Search

2.0 விமர்சனம்

2.0 movie review

ஒரு படத்திற்கான பட்ஜெட் 500 கோடி என்பது வருங்காலங்களில் சகஜமாகக்கூடும். ஆனால், தற்பொழுது, இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக அந்த மைல்கல்லைத் தமிழ் சினிமா தொட்டுள்ளது என்பது மிகப் பெருமைக்குரிய அசாதாரணமான நிகழ்வு. சூப்பர் ஸ்டாராகிய ரஜினி மட்டுமே இதற்கு முழுக்க முழுக்கக் காரணம். அசாதாரணத்தைச் சாத்தியமாக்கிய லைக்கா ப்ரொடெக்‌ஷன்ஸ்க்கே எல்லாப் புகழும்!

படம் திகட்டத் திகட்ட விஷுவல் விருந்தை அளிக்கிறது. திரையை விட்டுச் சீறி வரும் ரஜினியின் தோட்டாகளைக் காணக் கண்டிப்பாகப் படத்தை 3டி-இல் பார்க்கவேண்டும். டைட்டில் கார்டிலேயே, பார்வையாளர்களை 3டி தொழில்நுட்பம் பிரம்மிக்க வைத்துவிடுகிறது.

பெரிய பூர்வாங்க பில்டப்கள் இல்லாமல், கதைக்குள் உடனடியாகச் சென்று விடுகிறது படம். சென்னையைச் சுற்றி 200 கி.மீ.இல் உள்ள செல்ஃபோன்கள் எல்லாம் பறந்து மாயமாகின்றன. அது ஏன், எப்படி, யாரால் நிகழ்கிறது என்பதும், அதை வசீகரனும் அவரது எந்திரன்களும் எப்படிக் தடுக்கின்றனர் என்பதுமே படத்தின் கதை.

முதல் பாதியில், சிட்டி ரோபோவாக வரும் ரஜினியிடம் வழக்கமான எனர்ஜி மிஸ்ஸிங். ஆனால் திரைக்கதை அக்குறையைப் பின்னுக்குத் தள்ளி விடுகிறது. இரண்டாம் பாதியில் 2.0-வாக வரும் ரஜினி, முழு எனர்ஜியோடு அதகளம் புரிகிறார். ஆனால், அவ்வனுபவத்தை இரட்டிப்பாக்கத் தவறி விடுகிறது திரைக்கதை. மேலும், 2.0 ரோபோவின் வசனங்கள் கதைக்கு வலு சேர்க்காமல் ரஜினியின் ஸ்டைலுக்குக் கட்டியம் கூறுவதாக அமைகிறது. படத்தின் இரண்டாம் பாதி சண்டைக் காட்சிகள், வீடியோ கேமில் வரும் ஷூட்டிங் விளையாட்டு போலுள்ளது.

கருட புராணத்துப்படி, தவறுகளுக்குக் கோரமாகத் தண்டனை அளிக்கும் ஆசையில் இருந்து இயக்குநர் ஷங்கரால் வெளிவரவே முடியாது போலும். திடீரென வசீகரனுக்குள் வில்லன் புகுந்து கொள்கிறார். ‘அதெப்படி? இது சயின்ஸ் ஃபிக்‌ஷன் படமாச்சே! ஒருவேளை, ஸ்ஃபூப் மூவியாக இருக்குமோ?’ என்றெல்லாம் ஒரு கணம் யோசனை வருவதைத் தவிர்க்க முடியவில்லை. லாஜிக் இல்லாத இந்த விஷுவல் மேஜிக்கைக் குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். சில சீரியசான காட்சிகளில் நகைச்சுவை பட்டையைக் கிளப்புகிறது.  எனினும், படம் தரும் அந்த அட்டகாசமான 3டி விஷ்வல்ஸும், 4டி செளண்டும், நிச்சயம் தவற விடக்கூடாத ஒரு கொண்டாட்ட அனுபவம்.

