Shadow

மிருகா விமர்சனம்

Miruga-review

மிருகமாகிவிட்ட ஒரு மனிதனைப் பற்றிய படம். பணக்கார விதவைகளைக் குறி வைத்து, அவர்களை அணுகி நற்பெயர் எடுத்து, பணத்திற்காக அவர்களைக் கல்யாணம் செய்து, அவர்களைக் கொன்றுவிடும் சைக்கோ தான் படத்தின் எதிர்நாயகன். அவனிடமிருந்து நாயகி தப்பினாரா என்பதுதான் படத்தின் கதை.

கதை ஊட்டியில் நடக்கிறது. எஸ்டேட்டில், man-eater ஆக மாறிவிடும் புலி ஒன்று முக்கிய ரோலில் வருகிறது. புலி வரும் காட்சிகளுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கணினி வரையியல் (CG) காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன. க்ளைமேக்ஸின் த்ரில்லிங் அனுபவத்திற்குப் புலி பொறுப்பெடுத்துக் கொள்கிறது.

படத்தின் எதிர்நாயகனாக ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். படம் இவரது வில்லத்தனத்தைச் சுற்றியே நகர்கிறது. ஆனால், ஸ்ரீகாந்தின் மிதமான நடிப்பு, கதாபாத்திரத்தின் சீரியஸ்தன்மையை நீர்த்துப் போகச் செய்கிறது. பார்வையாளர்களின் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டிய கதாபாத்திரத்திலும், பாந்தமாகத் தோன்றி, ஹீரோ இமேஜைப் பாதுகாத்துக் கொள்ள முயல்கிறார். காவல்துறை அதிகாரியாக தேவ் கில் வேகமாக வந்து அப்படியே மறைகிறார்.

இப்படத்தை, ஹீரோயின் ஓரியன்டட் படமென்றே சொல்லலாம். புலி Vs ராய் லட்சுமி சண்டை தான் க்ளைமேக்ஸ். தன் மகளைக் காப்பாற்ற, வீரத்தாயாக ராய் லட்சுமி புரியும் சாகசம் தான் படத்தின் ஹைலைட். ஒரு பக்கம், நம்பியவனால் ஏமாற்றப்பட்ட சோகம், இன்னொரு பக்கம் ரத்த வெறியுடன் அலையும் புலி. அதிலிரிந்து எப்படித் தன்னையும், தன் மகளையும் தங்கையையும் காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் முடிவு.

படத்தில் ராய் லட்சுமி இரண்டு தங்கைகள் உள்ளனர். ஒருவர், போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி தன் அக்காவைக் கொல்லத் துடிக்கும் வைஷ்ணவி சந்திரன் மேனன், மற்றொருவர், அக்கா மகளைப் புலியிடமிருந்து காக்கப் போராடும் நாய்ரா ஷா. வலுவான குணசித்தரப் பாத்திரத்தில் வந்தாலும், மூவரையும் கவர்ச்சிக்காகவும் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். கதை, திரைக்கதை எழுதி, ஒளிப்பதிவு செய்துள்ள M.V. பன்னீர் செல்வம், ராய் லட்சுமியின் க்ளோஸ்-ஷாட்ஸ்களை இன்னும் ரசனையாக கையாண்டிருக்கலாம். இவர், 2002 இல் வெளிவந்த ரோஜாக் கூட்டம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கதை ஓட்டத்தில் ஓர் அவசரத்தன்மை தெரிகிறது. மனித உணர்வுகளோடு கண்ணாமூச்சி ஆடாமல், ஆடு – புலி ஆட்ட விறுவிறுப்பு மட்டும் போதுமென்ற இயக்குனர் J. பார்த்திபனின், திரைக்கதையின் ஓட்டத்திற்குக் காரணமாக இருக்கலாம்.

மையக் கதையில், புலி வரும் அத்தியாயம் திணிக்கப்பட்டது போல் தொடக்கத்தில் இருந்தாலும், முடிவில் படத்திற்கொரு அடையாளத்தைத் தந்திருப்பதே புலிதான்.