
ஒரு விளையாட்டு – நட்பை உடைக்கிறது; காதலை முறிக்கிறது; நம்பிக்கையைக் காலி செய்கிறது; உயிரையும் எடுத்துவிடுகிறது. தெரியாத்தனமாகச் சிக்கிக் கொண்டால் அவ்விளையாட்டிலிருந்து மீள வழியே இல்லை.
மெக்சிகோவிற்குச் சுற்றுலா சென்ற ஒலிவியாவும் அவரது நண்பர்களும், அங்குச் சந்திக்கும் நபரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு விளையாட்டைத் தொடங்குகிறார்கள். அதன் பெயர் “ட்ரூத் ஆர் டேர்”. விளையாடுபவரிடம் சுற்றியுள்ளவர்கள், ட்ரூத் ஆர் டேர் எனக் கேட்பார்கள். ‘ட்ரூத்’தைத் தேர்ந்தெடுத்தால், நண்பர்களிடம் உண்மையைச் சொல்லவேண்டும். ‘டேர்’ எனத் தேர்ந்தெடுத்தால், நண்பர்கள் சொல்லும் டாஸ்க்கைச் செய்யவேண்டும். உதாரணம், ‘மேலாடையைக் கழட்டவும்’ எனச் சொல்லப்பட்டால், மேலாடைகளைக் கழட்டவேண்டும். இப்படிக் குதூகலமாய்த் தொடங்கும் ஒரு விளையாட்டு, அவர்கள் மெக்சிகோவை விட்டு வந்த பின்பும் அவர்களைத் தொடங்குகிறது.
அனைத்தையும் கட்டுபடுத்தும் ஏதோ ஓர் அமானுஷ்யச் சக்தி, தொடர்ந்து அவர்களை விளையாட வைக்கிறது. விளையாட மறுத்தாலோ, ‘ட்ரூத்’ எனத் தேர்ந்தெடுத்து பொய் சொன்னாலோ, அல்லது ‘டேர்’ எனத் தேர்ந்தெடுத்துவிட்டு அந்த டாஸ்கைச் செய்யாமல் விட்டாலோ மரணம் நிச்சயம். விபரீதம் பூதாகரமாய்ச் சூழ்ந்து விட, ஒலிவியாவும் அவரது நண்பர்களும் படும்பாடுதான் படத்தின் கதை. தங்களைப் பீடித்துக் கொண்ட அமானுஷயத்திலிருந்து அவர்கள் மீண்டார்களா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
இரண்டு பேரை இழந்த பின்பே , ஒலிவியாவிற்கும் அவளது நண்பர்களுக்கும் தாங்கள் எத்தகைய ஆபத்தில் சிக்கிக் கொண்டோம் எனப் புரிகிறது. அவ்விளையாட்டை இயக்கும் அமானுஷ்ய சக்தி எவ்வளவு சாமர்த்தியம் வாய்ந்தது என்றால், மிக மிக நெருங்கிய தோழிகளான ஒலிவியாவிற்கும் மார்கிக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தி விடுகிறது.
மைக்கேல் ரீயஸின் கதையும் திரைக்கதையும் படத்தின் அடித்தளத்தை மிக அழகாக அமைக்க உதவியுள்ளது. படத்தின் முதற்பாதி அதனால் சட்டென முடிவது போலுள்ளது. ஆனால் முடிவை நோக்கிச் செல்லுகையில், முதற்பாதியில் ஏற்படும் பதைபதைப்பு குறைவதே படத்தின் குறை.
ஒலிவியாவாக லூசி ஹேலையும், மார்கியாக வயலட் பீனையும் தேர்ந்தெடுத்து, குறைந்த பட்ஜெட் படத்திற்கு அழுத்தமான நியாயத்தைச் செய்துள்ளார் இயக்குநர் ஜெஃப் வெட்லோ. படத்தின் நாயகி ஒலிவியாவாக இருந்தாலும், மார்கி கதாபாத்திரத்திற்கு அழகானதொரு நிறம் கொடுத்து படத்தைச் சுவாரசியப்படுத்தி உள்ளனர். நட்புக்குள் ஏற்படும் ஊடலும் பிரிவும், அதை அவர்கள் எதிர்கொள்ளும் பாங்கும் தான் படத்தின் அச்சாணி.