பக்‌ஷிராஜனாக அக்‌ஷய் குமார் மிரட்டுகிறார். அவருக்கு ஜெயபிரகாஷ் டப்பிங் குரல் கொடுத்துள்ளார். ‘புள்ளினங்காள்’ மீதான அக்‌ஷய் குமாரின் காதலும் கரிசணமும் தான் படத்தைச் செலுத்தும் ஆதார சுருதி. பிரம்மாண்டத்தில் அடித்துக் கொண்டு போகாமல், மிகவும் அழுத்தமாக நிற்கிறது அவரின் ஃப்ளாஷ்-பேக். படத்தின் மிக அற்புதமான அத்தியாயம் இது மட்டுமே! பறவை இனங்களைக் காக்கத் தவறுவதை, ‘பசிக்கு நம்ம கையையே வெட்டிச் சாப்பிடுவோமா?’ என்ற உவமான வசனம் மூலம் கேட்கிறார் அக்‌ஷய். எழுத்தாளர் ஜெயமோகனின் வசனம் இந்த அத்தியாயத்தில் மட்டும் பளீச்சிடுகிறது. அக்‌ஷயின் அந்தக் கரிசணத்தைக் கொண்டே ரஜினி வில்லனை மடக்கினாலும், அது எப்படி அவருக்குச் சாத்தியமானது எனத் தெரியவில்லை. க்ளைமேக்ஸில் கிடைக்கும் ஆச்சரியங்களில் ஒன்றாக அதுவும் போய் விடுகிறது.

Wall.E என்றொரு அனிமேஷன் படம். 2008 இல் வந்த அந்த பிக்சார் படத்தினை, ஒரு ரோபோவின் காதல் பயணம் என்று கூடச் சொல்லலாம். சின்னச் சின்ன அசைவுகள், சத்தங்கள் கொண்டு கூட அந்த இரும்பிற்கு இதயம் உண்டெனப் பார்வையாளர்களை நம்ப வைப்பார்கள். இதற்கே அவை humanoid பகை ரோபோகள் கூட இல்லை. ஆனால், 10 ஆண்டுகள் கழித்து, எமோஷன்கள் உடைய மனித ரோபோகளிடம் இருந்து அத்தகைய உணர்ச்சிபூர்வமான ஒரு காதலைக் கொண்டு வர முடியாதது மிகப் பெரும் குறை. அல்லது, ரோபோகளுக்கு இடையில் காதலென சின்னப்புள்ளத்தனமான விஷயத்திற்குப் போயிருக்கக் கூடாது. அப்படிப் போகும் பட்சத்தில், அதற்கான தருணங்களை ‘செட்’ செய்யவேண்டும். காதல் காட்சிகளுக்கு மட்டுமல்ல, படத்தில் அப்படியொரு தருணம் எங்குமே எழுவதில்லை. ஆனால், ‘வந்துட்டார்யா நம்ம தலைவர்’ எனும் ஹீரோயிக் மொமன்ட் இல்லையே என்ற குறை, படம் முடியும் பொழுது, க்ளைமேக்ஸ் காட்சிகளில் தீர்கிறது. ஷங்கர் வைத்திருக்கும் அந்தக் குட்டி சர்ப்ரைஸ்க்காக இரண்டாம் பாதியைக் கண்டிப்பாகப் பொறுத்துக் கொள்ளலாம். படம் முடிந்து, கடைசியில் பெயர் போடும் பொழுது வரும் ‘இந்திரலோகத்துச் சுந்தரியே’ பாடல் முடிந்ததும், மார்வெல் பாணியில், ஒரு சின்ன போஸ்ட் கிரெடிட் சீனும் வருகிறது. தவறவிடாதீர்கள்!

2.0 – இது ஷங்கரின் கனவு பேட்ட! மீண்டும் ஷங்கராலேயே கூட இப்படியொரு கனவினைத் திரையேற்றிடச் சாத்தியப்படுமா என்பது ஐயமே! இந்தக் காஸ்ட்லி கனவை நல்ல திரையரங்கில் முப்பரிமாணத்தில் கண்டால் மட்டுமே முழுமையாக ரசிக்க இயலும்.