Shadow

மெஹந்தி சர்க்கஸ் விமர்சனம்

Mehandi-circus-movie-review

இளையராஜாவின் அதி தீவிர விசிறியான ஜீவாவிற்கு மெஹந்தியைப் பார்த்ததும் காதல் வந்துவிடுகிறது. அந்தக் காதல் அவர்களுக்கிடையே நிகழ்த்தும் சர்க்கஸ் விளையாட்டுதான் படத்தின் கதை.

ஒளிப்பதிவாளர் செல்வக்குமார் பொயட்டிக் டோனைப் படத்திற்கு செட் செய்துள்ளார். கதை பூம்பாறையில் நடக்கிறது. கூடவே பின்னணியில் இளையராஜாவின் இசை. காதலர்கள் ஓடிப் போகக் காரணமான இளையராஜா A1 அக்யூஸ்ட் என்றும், ராஜகீதம் மியூசிக்கல்ஸ் வைத்திருக்கும் ஜீவா A2 என்றும் வசனம் வைத்து, இளையராஜாவின் இசையையும் ஒரு கதாபாத்திரமாகக் கொண்டு வர முயன்றுள்ளார் இயக்குநர் சரவண ராஜேந்திரன். ஆனால், இளையராஜாவின் இசை கதையோடு இயைந்து ஒரு மாயத்தை நிகழ்த்தத் தவறி விடுகிறது.

அரசியல் பேசும் ஒத்தவெடி கதாபாத்திரத்தில் ஆர்.ஜே.விக்னேஷ், நாயகனின் நண்பராக நடித்துள்ளார். ஆனால் நகைச்சுவைக்கோ, அரசியல் நையாண்டிக்கோ பெரிதும் அவர் உதவவில்லை. படத்தின் குறைகளில் ஒன்று, எந்தப் பாத்திரமும் மனதில் நிற்கும்படி உருவாக்கப்படவில்லை. நாயகனின் தந்தை ராஜாங்கமாக நடித்திருக்கும் மாரிமுத்துவின் பாத்திரம் கூடத் தெளிவில்லாமல் உள்ளது. அவர் மூலமாகச் சொல்லப்பட வந்த சாதிய பாகுபாடு ஒழுங்காகச் சொல்லப்படவில்லை. பாதிரியார் அமலதாஸாக வரும் வேல ராமமூர்த்தியின் பாத்திரம், காதலர்கள் இடையே சாதி உருவாக்கும் பிளவினை நீர்த்துப் போகச் செய்து விடும்படி அமைக்கப்பட்டுள்ளது.

மெஹந்தியின் அப்பாவாக நடித்திருக்கும் சன்னி சார்லஸ், அந்தக் கதாபாத்திரத்திற்கு மிகக் கச்சிதமான தேர்வு. பிழைப்பிற்காக வட மாநிலத்தில் இருந்து தமிழக மலைக் கிராமங்களில் சர்க்கஸ் அமைக்கும் அவரது இறுக்கமான முகம் ஆயிரம் கதைகள் சொல்கின்றன. அந்தச் சர்க்கஸில் கத்தி வீசும் ஜாதவாக வரும் அன்கூர் விகாஸும் தன் நடிப்பால் ஈர்க்கிறார். ஜீவாவிடம், ஜாதவின் மகள் நிஷா பேசும் வசனம் ரசிக்கும்படி இருந்தது. நிஷாவாக நடித்துள்ள பூஜாவும் தன் பங்கை நிறைவாகச் செய்துள்ளார்.

படத்தின் கதையில் ஒரு தீவிரமான காதல் உண்டு. ஆனால் அதை அழுத்தமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தத் தவறியுள்ளது திரைக்கதை. நாயகன் ஓரிடத்தில், அவர் முன் வைக்கப்படும் சவாலை கைவிட்டு தன் காதலைத் துறக்கவும் செய்கிறான். ஆனால் க்ளைமேக்ஸில் மெஹந்தியிடம் வெளிப்படும் தீவிரம் ரசிக்க வைக்கிறது. ஆனால் அது உணர்வெழுச்சியைத் தராமல், ஒரு சுவாரசியமான திருப்பமாக நீர்த்துப் போவதுதான் திரைக்கதையின் பலவீனம்.

மெஹந்தியைத் திருமணம் செய்யும் வாய்ப்பை இழந்த ஜீவா எத்தகைய மனநிலையில் இருந்தான், மகனின் நிலை கண்டு தன் சாதியப் பெருமிதத்தை ராஜாங்கம் கைவிட்டாரா என்பதிலெல்லாம் படம் அக்கறை கொள்ளவில்லை. ஜீவாவிற்கு வயதான தோற்றம் தந்ததோடு மட்டும் திருப்திப்படாமல், கதாபாத்திரங்களின் மனதைக் கொஞ்சம் திரைக்கதை பிரதிபலித்திருக்கலாம். இயக்குநர் மற்றும் கதாசிரியரின் இளையராஜா பாசத்தைப் படம் பிரதிபலித்த அளவு, படத்தினுடைய கதாபாத்திரங்களின் அகம் காட்டப்படவில்லை.

ஜீவாவாக நடித்திருக்கும் மாதம்பட்டி ரங்கராஜும், மெஹந்தியாக நடித்திருக்கும் ஸ்வேதா திரிபாதியும் கலக்கியுள்ளனர். குறிப்பாக, ஸ்வேதா திரிபாதியின் நடிப்பு படத்தின் மிகப் பெரிய பலம். ஆனால் அனைத்தும் மேலோட்டமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் முடிவு அழகானதொரு சுவாரசியம். மனதோடு ஒட்டிக் கொண்டு, பெரும் தாக்கத்தைத் தந்திருக்க வேண்டிய எமோஷனற்ற காதல் காவியமாய் விஷுவல் அழகோடு நின்று விடுகிறது.