தத்தில் கும்பாரி கொடுமைக்கார நண்பனாக இருக்கிறான்.