Shadow

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் விமர்சனம்

முப்பது வயதிற்குள் தொழிலில் வெற்றியாளாரக மிளிர வேண்டுமென மிகவும் ஆர்க்னைஸ்டாக வாழ்கிறார் வக்கீல் முகுந்தன் உன்னி. வயது 36 ஆகிவிடுகிறது. தனக்கான வாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் இருந்த வேலையும் போய் விட, மருத்துவமனையில் சுலபமாகப் பெரும்பணம் சம்பாதிக்கும் வக்கீல் ஒருவரைச் சந்திக்க நேரிடுகிறது. அது தான் நம்ம வழியும் என முகுந்தன் உன்னி எடுக்கும் விஸ்வரூபம்தான் படத்தின் கதை.

அறமாவாது, கர்மாவாவது, தொழிலில் கொழிக்க எந்த எல்லைக்கும் செல்லும் மனிதனைப் பற்றிய கதை. Wow, he is brutally cold and bloody calculative with no empathy. இப்படி, எல்லாச் சூழலிலும் முகுந்தனின் மைண்ட்-வாய்ஸ் எதையாவது, யாரையாவது எடை போட்டுக் கொண்டே உள்ளது. அப்படியான அவரது மைண்ட்-வாய்ஸ், படத்தின் முழு நீள டார்க் காமெடிக்கு உத்திரவாதம் அளிக்கிறது. தமிழகத்தில் 40 திரையரங்குகளில் வெளியிட விருப்பப்பட்டும் 14 திரையரங்குகள் தான் கிடைத்துள்ளன.

வக்கீல் வேணுவாக சூரஜ் வெஞ்சுரமூடு நடித்துள்ளார். ஏற்கும் எந்தக் கதாபாத்திரத்தையும், பார்வையாளர்கள் ரசிக்கும்படி நடிப்பதில் வல்லவர் சூரஜ். இப்படத்திலும் அப்படியே! முகுந்தன் உன்னியாக வினீத் ஸ்ரீனிவாசன், படம் நெடுகே கலக்கிக் கொண்டிருக்க, அதையும் மீறி சூரஜ் தனித்துத் தெரிகிறார். மருத்துவமனைக்கு விபத்தில் அடிப்பட்டு வருபவர்களிடம் கையெழுத்து வாங்கி, இன்ஷ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு நடத்திச் சம்பாதிப்பவர் சூரஜ். வழக்கில் வெல்வதற்குச் சாதகமாக மருத்துவரிடம் சான்றிதழ் பெறுதல், தேவைப்பட்டால் போலியாக விபத்து நடந்தது போல் ஒரு செட்டப்பும், சாட்சிகளும் உருவாக்குதல், காவல்துறையினரின் உதவியோடு விபத்தின் ரிப்போர்ட்டைக் கட்டமைத்தல் என ஒரு பக்கா பிசினஸ் பிளானை முகுந்தனுக்குக் கவனக்குறைவாகத் தெரியப்படுத்தி விடுகிறார். முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் தொடங்கப்படுகிறது.

தன் வீட்டிற்குள் புகும் நாக பாம்பிற்கு முட்டை அளித்து வளர்க்கிறார் முகுந்தன் உன்னி. டிரைவருக்கு மட்டுமே Air bag உடைய காரினை வாங்குகிறார். அவரது எல்லா நடவடிக்கையும் திட்டமிடப்பட்டது. அவற்றை சரியான தருணத்தில் அறுவடை செய்யும் சாதுரியமான மிடுக்கன். இப்படியாக, வினீத் ஸ்ரீனிவாசன் புகழை என்றென்றைக்கும் பறைசாற்றும் அற்புதமான பாத்திரத்தில் அசத்தியுள்ளார். சூரஜ் வெஞ்சரமூடு இறந்த பிறகும், அவரை hallucinate (மாயத்தோற்றத்தைக் காணுதல்) செய்து அடிக்கும் ஒன்லைனர்ஸ் அசத்தல் ரகம்.

விமல் கோபாலகிருஷ்ணனுடன் இணைந்து இயக்குநர் அபிநவ் சுந்தர் நாயக், மிகச் சுவாரசியமாகத் திரைக்கதையையும் வசனத்தையும் எழுதியுள்ளார். படத்தின் தொடக்கத்தில் வரும் டைட்டில் கார்டு முதலே காமெடி அதகளம் தொடங்கி விடுகிறது. இடைவேளைக்குப் பிறகு, படம் தொடங்கும் பொழுது வரும் அனிமேஷனும், வாய்ஸ் ஓவரும் கூட அடிபொலி.