மேதகு – 2 விமர்சனம்
மேதகு என்பது தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படமாகும். மேதகு எனும் சங்கச்சொல்லுக்கு, மேன்மையான, மேன்மை பொருந்திய எனப் பொருள் கொள்ளலாம். வேலுப்பிள்ளை பிரபாகரன், மேன்மை பொருந்திய ஒப்பற்ற தலைவர் என்பதைச் சுட்டவே மேதகு எனத் தலைப்பிட்டிருந்தார் இயக்குநர் தி. கிட்டு. அப்படத்தின் தொடர்ச்சியாக, மேதகு 2 படத்தை இரா.கோ.யோகேந்திரன் இயக்கியுள்ளார்.
முதற்பாகமான மேதகு, 2021 ஆம் ஆண்டு ஜூன் 25 இல், ஓடிடி தளமான BS Value இல் வெளியானது. இலங்கையில், தமிழர்களுகளுக்கான விடுதலைப் போராட்டத்திற்கான தேவை ஏன் எழுந்தது பற்றியும், சிங்களப் பேரினவாதம், பிரபாகரன் எனும் சிறுவனின் மனதை எப்படிப் பாதித்தது பற்றியும், எந்தப் புள்ளியில் அவர் பேரினவாதத்தை எதிர்க்க முடிவெடுக்கிறார் என்பது பற்றியும், அந்தப் படம் அடித்தளம் இட்டிருந்தது. ...