Shadow

Mr. லோக்கல் விமர்சனம்

Mr.-Local-movie-revew

நயன்தாரா, சிவகார்த்திகேயன், யோகி பாபு, ரோபோ ஷங்கர், சதீஷ், தம்பி ராமையா, ராதிகா சரத்குமார் என முன்னணி நடிகர்கள் பட்டாளத்தை தன் படத்துக்குள் கொண்டு வந்துவிட்டார் இயக்குநர் ராஜேஷ். ஆனால் படத்திற்கு அத்தியாவசியமான கதையும் திரைக்கதையும் மட்டும், சென்னையின் நீர்ப்பஞ்சத்திற்கு நிகராய் வறண்டு போயுள்ளன.

ராஜேஷ் படத்தில் கதையா முக்கியம்? நிச்சயமாக இல்லை தான். ஜாலியான வசனங்கள், தட்டுத்தடுமாறி நாயகியின் கடைக்கண் பார்வையைப் பெறத் துடிக்கும் நாயகனின் அலம்பல்கள், சின்னதாய் ஒரு ஃபேமிலி சென்ட்டிமென்ட் என தனது முதல் படத்தில் இருந்தே ஒரே ஃபார்மட்டை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டுள்ளார். முதல் மூன்று படங்களில், அதைச் சுவாரசியமாகக் கொடுத்தவர், அதன் பின் ரொம்பவே தடுமாறத் தொடங்கிவிட்டார். அதன் உச்சமாக அமைந்துள்ளது மிஸ்டர் லோக்கல் திரைப்படம்.

விமானத்தில் ஜன்னலோர சீட் தராத ஃப்ரெஞ்சு பெண்மணியைப் பார்த்து, I will keep and do எனச் சொல்வார் சிவகார்த்திகேயன். அதாவது வைத்துச் செய்யப் போகிறாராம். ஃப்ரெஞ்சுப் பெண்மணியைச் செய்தாரா இல்லையா எனப் படத்தில் காட்டப்படவில்லை. ஆனால், பார்வையாளர்களை வைத்துச் செய்துள்ளார் ராஜேஷ். ‘You are terminated’ என நயன்தாரா சொல்வதற்கு, ‘நான் டெர்மினேட்டரா?’ என சூர மொக்கை போடுகிறார் சதீஷ். ராதிகாவையும் கூட ஊர்வசியின் மேனரிசத்தில் நடிக்க வைத்துள்ளனர். ஒருவேளை கதாபாத்திரங்களை ஒழுங்காக வடிவமைத்திருந்தால், இதெல்லாம் ஓரளவேனும் டைம் பாஸ் போல் சகித்துக் கொண்டாவது இருக்கமுடியும். ஆனால், இரண்டரை மணி நேரமும் ஓபி அடிக்க ஒரு முரட்டுத்தனமான நம்பிக்கை வேண்டும்.

‘சிவா கேட்டுக்கொண்டதற்கிணங்க, டாஸ்மாக் சீன் இல்லாமல், பெண்களைத் திட்டும் பாடல் இல்லாமல், குடிச்சுட்டுப் பாடும் பாடல் இல்லாமல் இந்த ஸ்க்ரிப்ட்டை வொர்க்-அவுட் பண்ணியிருக்கேன்’ என்றார் இயக்குநர் ராஜேஷ். ஆனால், பெண்களைச் சித்தரித்திருக்கும் விதத்தில் ஒரு படி மேலே போய்விட்டார். ஒரு விபத்தினை ஏற்படுத்திவிட்டு அதற்காக வருத்தப்படாத கல் நெஞ்சுக்காரியாக நயனையும், அஷ்வினியாக இருந்து அஷ்வினாக மாறும் திருநம்பியைக் கோமாளியாகவும் காட்டுகிறார். கதாபாத்திரங்களுக்குள் ஈகோ கிளாஷ்களை இயல்பாகக் கொண்டு வராமல், நேரடியாக நாயகியைத் திமிர் பிடித்தவராகவும், நாயகனை லோக்கல் ஆளாகவும் காட்டுகிறார். கதாபாத்திரங்கள், வசனங்கள் எல்லாம் செயற்கைத்தனத்தின் உச்சம் என்பதால், சிவா எவ்வளவு முயன்றும் சோபிக்க முடியாமல் போய்விடுகிறது. நயனையோ முறைப்பதற்கு மட்டுமே நேர்ந்து விட்டுள்ளனர். சகலமும் அந்நியமாய்ப் பல்லிளிக்க, ஆங்காங்கே வசனங்களில் வரும் அரசியல் பகடிகளுக்குக் கூடத் திரையரங்கம், குண்டூசி விழுந்தால் கூட DTS எஃபெக்ட்டில் கேட்குமளவு அமைதியைப் பேணுகிறது.

நாயகனுக்கு நாயகியைப் பிடித்துவிடுகிறது. ஒரு நள்ளிரவில் அதை நாயகன் கண்டுபிடித்து விடுகிறார். பசங்களுக்குக் காதல் (!?) வந்துவிட்டாலே அது உண்மையாகத்தான் இருக்கும்? அந்த உண்மைக் காதலை நிராகரிக்கும் உரிமை எந்தக் பெண்ணுக்கும் இல்லவே இல்லை என்ற தனது கொள்கையை மீண்டும் அழுத்தமாகச் சொல்லியுள்ளார் ராஜேஷ். இத்தகைய கொள்கையில், இயக்குநரும், ரெமோ நாயகனும், why blood same blood அளவு மிக நெருக்கமானவர்கள். ‘எனக்குத்தான் உன்னைப் பிடிச்சிடுச்சே! உனக்குப் பிடிச்சா என்ன பிடிக்கலைன்னா எனக்கென்ன?’ என்று விடலைப் பசங்களுக்குக் கொம்பு சீவி விடும் இருவர் இணைந்தால் படத்தின் கதைத்தரம் என்னவாக இருக்கும்? நல்லவேளையாகப் படம் சொதப்பிவிட்டது. இல்லையென்றால், பெண்களைப் பின்தொடர்தல் (stalking), அவர்களது குடும்பத்தைத் திட்டுதல் (verbal abuse), ‘என்ன மாதிரி பசங்களின் (vip) அருமை எல்லாம் எப்படிப் புரியும்?’ என அமெச்சூர்த்தனமாகப் பேசுவதெல்லாம் ஹீரோயிசமாகித் தொடர்ந்து அம்மாதிரி படங்கள் வந்து கழுத்தறுக்கும். இந்த ஃபார்மெட் காலாவதியாகி, பார்வையாளர்கள் தனது படங்களை நிராகரிக்கிறார்கள் என்று பட்டவர்த்தனமாய்த் தெரிந்த பின்பும், ராஜேஷ் வாழ்ந்த கெட்ட பண்ணையார் போல் இதைக் கட்டிக் கொண்டு அழுகிறார் .

‘நீங்கள் மாஸ் செய்யலாம் சிவகார்த்திகேயன். ஏன் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் எது மாஸ் என்ற புரிதல் மிகவும் அவசியம். இயல்பாய்த் தோன்ற வேண்டிய காதலை, வேட்டையாடும் மிருகம் போல் துரத்தித் துரத்தி, இம்சித்து, மன உளைச்சலுக்குத் தள்ளிப் பெறப்படுவது மாஸ் இல்லை. அயோக்கியத்தனம்.’